காசாவுக்கான உதவிகளை முடக்கி முற்றுகையை இறுக்கி இருக்கும் இஸ்ரேல் அங்கு தாக்குதல்களையும் அதிகரித்திருக்கும் நிலையில் காசாவில் ஆறு வாரங்களுக்கு மேல் நீடிக்கும் போர் நிறுத்தம் முறிந்து மீண்டும் போர் வெடிக்கும் அச்சம் பலஸ்தீனர்கள் இடையே அதிகரித்துள்ளது.
மறுபுறம் காசாவை கைப்பற்றும் டொனால்ட் டிரம்பின் சர்ச்சைக்குரிய திட்டத்திற்கு பதில் அளிக்கும் வகையில் அரபுத் தலைவர்கள் நேற்று எகிப்து தலைநகர் கெய்ரோவில் அவசரக் கூட்டத்தை நடத்தினர்.
கடந்த ஜனவரியில் எட்டப்பட்ட காசா போர் நிறுத்தத்தின் முதல் கட்டம் கடந்த சனிக்கிழமையுடன் (01) முடிவுக்கு வந்த நிலையில் அடுத்த கட்டத்திற்கான உடன்படிக்கை இன்னும் எட்டப்படவில்லை.
இந்நிலையில் மத்திய காசாவின் டெயிர் அல் பலாஹ்வில் இஸ்ரேலியப் படை நேற்று பலஸ்தீனர் ஒருவரை சுட்டுக் கொன்றதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அதேபோன்று தெற்கு காசாவிலும் பலஸ்தீனர் ஒருவர் மீது சூடு நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது. அச்சுறுத்தும் வகையில் நெருங்கி வந்ததால் சூடு நடத்தியதாக அது குறிப்பிட்டுள்ளது.
காசாவின் கிழக்கு மற்றும் தெற்கு எல்லைக்கு அருகில் நிலைகொண்டிருக்கும் இஸ்ரேலிய டாங்கிகள் இரவு முழுவதும் செல் குண்டுகளையும் துப்பாக்கிச் சூடுகளையும் நடத்தி வருவதாக காசா குடியிருப்பாளர்கள் விபரித்துள்ளனர். போராளிகள் உஷார் நிலையில் இருப்பதாக ஹமாஸ் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக நேற்று முன்தினம் இஸ்ரேலின் தாக்குதல்களில் ரபா நகரில் இரு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதோடு கான் யூனிஸில் மூவர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலியப் படை வாபஸ் பெற்று நிரந்தர போர் நிறுத்தம் ஒன்றுக்கு வழிவகுக்கும் வகையில் காசா போர் நிறுத்தத்தின் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைகள் தற்போது ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று ஹமாஸ் வலியுறுத்தும் அதேநேரம் முதலாம் கட்ட போர் நிறுத்தத்தை நீடிப்பது குறித்து இஸ்ரேல் கூறி வருகிறது.
முதல் கட்ட போர் நிறுத்தத்தை நீடிப்பதற்காக இஸ்ரேலின் கோரிக்கை, ஏற்பட்ட முன்னேற்றங்களை பின்னோக்கித் தள்ளுவதாக உள்ளது என்று ஹமாஸ் அதிகாரி ஒசாமா ஹம்தான் கடந்த திங்களன்று குற்றம்சாட்டி இருந்தார்.
‘(இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்) நெதன்யாகுவின் உடன்பாடு ஒன்றை எட்டுவது மற்றும் உடன்படிக்கைகளை பாதுகாப்பதற்கு எதிராகச் செய்யும் நாச வேலைகளை தடுப்பது மத்தியஸ்தர்கள் மற்றும் உத்தரவாதம் வழங்கியவர்களின் பொறுப்பாகும்’ என்று ஹம்தான் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளது.
இந்த இழுபறியை தீர்ப்பதற்கு மேலும் சில காலம் மத்தியஸ்தர்கள் அவகாசம் கேட்டிருப்பதாக இஸ்ரேலிய அரச அதிகாரிகள் இருவர் குறிப்பிட்டதாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
இந்நிலையில் முதல் கட்ட போர் நிறுத்தத்தை நீடிப்பது அல்லது இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பது தொடர்பில் பணியாற்றுவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மத்திய கிழக்கு தூதுவர் ஸ்டீவ் விட்கொப் எதிர்வரும் நாட்களில் பிராந்தியத்திற்கு பயணிக்கவிருப்பதாக அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் ஒருவர் கடந்த திங்கட்கிழமை குறிப்பிட்டுள்ளார்.
‘அமெரிக்க பணயக்கைதிகள் உட்பட அனைத்து பணயக்கைதிகளும் உடன் விடுவிக்கப்பட வேண்டும் என்று (இராஜாங்க) செயலாளர் ரூபியோ மற்றும் ஜனாதிபதி தொடர்ந்து குறிப்பிட்டுள்ளனர்’ என்று அந்தப் பேச்சாளர்கள் கூறியதாக ரோய்ட்டர்ஸ் குறிப்பிட்டது.
காசா மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை முழு முற்றுகையை அமுல்படுத்திய இஸ்ரேல் உணவு மற்றும் எரிபொருள் உட்பட அங்கு உதவிகள் செல்வதை முழுமையாக முடக்கியது. இதனால் 15 மாதங்களுக்கு மேல் இஸ்ரேலின் தாக்குதல்களால் சின்னபின்னமாக்கப்பட்ட காசாவில் வசிக்கும் 2.3 மில்லியன் மக்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.
உதவிப் பொருட்களை சுமந்த நூற்றுக்கணக்கான லொறிகள் எகிப்து எல்லையில் வரிசையில் காத்திருக்கும் நிலையில் அவை காசாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கடைகள் அனைத்தும் பெரும்பாலும் காலியாகி இருப்பதாகவும் பொருட்களின் விலை ஓரிரவுக்குள் இரட்டிப்பாகி இருப்பதாகவும் காசா மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
காசாவில் போர் பதற்றம் அதிகரித்திருக்கும் நிலையில் கெய்ரோவில் அரபுத் தலைவர்கள் நேற்று ஒன்றுகூடினர். காசா பகுதியில் உள்ள மக்களை வெளியேற்றி அந்தப் பகுதியை அமெரிக்கா கைப்பற்றுவதாக டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட திட்டத்திற்கு எதிராகவே இந்த அரபு மாநாடு நடைபெறுகிறது.
இதன்போது பலஸ்தீனர்களை வெளியேற்றாது அந்தப் பகுதியை மீள கட்டியெழுப்பும் திட்டத்தையே அரபுத் தலைவர்கள் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.