அரசியல்உள்நாடு

மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகள் இல்லை – வெறும் பேச்சு, பொய்களால் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் – சஜித் பிரேமதாச

ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம் அரசாங்கத்திடம் இல்லாவிட்டாலும், நாட்டின் மின்சார உற்பத்தியில் டீசல் மின் உற்பத்தி நிலையம் மற்றும் அனல் மின் நிலைய மாபியாக்களுக்கு முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

காற்று, சூரிய ஒளி மற்றும் நீர் ஆகியவற்றைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் விலை குறைவாக இருந்தாலும், புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு அரசு கட்டுப்பாடுகளை விதித்து, டீசல் மற்றும் அனல் மின்சாரம் பயன்பெறும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

சதிகாரர்களால் மின்சாரத்துறை கையகப்படுத்தப்பட்டுள்ளது. மின்சாரத்தை அதிக விலைக்கு பாவனையாளர்களுக்கு வழங்கும் மாபியாக்களிடம் மின்சாரத்துறை கையளிக்கப்பட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு முன்னுரிமை வழங்குவோம் என மேடைக்கு மேடை பிரஸ்தாபித்த அரசாங்கம் தற்போது எரிபொருள் மற்றும் அனல் மின் நிலைய மாபியாக்களின் அடிமைகளாக மாறியுள்ளது.

அரசாங்கம் இவ்வாறு செயற்பட்டாலும் ஐக்கிய மக்கள் சக்தி புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை இலக்காக் கொண்டு, நீர்கொழும்பு தேர்தல் தொகுதிக்குட்பட்ட பல்லன்சேன பிரதேச மக்களை தெளிவூட்டும் வகையில் இன்று (14) நடைபெற்ற வட்டார மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

இன்று மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடுகளும் ஏற்பட்டுள்ளன.

சுகாதாரம் என்பது சேவையல்ல, அது மனித உரிமையும், அடிப்படை உரிமையுமாகும். இலவச மருத்துவம் என்ற மக்களின் மனித உரிமையைக் கூட அரசாங்கம் மீறியுள்ளது.

இன்று அரச மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகள் இல்லை. இலவச மருத்துவ சேவை காணப்படும் மருத்துவமனைகளில் மருந்துகள் இல்லாமையினால் உயிர்காக்கும் மருந்துகளை கூட தனியார் மருந்தகங்களில் வாங்கும் நிலைக்கு இன்று நாடு வந்துள்ளது.

இந்தப் பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடம் பதில் இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இன்று நாட்டு மக்கள் மிகுந்த சிரமத்திலும் துன்பத்திலும் வாழ்ந்து வருகின்றனர்.

வருமான மூலங்கள் வீழ்ச்சியடைந்து, வாழ்வாதாரங்கள் வீழ்ச்சியடைந்து, வருமானம் கூட குறைந்துள்ள இவ்வேளையில், பொருட்களின் விலைகளும், வாழ்க்கைச் செலவுகளும் வேகமாக அதிகரித்து வருகின்றன.

வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் மக்கள் தமது பிள்ளைகளுக்கு கல்வியை வழங்கக்கூட முடியாத நிலை உருவாகி வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஜே.வி.பி தேர்தல் காலத்தில் நல்ல வருமானத்தைப் பெற்றுத் தந்து, பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வோம் என வாக்குறுதி அளித்தது.

ஆனால் இன்று வறுமை அதிகரித்து வருகின்றன. மேடைகளில் மக்களுக்காக கோஷங்கள் எழுப்பினாலுர், ஆட்சிக்கு வந்த பிறகு அதன் பிரகாரம் செயல்படத் தவறியுள்ளனர்.

வெறும் பேச்சு, பொய்களால் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

வறுமையை அதிகரிக்கச் செய்து, நிவாரணங்களை குறைக்கும் நடவடிக்கையையே தற்போதைய அரசாங்கம் செய்து வருகிறது. அரச ஊழியர்களினது சம்பளத்தை ரூ. 20,000 ஆல் அதிகரிப்போம் என சொன்னார்கள்.

அதுவும் நடக்கவில்லை. ஒவ்வொரு 6 மாதத்திற்கு ஒருமுறையும் சம்பளத்தை அதிகரித்துத் தருவோம் என்றனர். அதுவும் நடந்தபாடில்லை. ஆகவே இந்த அரசாங்கம் மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றியே வருகிறது.

தெளிவான அதிகாரம் கிடைத்தும் மக்கள் செய்தது ஒன்றுமில்லை. திறம்பட ஆட்சி நிர்வாகத்தை முன்னெடுக்கவே மக்கள் தெளிவான அதிகாரத்தை வழங்கினர்.

ஆனால் அரசாங்கமானது இன்னும் கடந்த காலத்தின் மீது பழியைப் போட்டு தமது இயலாமையை மறைத்து, மக்களை ஏமாற்றி வருகிறது. எனவே எதிர்வரும் தேர்தலில் இந்த அரசாங்கத்திற்கு ஜனநாயக ரீதியாக சரியான பாடம் புகட்ட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Related posts

லக்ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் திடீர் உத்தரவு

கொழும்பின் சில பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்

இலங்கைக்கு வாக்குறுதி வழங்கிய சீன ஜனாதிபதி!