(UTV | கொழும்பு) – சுகாதார தொழிற்சங்க சம்மேளனத்திற்கு உரித்தான, தாதியர், நிறைவுகான், இடைநிலை வைத்தியர்கள் உட்பட 17 சங்கங்கள் இணைந்து இன்றும், நாளையும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளன.
சம்பள பிரச்சினை உள்ளிட்ட தங்களது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குமாறு கோரி, இன்று காலை 8 மணிக்கு, சுகாதார தொழிற்சங்க சம்மேளனத்தினர் பணிப்புறக்கணிப்பை ஆரம்பிக்கவுள்ளனர்.
வைத்தியர்கள் தவிர்ந்த, ஏனைய அனைத்து சுகாதார உத்தியோகத்தர்களும் இந்தப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட உள்ளனர்.
கடந்த மாதம் 7ஆம் திகதி முதல், 9 நாட்களுக்கு சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டன.
இந்நிலையில், சுகாதார அமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, மார்ச் மாதம் முதலாம் திகதிக்குள் தங்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காவிட்டால், மீண்டும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்து, சுகாதார தொழிற்சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பை கைவிட்டிருந்தனர்.
எனினும், தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க, சுகாதார அதிகாரிகள் இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை என சுகாதார தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் இணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
“.. தீர்வு வழங்குவதற்காக, சுகாதார அமைச்சுக்கு 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது.
எனினும், அரசாங்கம் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் பதிலாக, அதனைக் கட்டுப்படுத்த முயற்சிக்கிறது. இது 65,000 சுகாதார உத்தியோகத்தர்களின் பிரச்சினையாகும்.
எனவே, இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு வலியுறுத்தி, இன்றும், நாளையும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட உள்ளோம்..” என ரவி குமுதேஷ் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், சிறுவர் மற்றும் மகளிர் வைத்தியசாலைகள், புற்றுநோய், மற்றும் சிறுநீரக வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் தடையின்றி சேவைகள் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு, அங்கொடை மனநல மருத்துவமனை மற்றும் மத்திய குருதி வங்கி ஆகியற்றிலும் பணிப்புறக்கணிப்பு இடம்பெற மாட்டாது என சுகாதார தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் இணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.