எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் இன்று (27) எழுப்பிய கேள்வி.
கௌரவ சபாநாயகர் அவர்களே!
வளமான நாடு அழகான வாழ்க்கை கொள்கை பிரகடனத்தில் “சட்டத்தின் அடிப்படையிலான ஆட்சி – சம அணுகல் நீதிமன்ற முறைமை” என்ற அத்தியாயத்தின் கீழ்,
(1) சட்டத்தின் பாதுகாப்பு நியாயமானதும் சமத்துவமானதும்,
(2) வெளிப்படத்தன்மையும் வினைத்திறனும்
(3) சுயாதீனத் தன்மையும் மக்கள் நம்பிக்கையும்
எனும் கோட்பாடுகளின் அடிப்படையில் செயல்படுவோம் என அரசாங்கம் பொதுமக்களுக்கு வாக்குறுதி அளித்திருக்கிறது.
தற்போதைய நிலையைப் பார்க்கும்போது, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களின் நடவடிக்கைகள் தலைதூக்கி மற்றும் நீதிமன்றங்களில் நடக்கும் கொலைகளை பார்க்கும் போது பொதுமக்களுக்கு தமது வாழ்க்கைப் பாதுகாப்பு குறித்த பிரச்சினை காணப்படுகின்றது.
2025 ஆம் ஆண்டின் முதல் 2 மாதங்களில் மாத்திரம் 17 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த நிலைமை திருப்தியற்ற நிலையை காட்டி நிற்கின்றன.
இந்த பின்னணியில், நான் பின்வரும் கேள்விகளைக் கேட்கிறேன், சரியான பதில்களையும் விளக்கங்களையும் அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.
- தொடர் துப்பாக்கிச் சூடுகளும், கொலைகளும் சாதாரண மக்களின் வாழ்க்கையைச் சீர்குலைத்துள்ளதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறதா? இது தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? இந்த நிலைமைகளைப் போக்க அரசாங்கம் இதுவரை எடுத்த நடவடிக்கைகளின் முன்னேற்றம் யாது?
- ஆயுதங்களைக் காரணம் காட்டி சந்தேக நபர்களை கொலை செய்யும் சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடந்து வருவதோடு, குற்றச் செயலுடன் தொடர்புடைய சாட்சியங்களை மறைக்க கொலைகள் நடக்கின்றன என்ற கருத்தும் மக்களிடையே நிலவுகிறது.
அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தின் பக்கம் 205 இன் படி “ பொலிஸ் நிலையத்திலிருந்து குற்றச்செயல் புரிந்த ஒருவரை ஏதேனும் விடயத்திற்காக வெளியில் கொண்டு செல்வதாயின் அது சந்தேக நபரின் உயிரைப் பாதுகாக்கின்ற வகையில் முறைசார்ந்த நடவடிக்கை முறையினை கடைப்பிடித்தலும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கொள்கையின் பிரகாரம் அரசாங்கம் தற்போது இயங்குகிறதா? இல்லையென்றால் எப்போதிலிருந்து இயங்குவீர்கள்? இது தொடர்பாக கடைபிடிக்கும் வழிகாட்டுதல்களைச் சபைக்கு சமர்ப்பிப்பீர்களா? இது தொடர்பில் பொலிஸார் பின்பற்றும் ஏனைய வழிகாட்டுதல்கள், சுற்றறிக்கைகள் அல்லது நீதிமன்றத் தீர்ப்புகள் காணப்படுகின்றனவா? அவற்றை சபைக்கு சமர்ப்பிப்பீர்களா?
- குற்றவாளிகளை கொலையாளிகளைப் பின்தொடர்ந்து கைது செய்யும் நடவடிக்கைகளில் நடக்கும் ஊடக பயன்பாடு மற்றும் அதைத் தொடர்ந்து அறிக்கையிடல் தொடர்பான அரசாங்கத்தின் புதிய வழிகாட்டுதல்கள் என்ன? அந்த வழிகாட்டுதல்களை சபைக்கு சமர்ப்பிக்கிறீர்களா? சமீபகால சம்பவங்களில் குற்றவாளிகளை மகிமைப்படுத்தும் வகையிலும், கைது செய்யும் அதிகாரிகள் மீது பொதுமக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தும் வகையிலும் செய்திகள் வெளியிடப்படுவதை ஏற்கிறீர்களா? இது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?
- கொலைகளுக்குப் பிறகு குற்றவாளிகளைப் பின்தொடர்ந்து கைது செய்வதைத் தவிர, குற்றச்செயல்களைத் தடுக்க அரசிடம் குறிப்பிட்ட திட்டம் ஏதும் உள்ளதா? பொலிஸ் மா அதிபருக்கும் பொலிஸ் ஆணைக்குழுவிற்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக சில செய்திகள் வெளியாகி வருவது உண்மையா? பொலிஸ் தொடர்பில் சுயாதீன ஆணைக்குழு செயற்படுவது அரசாங்கத்திற்கு பிரச்சினையாக காணப்படுகின்றதா?
- அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உயர்வான தேசிய பாதுகாப்பு பாதுகாக்கப்பட்ட தேசம் என்ற அத்தியாயத்தின் பக்கம் 225 இல் குறிப்பிடப்பட்டுள்ள படி, தேசிய பாதுகாப்பிற்கான பொறுப்பு மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தி தேசிய பாதுகாப்பு பேரவையை வலுப்படுத்துதல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் என்பதை உறுதிப்படுத்தி தேசிய பாதுகாப்பு பேரவையை வலுப்படுத்த அரசாங்கம் இதுவரை எடுத்துள்ள வேலைத்திட்டம் யாது? தற்போது இதில் அங்கத்துவம் வகிக்கும் உறுப்பினர்கள் யார்? இதன் செயல்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் திருப்திப்படுகிறதா? இல்லை என்றால் ஏன்?