உலகம்

மியன்மார் மக்களுக்கு அமெரிக்கா அடைக்கலம்

(UTV | வொஷிங்டன்) – இராணுவ ஆட்சி மற்றும் வன்முறை காரணமாக நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் மியன்மார் மக்களுக்கு தற்காலிகமாக அடைக்கலம் கொடுக்க தயாராக இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

மியன்மார் நாட்டில் இராணுவ திடீரென்று புரட்சியில் ஈடுபட்டு ஆட்சியை கைப்பற்றியது. இந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட ஏராளமான தலைவர்களை கைது செய்து வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதையடுத்து அவர்கள் மீது இராணுவம் துப்பாக்கிசூடு உள்ளிட்ட தாக்குதல்களை நடத்தி வருகிறது.

ஆட்சியை கைப்பற்றிய மியன்மார் இராணுவத்துக்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதில் மியன்மார் இராணுவ தலைவர்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. மேலும் நேற்று மியன்மார் இராணுவ தளபதியின் 2 குடும்ப உறுப்பினர்கள் மீது பொருளாதார தடையை விதித்துள்ளது.

இந்நிலையில் இராணுவ ஆட்சி மற்றும் வன்முறை காரணமாக நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் மியன்மார் மக்களுக்கு தற்காலிகமாக அடைக்கலம் கொடுக்க தயாராக இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இது குறித்து அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு துறை செயலாளர் மயோர்காஸ் கூறும்போது, ‘தற்காலிக பாதுகாக்கப்பட்ட நிலை என்ற முடிவின் கீழ் மியன்மார் நாட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தற்காலிகமாக அமெரிக்காவிலேயே தங்கி இருக்க முடியும்’ எனத் தெரிவித்துள்ளார்.

 

Related posts

புதிய வகை கரோனா வைரஸ் ‘நியோகோவ்’ ஆபத்தானது

தென்கொரியாவில் உரைநிகழ்த்தவுள்ள அனுர

ஈரானிய அணு விஞ்ஞானி படுகொலை