சூடான செய்திகள் 1

மல்லாவி வைத்தியசாலையின் குறைபாடுகளைத் தீர்த்து வைக்குமாறும் கோரிக்கை!

(UTV|COLOMBO)-முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு, துணுக்காய் பிரதேசங்களில் இடம்பெற்று வரும் குற்றச்செயல்களை தடுக்கவும், கட்டுப்படுத்தவும், குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும், மல்லாவி பொலிஸாருக்கு வாகனம் ஒன்றைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அந்தப் பிரதேச பொதுமக்கள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

துணுக்காய் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், துணுக்காய் பிரதேச செயலாளர் கே.பிரபாகரனின் நெறிப்படுத்தலின் கீழ், இணைத்தலைவர்களான அமைச்சர் ரிஷாட் பதியுதீன், பிரதியமைச்சர் காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோரின் தலைமையில் நேற்று மாலை (13) பிரதேச செயலகக் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

புத்துவெட்டுவான், கொக்காவில், ஐயங்குளம் பிரதேசங்களில் இடம்பெற்று வரும் மண் அகழ்வு, கோட்டைகட்டிய குளத்தில் இயங்கி வரும் யுவ சக்தி பண்ணை விவகாரம், உயிலங்குளம் அணைக்கட்டு பிரச்சினை, கால்நடைகளுக்கான மேய்ச்சல்தரை பிரச்சினை, பாலியாறு மற்றும் வவுனிக்குளப் பிரதேசத்தில் அனுமதியின்றி இடம்பெற்று வரும் மண் அகழ்வு பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக அங்கு ஆராயப்பட்டன.

“கடந்த மூன்று வருடங்களாக இந்தப் பிரதேசங்களில் போதிய மழையின்மையால் வரட்சி நிலவி வருகின்றது. இதனால் நெல் அறுவடையில் உரிய பலன் கிடைக்காததால், எதிர்வரும் போகத்துக்கான நெற்செய்கைக்காக விதை நெல்லை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கமக்கார அமைப்புக்கள் வேண்டுகோள் விடுத்தன.

இந்த கோரிக்கைக்கு பதிலளித்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன், இது தொடர்பில் தாம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், கமக்காரர்களுக்கு முடிந்தளவு விதை நெல் வழங்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

 

“கால்நடை மேய்ச்சல்தரையில் பெரும்பாலானவை வனபரிபாலனத் திணைக்களத்துக்குச் சொந்தமானவையாக இருப்பதனால், கால்நடை வளர்ப்பாளர்கள் அவதிப்படுகின்றனர். அத்துடன், வரட்சி காரணமாக விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதனால், அவர்களில் பெரும்பாலானோர் கால்நடை வளர்ப்பிலேயே ஆர்வங்காட்டுகின்றனர். மேய்ச்சல்தரைப் பிரச்சினையால் தாம் வளர்க்கும் கால்நடைகளை அரைப்பட்டினியுடன் போடவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது” என்று கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவித்தனர்.

“மாந்தை கிழக்கு பாண்டியங்குளத்தில இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் இது தொடர்பிலும், ஏனைய பல பிரச்சினைகள் பற்றியும் விரிவாக ஆராயப்பட்டு, உயர்மட்டக் கூட்டம் ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வனபரிபாலனத் திணைக்கள உயரதிகாரிகள் உட்பட ஏனைய திணைக்களத்தின் உயரதிகாரிகளும் இதில் பங்கேற்று, காத்திரமான முடிவுகளை மேற்கொள்வர்” இவ்வாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அங்கு தெரிவித்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் கருத்து வெளியிட்ட மாகாண அமைச்சர் சிவநேசன், கால்நடை வளர்ப்பாளர்களின் பிரச்சினையைத் தீர்க்க புதிய ஆலோசனை ஒன்றை முன்வைத்தார்.

“கால்நடைகளின் உணவுப் பிரச்சினையைத் தீர்க்க புல்லை வளர்த்தல் ஒரு மாற்றுப்பரிகாரமாக உள்ளது. ஒரு ஏக்கர் நிலத்தில் சுமார் 12,000 கிலோகிராம் வரையிலான புல்லை அறுவடை செய்ய முடியும். நல்லரக பசு மாடு ஒன்று ஒருநாளைக்கு 65 கிலோகிராம் புல்லை சாப்பிடுகின்றது. ஆகவே, கால்நடை வளர்ப்பாளர்கள் புல்லை வளர்ப்பதன் மூலம், தமக்குச் சொந்தமான கால்நடைகளுக்கு  தீனியை கொடுப்பது மாத்திரமின்றி, மேலதிகமான புல்லை விற்று வருமானத்தை ஈட்ட முடியும்” என்றார்.

மல்லாவி வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பில் பொதுமக்களும், பொதுமக்கள் சார்ந்த அமைப்புக்களும் கவலை வெளியிட்டனர். அதற்குப் பதிலளித்த மல்லாவி வைத்தியசாலையின் சுகாதார வைத்திய அதிகாரி கூறியதாவது,

“மல்லாவி வைத்தியசாலையின் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவுடன் இணைந்து நோயாளர்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்கு, வார்ட்டுகள் இருக்கின்றன. எனினும், இந்த வைத்தியசாலையில் விஷேட வைத்திய நிபுணர்களோ, மயக்க மருந்தேற்றும் (Anesthesia) விஷேட வைத்திய நிபுணர்களோ (Consultant) இல்லை. அத்துடன், கதிரியக்க (X- ray) படப்பிடிப்பாளர்களும் சேவையில் இல்லை. அதனால் கதிரியக்க (x- ray) கருவியும் இல்லை. அதுமாத்திரமன்றி சத்திர சிகிச்சை கூடமும் இல்லை.

எனவே, இங்கு வரும் நோயாளர்களில் பெரும்பாலானோரை அவர்களின் நன்மை கருதி, தரமான வைத்தியசாலைக்கு அனுப்ப வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது என்று கூறியதுடன், இது தொடர்பாக அபிவிருத்திக் குழுவில் கவனஞ்செலுத்தி, இந்த வைத்தியசாலையின் குறைபாடுகளை தீர்த்துத் தருமாறு வேண்டினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் ரிஷாட், வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பான திட்டவரைபு (Master Plane) மற்றும் கோரிக்கைகள் அடங்கிய ஆவணங்களை சமர்ப்பித்தால், சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவை சந்தித்து, இந்த வைத்தியசாலையின் குறைபாடுகளைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பதாகக் குறிப்பிட்டார். இந்தப் பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகளும் இந்த விடயம் குறித்து கவனஞ்செலுத்துமாறும், ஒத்துழைப்பு வழங்குமாறும் கோரிக்கை விடுத்தார்.

கிணறுகளை ஆழப்படுத்தல், நீரைச் சுத்திகரிக்கச் செய்யும் இயந்திரம் (Water Plant) மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலையின் குறைபாடுகளைத் தீர்த்தல் ஆகியவை தொடர்பில், பொதுஅமைப்புக்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை உடனடியாகக் கருத்தில் கொண்ட அமைச்சர் ரிஷாட், தனது விஷேட நிதியிலிருந்து அவற்றுக்கான நிதியை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுத்தார்.

ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட மக்களின் சில பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக, அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் ஆலோசனையின்பேரில் சில குழுக்கள் அமைக்கப்பட்டன. கோட்டைகட்டிய குள யுவசக்தி விவகாரத்தில் அந்த நிறுவனத்துக்கும், அந்தப் பிரதேச பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள சர்ச்சையை சுமுகமாகத் தீர்த்துவைக்கும் நோக்கில், மாகாண அமைச்சர் சிவநேசன் தலைமையிலான ஒரு குழுவும், மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நாளாந்தப் போக்குவரத்துப் பிரச்சினை, வீதிகள் புனரமைப்பு ஆகியவற்றை ஆராய்ந்து தீர்வுகாண, மாகாண பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன் தலைமையில் மற்றுமொரு குழுவும் அமைக்கப்பட்டன.

யானை வேலி அமைத்தல், குரங்குத் தொல்லை தொடர்பிலும் ஆராயப்பட்டு, உரிய நடவடிக்கை எடுப்பதென முடிவு செய்யப்பட்டது.

 

-சுஐப் எம்.காசிம்-

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

மீண்டும் டெங்கு நோய் பரவும் ஆபத்து

தகவல் தொழில்நுட்பத்திற்காக நிதி ஒதுக்கீடு

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]