முன்னாள் ஜனாதிபதிகளின் விவகாரத்தில் அரசாங்கம் பாதாள குழுக்களை போல் சண்டித்தனமாக செயற்பட கூடாது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு உயிரச்சுறுத்தல் காணப்படுகிறது என்று புலனாய்வு பிரிவு முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் மற்றும் சலுகை தொடர்பில் ஆராய்ந்து குழுவுக்கு அறிக்கை சமர்ப்பித்த போதும் அதனை கருத்திற் கொள்ளாது அவருக்கு வழங்கப்பட்ட இராணுவ பாதுகாப்பு முழுமையாக நீக்கப்பட்டு, பாதுகாப்பு பலவீனப்படுத்தப்பட்டுள்ளது.
அரசாங்கம் இதற்கு நிச்சயம் சட்டத்தின் முன் பதிலளிக்க நேரிடும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார்.
கொழும்பில் வெள்ளிக்கிழமை (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஜனாதிபதி என்ன சொல்கிறார் என்று அமைச்சரவை உறுப்பினர்களுக்கு தெரியாது, அமைச்சர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது ஜனாதிபதிக்கு தெரியாது.
மக்கள் மத்தியில் பிரபல்யமடைவதாக குறிப்பிட்டுக் கொண்டு மனம் போனபோக்கில் பேசிக் கொள்கிறார்கள்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டுக்கு அளப்பறிய சேவையாற்றியுள்ளார். அதேபோல் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மைத்திரிபால சிறிசேன ஆகியோர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரச தலைவர்கள்.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட அரச உத்தியோகபூர்வ இல்லங்களை மீளப் பெறுவதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது.
ஒன்று வீடு வழங்கப்படும் அல்லது மாதம் 30 ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிடுகிறார். ஜனாதிபதி தனது பதவிக்கு பொருத்தமான வகையில் பேச வேண்டும்.
ஓய்வு பெற்ற முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பொருத்தமான வீடு வழங்கப்பட வேண்டும் என்று சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வீடு ஜனாதிபதி பதவி வகித்த ஒருவர் வசிக்க கூடிய வகையில் இருத்தல் வேண்டும் என்பதை அரசாங்கம் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
சட்டத்தை பற்றி போதிய அறிவு இல்லாவிடின் சட்ட நிபுணர்களிடம் அரசாங்கம் ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதிகளின் விவகாரத்தில் அரசாங்கம் பாதாள குழுக்களை போல் சண்டித்தனமாக செயற்பட கூடாது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு உயிரச்சுறுத்தல் காணப்படுகிறது என்று புலனாய்வு பிரிவு முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் மற்றும் சலுகை தொடர்பில் ஆராய்ந்த குழுவுக்கு அறிக்கை சமர்ப்பித்த போதும் அதனை கருத்திற் கொள்ளாது அவருக்கு வழங்கப்பட்ட இராணுவ பாதுகாப்பு முழுமையாக நீக்கப்பட்டு, பாதுகாப்பு பலவீனப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு அரசாங்கமும், முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமை மற்றும் சலுகைகள் தொடர்பில் ஆராய்ந்த குழுவும் பொறுப்புக் கூற வேண்டும்.
இந்த குழுவின் முழுமையான அறிக்கையை தகவலறியும் உரிமை சட்டத்தின் ஊடாக பெற்றுக் கொள்ள தீர்மானித்துள்ளோம். அதனைத் தொடர்ந்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-இராஜதுரை ஹஷான்