அரசியல்உள்நாடு

மற்றுமொரு பொருளாதார சுனாமியை நாம் எதிர்நோக்கி வருகிறோம் – சஜித் பிரேமதாச எச்சரிக்கை

2022 ஆம் ஆண்டு நாடு வங்குரோத்தடைந்த நிலையால் ஏற்பட்ட பொருளாதார சுனாமியை நாடாக நாம் எதிர்கொண்டோம். அதைவிடப் பாரதூரமான பொருளாதார சுனாமி தற்போது ஏற்படப் போகிறது.

அன்று உருவெடுத்த வரிசை யுகத்தினால் அமைதியின்மை, இடர்பாடுகள் போன்றவற்றால் மக்கள் பல இன்னல்களை அனுபவித்தனர். இம்முறை அதைவிடப் பாரதூரமான ஆபத்தான பொருளாதார நிலைமை உருவெடுத்துள்ளது.

டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியினது அரசாங்கம் நமது நாட்டின் ஏற்றுமதிகள் மீது 44% பரஸ்பர வரி விதித்துள்ளது. நமது நாடு அமெரிக்க இறக்குமதிப் பொருட்களுக்கு 88% வரி விதித்தமையே இதற்கு காரணமாகும்.

இந்தப் பிரச்சினையால், அமெரிக்காவுக்காவுக்கான நமது நாட்டின் ஏற்றுமதியும், அந்த ஏற்றுமதியை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளும் கடும் சிக்கலை எதிர்கொள்கின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த வரி விதிப்பால் நமது நாட்டுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும். நமது நாட்டின் 40% ஆடைகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகின்றன. இது தடைபடலாம்.

இந்த வரி ஏப்ரல் 9 ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது. இந்த வரி உலகின் பல நாடுகளுக்கும் விதிக்கப்பட்டுள்ளன.

இந்தப் பிரச்சினை ஏற்படுவதற்குப் பல மாதங்களுக்கு முன்னரே அரசாங்கத்திடம் இது குறித்து சுட்டிக்காட்டியிருந்தோம்.

இலங்கை அரசாங்கம் சர்வதேச வர்த்தகத் துறையைப் பற்றி நன்கு அறிந்த ஒரு குழுவை வொஷிங்டனுக்கு அனுப்பி உரிய தரப்புகளுடன் கலந்துரையாடலை முன்னெடுக்குமாறு நாம் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்தோம்.

ஆனால் அரசாங்கம் இதனை புறக்கணித்து, ஆணவம் காட்டி வருகிறது என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இந்த வரி விதிப்பால் நமது நாட்டின் ஆடைத் தொழில் ஏற்றுமதியில் 40% அமெரிக்கச் சந்தை வாய்ப்பை இழக்க நேரிடும். இதனால், தொழிற்சாலைகளில் உற்பத்திகள் குறைவடையும்.

தொழிற்சாலைகளில் பணிபுரியும் பல தொழிலாளர்களுக்கு தமது தொழில்களும் இல்லாது போகலாம். அந்நியச் செலாவணி குறைந்து, பொருளாதார வளர்ச்சி விகிதத்தை கடுமையாகப் பாதிக்கும்.

இதனால் 2028 ஆம் ஆண்டு முதல் மீண்டும் கடனை செலுத்துவதில் சிக்கல் ஏற்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

புத்தளம் வென்னப்புவ பிரதேசத்தில் இன்று (06) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

2033 ஆம் ஆண்டு முதல் கடனை செலுத்துமாறு சர்வதேச நாணய நிதியம் கோரியிருந்த வேளையில், இல்லை நாம் 2028 ஆம் ஆண்டிலிருந்தே கடனை செலுத்துகிறோம் என முன்னைய அரசாங்கம் தீர்மானித்தது.

முன்னைய அரசாங்கம் முற்றிலும் தவறு செய்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாம் இவற்றை சுட்டிக்காட்டி எதிர்வு கூறியபோது எம்மை பார்த்து ஆளுந்தரப்பினர் பரிகசித்தனர். நாம் சொன்னதை செய்திருந்தால் இன்று இந்த நிலை வந்திருக்காது.

ஐக்கிய மக்கள் சக்தி சொன்னதைச் செய்திருந்தால், குறைந்தபட்சம் ஒரு ஆரம்ப மட்ட கலந்துரையாடலையாவது இதுவரையில் நடத்தியிருக்கலாம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இப்போது மாற்றுத் திட்டத்துடன் அமெரிக்காவுக்கு தூதுக்குழுவை அனுப்ப வேண்டும்.

இதனால் பாதிக்கப்படும் ஆசிய பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளுடன் சேர்ந்து, பொதுவான ஒப்பந்தத்தின் கீழ் உலக வர்த்தக ஸ்தாபனத்துடன் இணைந்து ஏதாவது திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி இது தொடர்பில் நாட்டுக்குள் பொதுவான ஒருமித்த கருத்தை எட்ட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மேலும், நமது நாட்டின் ஏற்றுமதி சந்தையை ஏனைய நாடுகளுக்கு விரிவுபடுத்த வேண்டும்.

ஏற்றுமதியாளர்களுக்கு பலம் தரும் பிரத்தியேக நிதியமொன்றை நிறுவி, பசுமைப் பொருளாதாரத்தை நோக்கி பயணிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

வாக்குறுதியளித்த எரிபொருள் மானியம், எண்ணெய் மானியம், விவசாயிகளுக்கான உர மானியம் என்பனவற்றை அரசாங்கம் இதுவரையில் வழங்கவில்லை.

நமது நாட்டிற்கு பணம் அனுப்பும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான தெளிவான திட்டமொன்றும் முன்னெடுக்கப்படுவதாக தெரியவில்லை. அவர்களின் வாக்குகளைப் பெற்றனர்.

ஆனால் அவர்களுக்கான நலன்பேணும் திட்டங்கள் இல்லை. அதுமட்டுமின்றி, நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினர் மீது மார்ச் 31 க்குப் பிறகு மீண்டும் பராட்டே சட்டத்தை அமுல்படுத்தப்போகின்றனர்.

முப்பெரும் அனர்த்தங்களுக்கு முகம் கொடுத்த இந்த தொழில்முயற்சியாளர்களின் வியாபார தலங்கள், சொத்துக்கள், நிறுவனங்கள் மீண்டும் ஏலத்தில் விடப்பட போகிறன.

ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ச்சியாக இந்த சட்டத்தை இடைநிறுத்துவதற்கு நிர்பந்தித்தது. இதன் பயனாக கடந்த அரசாங்கமும் தற்போதைய அரசாங்கமும் தற்காலிகமாக இந்த பராட்டே சட்டத்தை இடைநிறுத்திய போதிலும், இந்த வியாபார முயற்சிகளை கட்டியெழுப்ப இரண்டு அரசாங்கங்களும் எந்த சலுகைகளையும் இவர்களுக்கு வழங்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

Related posts

ஆப்கானிஸ்தான் நிதியமைச்சர் மற்றும் ஜனாதிபதி இடையே சந்திப்பு

ஊடகவியலாளர் எக்னெலிகொட வழக்கு : 9 இராணுவ புலனாய்வு அதிகாரிகளின் பிணை இடைநிறுத்தம்

ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டாம் – பிரதமர்