சூடான செய்திகள் 1

மன்னார் உள்ளூராட்சி சபைகளின் வெற்றியின் பின்னர் அமைச்சர் ரிஷாட் மகிழ்ச்சி!

(UTV|COLOMBO)-உள்ளூராட்சித் தேர்தலில் மக்களின் அதிகபட்ச ஆணையைப் பெற்ற கட்சிகளை அந்தந்த சபைகளில் அதிகாரத்தில் அமர்த்த, கட்சி, இன பேதங்களுக்கு அப்பால் முன்வருமாறு நாம் விடுத்த பகிரங்க அழைப்புக்கு மாற்றமாக, எமது கட்சியான மக்கள் காங்கிரஸை  ஆட்சி அதிகாரத்துக்கு வராமல் தடுக்க வேண்டுமென்ற நோக்கில் சிலர் செயற்பட்ட போதும், இறைவனின் உதவியால் அவற்றை முறியடித்து, மன்னார் மாவட்டத்தில் மூன்று சபைகளை கைப்பற்றியுள்ளோம் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

இன்று (12) நண்பகல் மன்னார் ஆகாஷ் ஹோட்டலில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் மாநாட்டில் முசலிப் பிரதேச சபைத் தவிசாளர் சுபியான், மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர், மாந்தை மேற்குப் பிரதேச சபையின் தவிசாளர் செல்லத்தம்பு, முசலிப் பிரதேச சபையின் உபதவிசாளர் ரைசுதீன் உட்பட அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் ரிப்கான் பதியுதீன் மற்றும் மக்கள் காங்கிரஸின் உள்ளூராட்சி உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

அமைச்சர் இங்கு கூறியதாவது,

மக்கள் காங்கிரஸை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டுமென்று பல்வேறு கூட்டுச்சதிகளும், சூழ்ச்சிகளும் இடம்பெற்ற போதும், அத்தனை சவால்களையும் முறியடித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், மன்னார் மாவட்டத்தின் மூன்று சபைகளில் ஆட்சி அதிகாரத்தை தம் வசமாக்கியுள்ளது. மன்னார் மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை சீர்குலைந்திருக்கும் மக்களை, அழிவுப் பாதையிலிருந்து மீட்டெடுப்பதற்கு உதவுமாறு, எமது கட்சி விடுத்த வேண்டுகோளை ஏற்று இன, மத பேதமின்றி வாக்களித்த மக்களுக்கும், எமது வெற்றிக்கு உதவிய நடுநிலை ஊடகவியலாளர்களுக்கும் நாம் நன்றியை வெளிப்படுத்துகின்றோம்.

அத்துடன் மன்னார் பிரதேச சபையில் ஆட்சியமைக்க எமக்கு ஒத்துழைப்பு வழங்கிய ஈபிடிபி மற்றும் பிரதித் தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட இஸ்ஸதீன், முசலிப் பிரதேச சபையில் எமது கட்சிக்கு சார்பாக வாக்களித்த கொண்டச்சி உறுப்பினர் மக்பூல், பொற்கேணி உறுப்பினர் துல்பிகார் ஆகியோருக்கும், மாந்தை மேற்கு பிரதேச சபையில் ஆட்சியமைக்க எமக்கு ஒத்துழைப்பு வழங்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் மற்றும் பிரதித் தவிசாளர் தௌபீக் உட்பட உறுப்பினர்களுக்கும் நாம் நன்றி கூறுகின்றோம்.

எமது ஆளுகைக்கு உட்பட்ட பிரதேச சபைகளின் தவிசாளர்கள் மற்றும் பிரதித் தவிசாளர்கள் மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாகவும், கடமையுணர்வுடனும் செயற்படுவார்கள் என்று நான் திடமாக நம்புகின்றேன். அத்துடன் அவர்கள் திட்டமிட்டு மக்கள் பணியாற்றுவார்கள் என்ற நம்பிக்கையும் எனக்கிருக்கின்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸை பொறுத்தவரையில் இன, மத பேதமின்றி பணியாற்றி வருவதில் நாம் முன்னுதாரணமாக செயற்பட்டிருக்கின்றோம். செயற்பட்டு வருகின்றோம். அந்தவகையில், மாந்தை மேற்குப் பிரதேசத்தில் இரண்டு வட்டாரங்களைக் கொண்ட, விடத்தல்தீவு கிராமத்தில் தெரிவு செய்யப்பட்ட இருவரும் முஸ்லிம்களாக இருந்த போதும், அந்த வட்டாரத்தில் வெற்றிபெற்ற சகோதரர் சனூஸ் தனது உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்து, அந்தக் கிராமத்தின் கிறிஸ்தவ வேட்பாளர் ஒருவருக்கு, நாம் முன்னர் வாக்குறுதி அளித்தபடி தனது உறுப்பினர் பதவியை விட்டுக்கொடுத்துள்ளார். பதவிகளுக்கும், பல்வேறு சலுகைகளுக்கும் ஆசைப்படும் தற்போதைய காலகட்டத்தில் சகோதரர் சனூசின் இந்த முன்மாதிரியான நடவடிக்கை, கட்சிக்கு அவர் வழங்கிய கௌரவமாகவும், தலைவர் மீது கொண்ட அன்பையும் வெளிப்படுத்துகின்றது.

அதேபோன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைக்க உதவுமாறு அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர்.சிவமோகன் எம்மிடம் விடுத்த வேண்டுகோளை ஏற்று, மக்கள் ஆணைக்கு மதிப்பளித்து ஆட்சியமைக்க உதவியுள்ளோம். யாழ்ப்பாண மாநகர சபையில் எமக்கு கிடைத்த ஓர் ஆசனத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைக்க உதவினோம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த மாந்தை மேற்கு பிரதேச சபை தவிசாளர் செல்லத்தம்பு கூறியதாவது,

அமைச்சர் ரிஷாட்டின் நேரடி வழிகாட்டலில் மாந்தை மேற்கில் பலத்த எதிர்ப்புக்களுக்கு மத்தியில் 13 வட்டாரங்களில், நாம் 11 வட்டாரங்களை கைப்பற்றினோம். இருந்த போதும், போனஸ் ஆசன முறையின் காரணமாக, ஆட்சியமைப்பதில் எமக்குத் தடங்கல்கள் ஏற்பட்ட போதும், அதனையும் தாண்டி பிரதேச சபையை நாம் கைப்பற்றி இருக்கின்றோம். இரக்கமும், அன்பும் படைத்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கட்சியையும், எம்மையும் செவ்வையாக வழிநடாத்தி வருகின்றார்.

மனிதநேயமிக்க மக்கள் கட்சியாக இதனை முன்னெடுத்து, புதிய பரிணாமம் படைப்போம். அமைச்சரின் ஆலோசனைகளை கருத்திற்கெடுத்து யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது பிரதேசத்தை கட்டியெழுப்ப திடசங்கற்பம் கொண்டுள்ளோம் என்று கூறினார்.

இந்த சந்திப்பின் போது, மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர், முசலிப் பிரதேச சபை தவிசாளர் சுபியான், முசலிப் பிரதேச சபை பிரதித் தவிசாளர் ரைசுதீனும் தமது கருத்துக்களைத் தெரிவித்தனர்.

விடத்தல்தீவு வட்டாரத்தில் வெற்றிபெற்ற சனூஸ், அதே வட்டாரத்தின் போனஸ் வேட்பாளாரான பேர்டினன்ஸ் அவர்களுக்கு தமது உறுப்பினர் பதவியை கையளிப்பதற்கான கடிதங்களும் அமைச்சர் முன்னிலையில் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

தல அஜித்திற்க்கு ஓவியம் மூலம் வாழ்த்து கூறிய இலங்கை பெண்

மாத்தறை – பெலியத்த ரயில் சேவையானது இன்னும் 04 மாதங்களில்

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் தமது குடிமக்களுக்கு அமெரிக்கா இரண்டாம் நிலை எச்சரிக்கை