சூடான செய்திகள் 1

மன்னார் மாவட்டத்தின் பல்வேறு பிரச்சினைகள் பிரதமரின் தலைமையிலான மீளாய்வுக்கூட்டத்தில் ஆராய்வு!

(UTV|COLOMBO)-மன்னார் மாவட்டத்திலுள்ள  சிலாவத்துறை கடற்படை முகாமை அகற்றல் ,  முள்ளிக்குளம் கிராம மக்களின் பூர்வீக காணிகள் கடற்படையினரால் இன்னும் விடுவிக்கபடாமை மற்றும் வன பரிபாலன திணைக்களத்தினால் சுவீகரிக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களின் காணிப்பிரச்சினை தீர்க்கப்படாமல் தொடர்ந்தும் இழுபறி நிலையிலேயே  இருந்து வருவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

மன்னார் மாவட்ட செயலகத்தில் இன்று மாலை (15) பிரதமர் தலைமையில் இடம்பெற்ற “மாவட்ட அபிவிருத்தி தொடர்பான மீளாய்வு கூட்டத்தின்” போதே மக்கள் எதிர் கொள்ளும்  பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

சிலாவத்துறை இராணுவ முகாமின் ஒருபகுதியை விடுவிப்பதாக ஏற்கனவே இணக்கம் தெரிவிக்கப்பட்டது. வட மாகாணத்தின் பிரதான நகரமான சிலாவத்துறை நகரத்தில் மக்கள் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்ட கடற்படை முகாம் நீண்டகாலமாக அகற்றப்படாமல்   இருப்பதால் அந்த பிரதேசத்தில் வாழ் பவர்களின் அன்றாட வாழ்வு பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. நாங்கள் தொடர்ச்சியாக விடுத்த கோரிக்கைகளின் பின்னர், மக்களுக்குச்சொந்தமான காணிகளில் 6 ஏக்கர்  88 பேர்ச்சினை விடுவிப்பதற்கு பிரதேச செயலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளபோதும்  இன்னும் அவ்வாறு  நடை பெறவில்லை என்றும்  அமைச்சர் தெரிவித்தார். இந்த கடற்படை முகாமை அகற்றி வேறு இடத்திற்கு மாற்ற முடியுமா? என்பது பற்றியும் அரசு சிந்திக்க வேண்டுமெனவும்  அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.

அத்துடன் கிறிஸ்தவ மக்களின் பாரம்பரிய பிரதேசமான முள்ளிக்குளம்  கிராமத்தில்  அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதிக்குள் நான்கு குளங்கள் உள்ளன. அதனை புனரமைத்தால் ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் நன்மையடையும்.

மன்னார் மாவட்டத்தின் பல்லாயிரக்கணக்கான காணிகளை வன வளத்திணைக்களம் வர்த்தமானியின்  மூலம்  ஜி.பி.எஸ். ஐ பயன்படுத்தி சுவீகரித்துள்ளது. 1990 ஆம் ஆண்டு இந்த பிரதேசத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் விவசாயம்  மற்றும் குடிநிலக்காணிகள் கபளீகரம் செய்யப்பட்டுள்ளதனால் மீள் குடியேற வரும் மக்கள் பல்வேறு கஷ்டங்களை எதிர் நோக்கி உள்ளனர். பிரதமர் இந்த விடயங்களில் தலையிட்டு  தமது அதிகாரங்களை பயன்படுத்தி  இந்த காணிகளை மக்களுக்கு  மீட்டுக்கொடுக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதுமாத்திரமன்றி மீன்பிடி, சுற்றுலாத்துறை போன்றவற்றிலும்  வன வளத்திணைக்களத்தின் கெடுபிடி அதிகமாக உள்ளதால் மக்கள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி உள்ளனர்.என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மல்வத்து ஓயா  திட்டம் தொடர்பில் நீண்டகாலமாக பேசப்பட்டு வருகின்ற போதும்  இன்னும் இந்த மாவட்டத்திற்கு அந்த நீர்த்திட்டம் கொண்டு வரப்படவில்லை. அனுராதபுரம் பகுதிக்கு இந்த திட்டத்தை திசை திருப்ப போவதாக கூறப்படுகின்றது. அவ்வாறு இடம்பெற்றால் இந்திய காவேரி பிரச்சினை போன்று இன்னுமொரு பிரச்சினை உருவாகுமென அமைச்சர் ரிஷாட் தெரிவித்த போது,  அங்கு பிரசன்னமாகி இருந்த அமைச்சர் ஹரிசன், மல்வத்து ஓயா  திட்டம் பழைய முறையிலேயே நடைமுறைப்படுத்தப்படுமென உறுதியளித்தார்.

அத்துடன் புத்தளம் – மன்னார் பாதையான இலவன்குள  பாதை திறக்கப்பட்டால்  கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் பருத்தித்துறை வரையான பயணத்தை இலகுவாக்க முடியுமென சுட்டிக்காட்டிய அமைச்சர் ரிஷாட் பதியுதீன், இந்த பாதை நீதிமன்றத்தில் வழக்கிலிருப்பதாகவும்  அதனை சமரசமாக தீர்த்துவைக்க  பிரதமர் உதவுமாறும்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தலைமன்னார் பியர் பகுதியை  அபிவிருத்தி செய்வதன் மூலம் மன்னாருக்கும் – இராமேஸ்வரத்திற்கும் இடையிலான கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிக்குமாறு அமைச்சர் ரிஷாட் விடுத்த வேண்டு கோளை ஏற்று அதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர் சாகல ரத்னாயக்கவிடம் பிரதமர்  வேண்டிக்கொண்டார்.

மாந்தை மேற்கு பிரதேசத்தில் திறந்த மிருக காட்சிசாலை ஒன்றை அமைக்கும் யோசனையையும் அமைச்சர் முன்வைத்தார்.

சுகாதார விடயங்கள்  தொடர்பிளான  மீளாய்வு இடம்பெற்ற போது ,  அமைச்சர் ரிஷாட் பதியுதீன் , பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் மன்னார் மக்களின் வைத்திய பிரச்சினைகளை   எடுத்துரைத்தனர்.

“வடமாகாணத்தில் ஏனைய மாவட்டங்களை போலன்றி,  மன்னார் மாவட்டமானது  வைத்திய வசதியில்  பின்தங்கிய நிலையில் இருக்கின்றது. மாகாண சுகாதார திணைக்கள அதிகாரிகளின் பார்வை இந்த மாவட்டத்தில் மிகவும் அரிதாகவே இருக்கின்றது. வைத்தியர்கள் மிகவும் குறைவு, மருத்துவ வசதிகள் இல்லை, முறையான விபத்து சேவைப்பிரிவும் இல்லை. மன்னார்  நகரிலிருந்து மிகவும் தூர இடங்களான இரணை இலுப்பைக்குளம், பண்டி விரிச்சான்  மறிச்சிக்கட்டி ஆகிய மருத்துவமனைகளுக்கு வைத்தியர்கள்  இல்லை , போக்குவரத்து வசதிகளும் இல்லை” என்று அமைச்சர் ரிஷாட் இங்கு சுட்டிக்காட்டினார்.

மன்னார் வைத்திய சாலை 150 வருடங்களுக்கு மேலான பழைமை வாய்ந்த வைத்தியசாலை எனவும் கட்டிட வசதிகளோ சிறந்த வெளி நோயாளர் பிரிவோ இல்லை என மாவட்ட சுகாதார அதிகாரி ஒருவர் அங்கு குறிப்பிட்டார். இந்த விடயங்களில் கரிசனை செலுத்துவதாக தெரிவித்த பிரதமர், மன்னாரின் அனைத்து துறையின் அபிவிருத்தியிலும் தீவிர கவனம் செலுத்தப்படுமென உறுதியளித்தார்.

மன்னார் கட்டுக்கரைக்குள புனரமைப்பு , கட்டுக்கரை குளத்திற்கு அணித்தான மேய்ச்சல் தரை பிரச்சினை , வெள்ளாங்குளம் , கூராய்க்குளம் புனரமைப்பு , வியாயடிக்குளத்திலிருந்து நீரை பெற்றுக்கொள்ளல்  போன்ற நீர்ப்பாசன திட்டங்களை துரிதப்படுத்த வேண்டுமென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தினார்.

மன்னார் பிரதேச சபை தலைவர் முஜாஹிர் , முசலி பிரதேச சபை தலைவர் சுபியான் ஆகியோரும் தத்தமது பிரதேசங்களில் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

சுற்றுலா துறை, மீன் வளர்ப்பு ,மீன்பிடித்தல், ஆகியவற்றில் காணப்படும் முட்டுக்கட்டைகளும் மக்கள் பிரதிநிதிகளால்  பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டன.

இந்த நிகழ்வில் அமைச்சர்களான  வஜிர அபேவர்தன, பி. ஹரிசன்,  இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன்  ,பாராளுமன்ற உறுப்பினர்களான  செல்வம் அடைக்கலநாதன் , சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மோகன் தாஸ், பிரதேச சபை தவிசாளர்கள் , பிரதேச சபை உறுப்பினர்கள்  என பலர் கலந்துக்கொண்டனர்.

 

 

-ஊடகப்பிரிவு-

Related posts

சுற்றாடலுக்கு ஏற்றவகையில் அமைக்கப்படவுள்ள தொழிற்சாலைகள்-அமைச்சர் ரிஷாத்

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 321 ஆக உயர்வு

நாளை மீண்டும் திறக்கப்படும் சுதந்திரக் கட்சி தலைமையகம்