(UTV | கொழும்பு) – மின் துண்டிப்பை அமுல்படுத்துவதா? இல்லையா என்பது தொடர்பில் இன்றைய தினம் தீர்மானிக்கப்படவுள்ளது.
நாளாந்தம் மின்சார துண்டிப்பினை அமுல்படுத்த பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு நேற்று (09) அனுமதி வழங்கியிருந்த நிலையில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது.
தமது ஆணைக்குழு வழங்கிய அனுமதிக்கு அமைவாக இன்று முதல் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மின்சார துண்டிப்பு இடம்பெறும் என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய தேவைக்கான எண்ணெய் கிடைக்காவிடத்து, நாளாந்தம் இரண்டரை மணிநேரத்திற்கு மின்சார விநியோகத்தைத் துண்டிப்பது தொடர்பில் இலங்கை மின்சார சபை அவதானம் செலுத்தியுள்ளது.
இதற்கமைய மின்சார துண்டிப்பு இடம்பெறும் நேரம் தொடர்பில் தற்போது கலந்துரையாடப்பட்டு வருகின்றது.
முற்பகல் 11 மணிமுதல் பிற்பகல் 6 மணிவரையிலான காலப்பகுதியில் ஒரு மணிநேரம் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர, பிற்பகல் 6 மணிமுதல் 9 மணி வரையிலான காலப்பகுதியில் ஒன்றரை மணிநேரம் என்ற அடிப்படையில் இரண்டு தடவைகள் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்படுகின்றது.
கனியவள கூட்டுதாபனத்திடம் இருந்து மின்னுற்பத்திக்கு தேவையான உராய்வு எண்ணெய் மற்றும் டீசல் என்பன கிடைக்காவிடத்து மின்சாரம் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபை தகவல்கள் குறிப்பிடுகின்றன.