வகைப்படுத்தப்படாத

மலேசியாவின் புதிய மன்னராக சுல்தான் அப்துல்லா

(UTV|MALAYSIA)-மலேசியாவின் புதிய மன்னராக சுல்தான் அப்துல்லா எதிர்வரும் 31 ஆம் திகதி பதவியேற்கவுள்ளார்.

மலேசியாவில் மன்னரின் முடியாட்சியின் கீழ், கூட்டாட்சி முறையிலான அரசியல் சட்டம் அமலில் உள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மன்னர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். மன்னரின் தலைமையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர், துணைப் பிரதமர் ஆகியோர் அந்நாட்டின் ஆட்சியை நடத்தி, நிர்வகித்து வருகின்றனர்.

இந்நிலையில், மலேசியா மன்னராக கடந்த 2016 ஆம் ஆண்டு இறுதியில் பதவியேற்ற மன்னர் ஐந்தாம் சுல்தான் முஹம்மது, தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே கடந்த 6 ஆம் திகதி பதவி விலகினார்.

கடந்த ஆண்டு மருத்துவ விடுப்பில் சென்ற மன்னருக்கு, ரஷ்யத் தலைநகரான மாஸ்கோவில் ஒரு முன்னாள் மாஸ்கோ அழகியுடன் திருமணம் நடந்ததாக சமூக ஊடகங்களில் புகைப்படங்கள் வெளியாகின. இந்த தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில் மன்னரின் இராஜினாமா அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது. ஆனால், இந்த வதந்திகள் தொடர்பாக மன்னரின் அரண்மனை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

பல்லாயிரம் ஆண்டுகாலமாக இஸ்லாமிய மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்துவரும் மலேசியாவில், 9 மாநிலங்களில் அரச பரம்பரையினர் ஆட்சி செலுத்தி வருகின்றனர். இந்த மாநிலங்களில் உள்ள மன்னர் குடும்பத்தில் உள்ளவர்கள், சுழற்சி முறையில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தெரிவு செய்யப்பட்டு மன்னராக முடிசூட்டப்படுகின்றனர்.

அவ்வகையில், மன்னர் ஐந்தாம் சுல்தான் முஹம்மது பதவி விலகியதைத் தொடர்ந்து, அடுத்த மன்னரைத் தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறை இன்று தொடங்கியது. இதற்காக நடைபெற்ற சிறப்புக்கூட்டத்தில், சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹமது ஷா, புதிய மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் நாட்டின் 16 ஆவது மன்னர் ஆவார்.

விளையாட்டில் அதீத ஆர்வம் கொண்ட சுல்தான் அப்துல்லா, உலகக் கால்பந்து அமைப்பான FIFA உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு அமைப்புகளில் பொறுப்பு வகித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர்களை இலங்கைக்கு அழைப்பு

மட்டக்களப்பில் தீவிரமாக பரவி வரும் டெங்கு

நிகோபார் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்