உள்நாடு

மட்டக்களப்பில் இளைஞர் சடலமாக மீட்கப்பட்டதால் பதற்றம்

மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்மந்தனாவெளி பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், பொலிஸாருக்கு எதிராக பொது மக்கள் ஒன்று திரண்டதால் அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டது.

வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்மந்தனாவெளி பகுதியில் உள்ள வயல் பகுதியில் உள்ள குழியொன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று கண்டுபிடிக்கப்பட்டது.

நேற்றைய தினம் இரவு 8.30 மணியளவில் அம்மந்தனாவெளி பகுதியில் பொலிஸார் இருவரை கைது செய்யமுற்பட்ட போது, அதில் ஒருவர் தப்பியோடியதாகவும், தப்பியோடிய நபரே இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த இளைஞன் தப்பியோடிய நிலையில், குழிக்குள் வீழ்ந்து இறந்திருக்கலாம் என பொலிஸார் தரப்பில் கூறப்பட்​டுள்ள போதிலும், குறித்த இளைஞன் பிடிக்கப்பட்டு அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று பொது மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில், குறித்த சம்பவம் பொலிஸாரினாலேயே ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறி பொதுமக்கள் போராட்டத்தினை நடாத்த முற்பட்ட நிலையில், அப்பகுதிக்கு விசேட அதிரடிப்படையினரும், பொலிஸாரும் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இதன்போது சம்பவ இடத்திற்கு வருகை தந்த நீதிபதி மரண விசாரணையினை முன்னெடுத்ததுடன், சடலத்தினை பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பணித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியல் பிரிவு பொலிஸார் ஸ்தலத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.

-கிருஷ்ணகுமார்

Related posts

பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியின் பழைய மாணவிகளால் பாடசாலைக்கு சோலார் மின் சக்தி திட்டம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது..!

ஜீவன் தியாகராஜா இராஜினாமா

பூரணமாக குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 250 ஆக உயர்வு