உள்நாடு

மின்சார சபையினரின் போராட்டத்திற்கு வலுக்கும் ஆதரவு

(UTV | கொழும்பு) –  இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், கனியவள கூட்டுத்தாபன மற்றும் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தொழிற்சங்கங்கள் இன்று (03) மதியம் 12 மணிக்குப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளன.

மின்சாரத்துறை ஊழியர்களின் போராட்டத்திற்கு மத்தியில், மின்சார விநியோகத்தடை ஏற்பட்டு, அதனைச் சீரமைப்பதற்கு முடியாமல்போனால், நீர் விநியோகத்திற்குப் பாதிப்பு ஏற்படக்கூடும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை சங்கத்தின் இணை செயலாளர் உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேநேரம், மின்சாரத்துறை ஊழியர்களின் போராட்டத்திற்கு ஆதரவளித்து, இலங்கை கனியவள கூட்டுத்தாபன ஊழியர்கள் முன்னெடுக்கவுள்ள போராட்டம், கொலன்னாவ பிரதான களஞ்சியம் மற்றும் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் என்பனவற்றுக்கு முன்னால் இன்று (03) மதியம் இடம்பெறவுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை கனியவள தொழிற்சங்க சம்மேளனத்தின் இணைப்பாளர் ஆனந்த பாலித;

“.. தொழிற்சங்க போராட்டம் காரணமாக எரிபொருள் விநியோக நடவடிக்கையில் தாமதம் ஏற்படக்கூடும். தொழிற்சங்க பலத்தையே தாங்கள் பயன்படுத்துகிறோம்.

மக்களின் கருத்துக்கு அரசாங்கம் செவிசாய்க்காவிட்டால், மக்களினதும், நாட்டினதும் இறைமையைப் பாதுகாக்க, விருப்பமின்றியேனும் நாட்டை முடக்குவதற்கு தாங்கள் பின் நிற்கப்போவதில்லை..” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், துறைமுக தொழிற்சங்கம் ஏற்பாடு செய்துள்ள போராட்டம், கொழும்பு துறைமுக அதிகார சபைக்கு முன்னால் உள்ள மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு அருகில் இடம்பெறவுள்ளதாக அகில இலங்கை துறைமுக பொது சேவையாளர் சங்கத்தின் செயலாளர் நிரோஷன் கொரகானகே தெரிவித்துள்ளார்.

“.. 13 ஏக்கர் பரப்பு துறைமுக காணியும், துறைமுக சேவை பிரிவுக்கு உரித்தான அனைத்து சேவைகளையும், சி.ஐ.சி.ரி நிறுவனத்திற்கு வழங்க அரசாங்கம் அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை முன்வைத்துள்ளது.

இந்தக் காரணத்தை மையப்படுத்தி, இன்று (03) போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். துறைமுகம் அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறெனில், துறைமுகத்தை ஏன் விற்பனை செய்கின்றீர்கள் என அரசாங்கத்திடம் வினவுகிறோம்..” அகில இலங்கை துறைமுக பொது சேவையாளர் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், துறைமுக சேவை ஊழியர்கள் தங்களின் ஒரு மணிநேர மதிய போஷண வேளையில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

வௌிநாடுகளிலிருந்து மேலும் 655 பேர் நாடு திரும்பினர்

கொரோனா தொற்றிலிருந்து 12,587 பேர் குணமடைந்தனர்

சபாநாயகருக்கு கோரிக்கை விடுத்த சுமந்திரன்!