வகைப்படுத்தப்படாத

மீதொட்டமுல்லை குப்பை மேட்டு சரிவு தொடர்பில் ஜப்பானிய தொழில்நுட்ப குழு இன்று ஆய்வு

(UDHAYAM, COLOMBO) – மீதொட்டமுல்லை குப்பை மேட்டு சரிவு தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கை வந்துள்ள ஜப்பானிய தொழில்நுட்ப குழு இன்று குறித்த பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தவுள்ளது.

நேற்றையதினம் பிற்பகல் இந்த குழு இலங்கை வந்தது .

இந்த குழுவினர் ஏற்கனவே தங்களது முதன்மை ஆய்வை நடத்தி இருப்பதாக தேசிய கட்டிட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

வான்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தின் ஊடாக அவர்கள் தொடர்ந்தும் இன்று ஆய்வுகளை நடத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், மீதொட்டமுல்லை அனர்த்தத்தின் மீட்பு பணிகள் இன்று தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதற்காக தற்போது முப்படையைச் சேர்ந்த ஆயிரத்து நூறு பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பின் குப்பைகளை தங்களது பிரதேசத்துக்கு கொண்டுவர எதிர்ப்புத் தெரிவித்து தொம்பே மாலிகாவத்தை குப்பை சேகரிக்கும் இடத்துக்கு முன்னால் போராட்டம் நடத்தியர்களை கலைப்பதற்கு, காவற்துறையினர் நேற்று கண்ணீர்புகை பிரயோகத்தை மேற்கொண்டது.

எனினும் நேற்று நள்ளிரவு வரையிலும் போராட்டக் காரர்கள் குறித்த இடத்தில் தங்கி இருந்த எதிர்ப்பை வெளிப்படுத்தியதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் மீதொட்டமுல்லை அனர்த்தம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக, ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் தலைமையிலான குழு ஒன்றை நியமிக்கவிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்திருந்தார்.

ஊடக பிரதானிகளை நேற்று சந்தித்த வேளையில் அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

இந்த அனர்த்துக்கான உண்மையான பொறுப்பாளி யார் என்பது தொடர்பில் ஒரு மாதத்தில் அறிக்கை கோரப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

இளவரசர் வில்லியம் மற்றும் கேட் பாகிஸ்தானுக்கு விஜயம்

அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து

இலங்கை – ரஷ்ய ஜனாதிபதிகளுக்கு இடையிலான சந்திப்பு இன்று