உள்நாடு

“மனித குலத்தை போற்றும் ஒரு சந்தர்ப்பமாகவும் இந்த ஈதுல் அல்ஹா பெருநாளைக் கருதலாம்” ஹஜ் வாழ்த்தில் சஜித் பிரேமதாஸா

உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களின் மிக முக்கியமான கலாச்சார மற்றும் மதப் பண்டிகையாகக் கருதப்படும் ஈதுல் அல்ஹா பெருநாளை முன்னிட்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளும் இத் தருணத்தில் அதன் முக்கிய விழுமியங்களைப் பற்றி நினைவில் கொள்வது சாலச்சிறந்தது என உணர்கின்றேன்.

வரலாற்றின் தொடக்கத்திலிருந்தே, மக்கள் பல்வேறு மத தியாகங்களுக்காக கூட்டாக கூடினர், அதில் தங்கள் சொந்த மதத்துடன் தொடர்புடைய மரபுகள் பாதுகாக்கப்பட்டு அவற்றுக்கிடையே தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டனர். இஸ்லாத்தில் புனிய ஹஜ் யாத்திரையும் அவ்வாறானதொன்றாகும்.

இஸ்லாத்தின் ஐந்து பெரும் கடமைகளில் ஐந்தாவது கடமையாகக் கருதப்படும் ஹஜ் யாத்திரை இறைவன் மீதான பக்தி மற்றும் நம்பிக்கையை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துவதாகும். அந்த நம்பிக்கையின் காரணமாக, உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான இஸ்லாமியர்கள் ஒரே நோக்கத்துடன் ஒரே நேரத்தில் புனித மக்காவில் ஒன்று கூடி, மனிதகுலத்தின் எதிர்பார்ப்பான சகோதரத்துவ கூட்டு மதிப்பைப் போற்றுகிறார்கள்.

மேலும் இஸ்லாத்தின் தத்துவத்தின் அடிப்படையில் மனித குலத்தை போற்றும் ஒரு சந்தர்ப்பமாகவும் இந்த ஈதுல் அல்ஹா பெருநாளைக் கருதலாம். இது சமூக நல்லிணக்கத்தின் பெருமையை உலகிற்கு எடுத்துரைக்கும் ஒரு முக்கியமானதும் தனித்துவமானதுமான தியாகத் திருநாளாகும்.

மதத்தின் மூலம், மனித சமுதாயம் மனித நேயத்தால் முழுமையடைந்து நல்ல சமுதாயத்தை உருவாக்கும் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு மதத்திலும் கலாச்சாரத்திலும் நடக்கும் இத்தகைய கொண்டாட்டங்கள் மூலம் அந்த நல்ல நோக்கம் நினைவுகூறப்படுகின்றது.

எனவே, பல்வேறு பேதங்கள் மூலம் மனித இனத்திற்கிடையே மோதல்களை உருவாக்குவதற்குப் பதிலாக, பரஸ்பரம் ஒன்றுக்கொன்று தொடர்புடையவர்களாகவும் சகோதர வாஞ்சையுடன் நேசிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் இது நமக்கு சுட்டிக் காட்டுகிறது.

வங்குரோத்தாகியுள்ள நம் நாட்டிற்கும் இது ஒரு சிறந்த உதாரணமாக நான் பார்க்கிறேன். இனம், மதம், சாதி, குலம், கட்சி, அந்தஸ்து என்ற பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்பும் பணிகளில் ஈடுபட்டு நமது நாட்டை உலகில் முதலாவது இடத்துக்கு கொண்டு செல்லும் பயணத்திற்கு நாம் ஒத்துழைப்பு வழங்குவோம். அதற்காக அனைவரும் ஒரே புரிந்துணர்வுடன் இந்த தியாகத் திருநாளான ஈதுல் அல்ஹா பெருநாளை சகோதரத்துவத்துடன் கொண்டாடுவோம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

சஜித் பிரேமதாச

இலங்கைப் பாராளுமன்றத்தின்
எதிர்க்கட்சித் தலைவர்

Related posts

இடைக்கால அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு

சந்தைகளில் அதிக விலையேறியூள்ள மரக்கறிகள் பொருட்கள் தொடர்பில் செய்தியாளர் சந்திப்பு [VIDEO]

ஸ்புட்னிக் V தடுப்பூசியின் 2ம் செலுத்துகை நடவடிக்கை இன்று முதல்