சூடான செய்திகள் 1

மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் செவிசாய்க்குமாறு ரிஷாட், ஜனாதிபதியிடம் கோரிக்கை!

(UTV|COLOMBO)-நாட்டு மக்களின் ஆணைக்கு மதிப்பளித்தும், பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 122 அதிகபட்ச எம்.பிக்களின் வேண்டுகோளுக்கும் செவிசாய்த்து ஜனாதிபதி செயற்பட வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற செய்தியாளர் மாநாட்டில் (14) கருத்து தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது,

கடந்த இரண்டு வாரங்களாக இந்த நாட்டில் ஏற்பட்டிருந்த அரசியல் கொந்தளிப்புக்கள், குளறுபடிகள் நீங்கி, மீண்டும் இந்த நாட்டில் அமைதியானதும், சமாதானதுமான சூழல் ஏற்படுவதற்கு ஜனாதிபதி வழிவகுக்க வேண்டும்.

சுதந்திரத்துக்குப் பின்னர், இந்த நாட்டில் பல விரும்பத்தகாத சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அவற்றை எல்லாம் முடிவுக்கு கொண்டு வரும் நோக்கிலேயே, பெரும்பாலான சிறுபான்மை மக்கள் நிம்மதி, சமாதானம் மற்றும் சந்தோசத்தை எதிர்பார்த்தவர்களாக, இந்த ஜனாதிபதிக்கு ஆதரவளித்து, அவரை நாட்டுத் தலைவராக்கினர்.

எனினும், கடந்த 26 ஆம் திகதி அவரால் இழைக்கப்பட்ட மாபெரும் தவறு, அதன்பின்னர், அடுத்தடுத்து முன்னெடுக்கப்பட்ட பிழையான விடயங்கள் காரணமாக, ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டுமென்ற நோக்கில் நீதிமன்றத்தின் தயவை நாடினோம்.

ஜனநாயகம் தழைத்தோங்கும் வகையிலே, நேற்று (13) உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு பிறகாவது, ஜனாதிபதி இவ்வாறான தவறுகளை செய்யமாட்டார் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது.

அவரால் நியமிக்கப்பட்ட பிரதமாரான மஹிந்த ராஜபக்ஷவையும், புதிய அமைச்சரவையையும் நிராகரிக்குமாறு 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒப்பமிட்டு, சபாநாயகரிடம் கையளித்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு நாங்கள் கையை உயர்த்தி விருப்பம் தெரிவித்துள்ளோம்.

இதன் பிறகு நாட்டிலே நல்லதொரு அரசியல் சுமுகநிலை ஏற்படும் என்ற பாரிய நம்பிக்கை எமக்குள்ளது என்று தெரிவித்தார்.

-ஊடகப்பிரிவு-

 

 

 

Related posts

பிறந்து சில நாட்களே ஆன சிசுவிற்கு தாய் செய்த காரியம்…

நாட்டின் பல பிரதேசங்களில் கடும் காற்றுடன் கூடிய காலநிலை

இலஞ்சம் பெற்ற பொலிஸ் பரிசோதகர் விளக்கமறியலில்