அரசியல்உள்நாடு

முன்பள்ளி ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு.

முன்பள்ளி ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை பாராளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்து, அது தொடர்பில் கல்வி அமைச்சு உட்பட சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் பேச்சு நடத்தப்பட்டு, உரிய தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

முன்பள்ளி ஆசிரியர்களின் சேவையைப் பாராட்டி, அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு தலவாக்கலை தமிழ் வித்தியாலயத்தில் அண்மையில் நடைபெற்றது.

முன்பள்ளி ஆசிரியர் சம்மேளனம் மற்றும் அதன் நுவரெலியா மாவட்ட கிளை என்பன இணைந்தே நிகழ்வுக்குரிய ஏற்பாடுகளை செய்திருந்தன.

நுவரெலியா, கண்டி மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் முன்பள்ளி ஆசிரியர்களாக கடமையாற்றுவர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர். அத்துடன், பாராட்டு சான்றிதழும் வழங்கிவைக்கப்பட்டன.

முன்பள்ளி ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்று இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் வே. இராதாகிருஷ்ணனிடம் கையளிக்கப்பட்டது.

தமது தொழிலில் உள்ள பாதுகாப்பு இன்மை, தொழிலுக்குரிய அங்கீகாரம் இன்மை, சம்பளப் பிரச்சினை உட்பட பல விடயங்கள் குறித்த மகஜரில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மகஜரை பெற்றுக்கொண்ட இராதாகிருஷ்ணன் எம்.பி முன்பள்ளி ஆசிரியர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

எதற்குமே அடித்தளம், ஆரம்பம் சிறப்பாக இருந்தால்தான் வெற்றிகரமாக முன்னோக்கி பயணிக்க முடியும். அந்தவகையில் முன்பள்ளி ஆசிரியர்களின் சேவைகள் போற்றுதலுக்குரியது.

அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். இது பற்றி நான் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவேன். கல்வி அமைச்சர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அரச நிறுவனங்களுடன் பேச்சு நடத்திய, உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன் என்று அவர் இதன்போது குறிப்பிட்டார்.

– எஸ்.கணேசன்

Related posts

பேரூந்து போக்குவரத்து – புதிய செயலி அறிமுகம்

நேற்று கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் கடற்படையினர்

கொழும்பின் சில வீதிகள் நீரில் மூழ்கியது