தேசிய மின் கட்டமைப்பிலிருந்து சூரிய மின்கல சக்தி இணைப்புகளை துண்டிக்குமாறு விடுக்கப்பட்ட அறிவிப்புக்கு பலர் சாதகமாக பதிலளித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
தேசிய மின்சார அமைப்பைக் கண்காணிக்கும்போது இந்த விடயம் தெரியவந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இருப்பினும், பிறிதொரு குழு இன்னும் தேசிய மின் கட்டமைப்பிலிருந்து சூரிய மின்கல சக்தி இணைப்புகளை துண்டிக்காமல் இருப்பதாவும், எனவே குறித்த தரப்பினரும் சூரிய மின்கல சக்தி இணைப்புகளை துண்டித்து ஒத்துழைப்பு வழங்குமாறு இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது.
சில வாடிக்கையாளர்கள் இந்தக் கோரிக்கைக்கு செவிசாய்க்காமல் இருப்பது வருந்தத்தக்கது என்றும் மின்சாரசபை குறிப்பிட்டுள்ளது.
புத்தாண்டு காலத்தில் மின்சார தேவை குறைந்துள்ளதாகவும், இதன் விளைவாக, தேசிய மின்சார கட்டமைப்பிற்கு மிகவும் மாறுபடும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பங்களிப்பு தேசிய அமைப்பில் அசாதாரண அழுத்தத்தை ஏற்படுத்துவதை கருத்திற்கொண்டு இலங்கை மின்சார சபை இந்த கோரிக்கையை விடுத்திருந்தது.
அதற்கமைய, இன்று (13) தொடக்கம் ஏப்ரல் 21ஆம் திகதி வரை நாளாந்தம் பிற்பகல் 3.00 மணிவரை தேசிய மின் கட்டமைப்பிலிருந்து சூரிய மின்கல சக்தி இணைப்புகளை துண்டிக்குமாறு இலங்கை மின்சார சபை கேட்டுக்கொண்டுள்ளது.
இவ்வாறு துண்டிக்காமல் இருந்தால், அமைப்பின் செயலற்ற தன்மை வெகுவாகக் குறைந்து, அதில் ஏற்படும் மிகச் சிறிய ஏற்ற இறக்கங்கள் கூட பகுதியளவிலான மின் தடை அல்லது நாடு தழுவிய மின் தடையை ஏற்படுத்தக்கூடிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடுமெனவும் இலங்கை மின்சார சபை வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சில நுகர்வோர் சூரிய மின்கல சக்தி இணைப்புகளை அணைக்க பயப்படுவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மின்சார தேவை குறையும் போது தேசிய கட்டமைப்பிலிருந்து சூரிய மின்கல சக்தி இணைப்புகளை துண்டிப்பது இலங்கைக்கு மட்டும் உரிய விடயம் அல்ல என்றும், அவுஸ்திரேலியா போன்ற வளர்ந்த நாடுகளிலும் இது செய்யப்பட்டு வருவதாகவும் இலங்கை மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.