அரசியல்உள்நாடு

மக்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை – பிரேமனாத் சி தொலவத்த

அரசாங்கத்தின் பிழையான நடவடிக்கைகளுக்கு எதிராக குரல்கொடுத்து ஏதிர்க்கட்சியின் பொறுப்புக்களை புதிய ஜனநாயக முன்னணியே முன்னெடுத்து வருகிறது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அமைத்து 7 வாரங்கள் கடந்துள்ள நிலையில் மக்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை என புதிய ஜனநாயக முன்னணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் பிரேமனாத் சி தொலவத்த தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள புதிய ஜனநாயக முன்னணி தேர்தல் வழிநடத்தல் காரியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை (08) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அமைத்து 7 வாரங்கள் கடந்துள்ள நிலையில் மக்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை.

புதிய அரசியல் கலாசாரத்தை அறிமுகப்படுத்துவதாக தெரிவித்த இவர்கள், கடந்த அரசாங்கங்கள் செய்துவந்த விடயங்களையே இவர்களும் முன்னெடுத்து வருகின்றனர்.

குடும்ப அரசியலை இல்லாமலாக்குவதாக தெரிவித்தார்கள். ஆனால் தேர்தலில் அப்பா மகன், கணவன் மனைவி என வேட்பாளர்களாக களமிறக்கியுள்ளனர்.

அதேபோன்று அரச நிறுவனங்களுக்கு தலைவர்களை நியமிக்கும்போது நண்பர்கள் அரசியலில் நேருக்கமானவர்கள் என யாரையும் நியமிப்பதில்லை என தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தற்போது அவரால் நியமிக்கப்பட்டிருக்கும் சில புதிய நியமனங்கள் தொடர்பில் பாரிய விமர்சனங்கள் இருக்கின்றன.

அவரின் வகுப்பு நண்பர்கள் அல்லது அரசியல் ரீதியில் உதவி செய்தவர்களை நியமித்துள்ளார். புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்த இவர்கள், இதனையே செய்து வருகின்றனர்.

கடந்த காலங்களில் மைத்திரிபால சிறிசேன, கோத்தாபய ராஜபக்ஷ் போன்றவர்கள் ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலின்போது தங்களின் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யவில்லை.

வேட்பாளர்களின் புகைப்படத்துடன் இவர்களின் புகைப்படத்தை காட்சிப்படுத்த அனுமதிக்கவில்லை. ஆனால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மாவட்டம் தோறும் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு, மக்களுக்கு அறிமுகம் இல்லாத வேட்பாளர்களை களமிறக்கி அவர்களை ஊக்குவித்து வருகிறார். இதுதானா இவர்களின் புதிய அரசியல் கலாசாரம் என கேட்கிறோம்.

மேலும் அரசியல் மாற்றம் ஏற்பட்டால் எரிபொருள், எரிவாயு வரிசை ஏற்படும் என நாங்கள் தெரிவித்தோம். ஆனால் அநுரகுமார திஸாநாயக்க ஆட்சிக்கு வந்ததுடன் மத்திய வங்கி ஆளுநர் மற்றும் திறைசேரியின் செயலாளரை நீக்குவதாக தெரிவித்தார்.

ஆனால் அவர்கள் அந்த பதவிகளில் தொடர்ந்து இருந்து வருகின்றனர். அதனால்தான் எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசை ஏற்படாமல் இருக்கிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை அவ்வாறே பின்பற்றுவதாக சர்வதேசத்துக்கு அரசாங்கம் எழுத்துமூலம் அறிவித்துள்ளது. ஆனால் நாணய நிதியத்தின் நிபந்தனைகளில் திருத்தம் மேற்கொள்வதாக மக்களிடம் தெரிவித்து வருகின்றனர்.

எனவே அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் மக்கள் தற்போது அதிருப்தி அடைய ஆரம்பித்துள்ளனர். அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு விடயத்தில் அரசாங்கம் அரச ஊழியர்களை ஏமாற்றி வருகிறது.

அதனால் இந்த தேர்தலில் தபால் மூல வாக்குகளில் அரசாங்கத்துக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவே தெரியவருகிறது.

அத்துடன் இந்த அரசாங்கத்தின் பிழையான நடவடிக்கைகளுக்கு எதிராக குரல்கொடுத்து ஏதிர்க்கட்சின் பொறுப்புக்களை தற்போது நாங்கள் முன்னெடுத்து வருகிறோம் என்றார்.

-எம்.ஆர்.எம்.வசீம்

Related posts

கிளிநொச்சி மற்றுமொரு கோர விபத்தில் மூவர் பலி

மீன்சந்தைகளை மூடுவது அநாவசியமாகும்

பிலியந்தலை இரசாயன விற்பனை நிலையத்தில் தீ பரவல்