சூடான செய்திகள் 1

போருக்கு பின்னரான வெறுமையில் திசைதிரும்பும் தமிழ் அரசியல்

(UTV|COLOMBO)-சிறுபான்மை சமூகத்தினரின் புரிந்துணர்வுடன் நாட்டை முன்னேற்றுவதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளில், சில விடயங்கள் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் ஒன்றிணைவைத் தூரப்படுத்துகின்றமை கவலையளிக்கின்றது.

 

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எதை எடுத்தாலும் தற்போது இவ்விரு சமூகங்களும் ஏட்டிக்குப் போட்டியில் ஈடுபடுகின்றன.  கிழக்கு மாகாணத்தில் சில தமிழ் அரசியல்வாதிகள் முஸ்லிம்களை தூரப்படுத்தும் மனநிலையில் நோக்கவும் தொடங்கியுள்ளனர். முஸ்லிம்களுக்கு எதிராக பேசியே தமிழர்களின் வாக்குகளை பெறலாம் என்ற மனநிலையும் சிலரிடம் வளர்வது துர்ப்பாக்கியமே. இதற்கு பல காரணங்கள் உள்ளன. அபிவிருத்தி அரசியலை விமர்சித்து தொடர்ந்தும் உரிமை அரசியல் மாயைக்குள் தமிழர்களை லயிக்க வைப்பதும் இம்மாயைக் காரணங்களில் பிரதானமானது.

 

முப்பது வருடப் போராட்டத்தில் தனி ஈழத்தையோ அல்லது சமஷ்டியையோ அல்லது வடக்கு கிழக்கு இணைப்பையோ தமிழ் தலைமைகள் சாத்தியப்படுத்தவில்லை. இதனால் தமிழ் தலைமைகளில் நம்பிக்கை இழந்த தமிழர்கள் அபிவிருத்தி அரசியலை நோக்கி முகம்களை திருப்பி வருகின்றனர். இதை விலைபோதல் எனக் கருதவும் முடியாது. முப்பது வருட எதிர்பார்ப்பின் ஏமாற்றங்களே இந்த மனமாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

 

போராட்டத்தில் தமிழர்கள் இழந்தவை, அனுபவித்தவை, அந்தரித்தவை என்பவற்றிற்கு தனி ஈழமே ஈடாகாது. இந்த நிலையில் மாகாண சபைகளிலாவது இந்த தமிழ் தலைமைகள் எதையாவது செய்தனவா? என்ற ஆதங்கம் தமிழ் மக்களின் விடுதலை உணர்வை வறிதாக்கிற்று. ஆட்சி மாற்றத்தில் பங்களித்து மகிந்தவை தோற்கடித்ததற்குப் பதிலாக கிழக்கு மாகாண ஆட்சியையாவது பெற்றிருக்கலாம்.  இதனையும் கோட்டை விட்ட தமிழ் தலைவர்கள் யாழ் கோட்டைக்குள் மாத்திரம் படையினர் வரக்கூடாதொன்பது எதற்காக? சிங்களப் பேரினவாதத்தை எதிரிகளாக சித்தரித்து தமிழர்களின் அறியாமை, ஆத்திரங்களை அரசியல் மூலதனமாக்கிய இவர்கள் யுத்தம் மெளனித்ததால் அரசியல் மூலதனமின்றி முடங்கும் நிலை வந்துள்ளது.

 

சமூகங்களுக்கு எதிரான நிலைப்பாடு, எதிர்நிலை அரசியல் அல்லது இன உணர்வுக்கோசம் அல்லது குறுக்கீட்டு அரசியல்! இவைகளே தமிழ் தலைமைகளின் அரசியல் மூலதன யுக்திகள். இத்தனை வருடங்களாக இந்த மூலதனங்கள் சிறந்த வருவாயை பெற்றுக்கொடுத்தன. யுத்தம் ஓய்ந்து நிசப்தம் நிலவும் இன்றைய சூழ்நிலைகள் விடுதலைக் கோசத்தின் வெறுமையைத் தமிழர்களுக்கு உணர்த்தியுள்ளது. இதனால் தமிழர்கள் இப்போது அதிகார ஆளும் ஆசைகளில் இல்லை. போரினால் துவண்டுபோன இம்மக்களுக்கு அபிவிருத்திகளே அதிகளவில் தேவைப்படுகின்றன. அமைச்சர் மனோ கணேசனும் அண்மையில் இக்கருத்தையே கூறியிருந்தார்.

 

புதிய அரசியலமைப்பு சாத்தியமில்லை என்பதால் அரசாங்கத்துடன் இணைந்து சம்பந்தன் ஐயா தமிழர்களின் வறுமை, பசியைப் போக்க வேண்டும் என அவர் அழைக்கிறார். கிழக்கில் இந்த அபிவிருத்தி அரசியலே  முன்னெடுக்கப்படுகின்றது. இது தமிழர்களை அதிகம் ஈர்க்கும் என்பதே யதார்த்தம். இதனாலாயே கிழக்கில் முஸ்லிம் தலைமைகளுக்கு குறுக்காகவும், வடக்கின் மீள்குடியேற்ற செயலணிக்கு எதிராகவும் சில தமிழ் தலைவர்கள் செயற்படுகின்றனர். பிழைப்பு அரசியலுக்கான பிடிவாதங்களே இவை. இப்பிடிவாதங்களின் எதிரொலிகள் வடமாகாண செயலணியின் செயற்பாடுகள் அபிவிருத்தி குழுக்கூட்டங்களை விட்டு வைத்ததாக இல்லை.

 

அமைச்சர் ரிசாத் பதியுதீன் பங்கேற்கும் வட மாகாணங்கள் கூட்டங்கள் குழப்பியடிக்கப்பட்டு அனைத்திற்கும் முட்டுக்கட்டைகள் போடப்படுகின்றன. மாந்தை மேற்கு பிரதேச சபை, மாந்தை கிழக்கு பிரதேச சபைகளின் ஆட்சியை அமைச்சர் ரிசாத் கைப்பற்றியது போல் ஏனையவற்றை கைப்பற்றுவதை தடுப்பதும் இந்த குறுக்கீட்டு முட்டுக்கட்டை அரசியல் இலக்குகளில் உள்ளன. தமிழ் தலைமைகளிடம் கிடைக்காதவை முஸ்லிம் தலைவர்களிடம் கிடைத்துவிட்டால் தமிழர் மனநிலைகள் மாற்றமடையலாம். இம் மனநிலை மாற்றங்கள் பொதுத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சமும் இவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. வட மாகாணத்தில் மீள்குடியேற்றப்படவுள்ள தமிழர்களின் நலன்களுக்கு என்றே மீள்குடியேற்ற அமைச்சு செயற்படுகின்றது. அதனாலயே அது தமிழர் ஒருவரிடம்  ஒப்படைக்க்கப்பட்டது. இவ்விடயத்தில் எவரது தலையீட்டுக்கும் அனுமதியில்லை. அத்துடன் வடபுலத்தில்  சிங்கள , முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்திற்கென வட மாகாண செயலணி அமைக்கப்பட்டது. இச்செயலணியை குழப்புவதே சிலரது செயற்பாடுகளாக உள்ளன. ஜனாதிபதி, பிரதமருடன் நேரடி தொடர்புள்ள கொழும்பில் அடிக்கடி அரசின் உயர்மட்ட அமைச்சர்கள் வெளிநாட்டு தூதுவர்களை சந்திக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களுக்கு தமிழ் மக்கள் சார்ந்த நலன்களை சாதிக்க முடியாதுள்ளது ஏன்..? பரவாயில்லை தமிழர்களும் வடமாகாண செயலணி ஊடாக நன்மையடையட்டும். ஆனால் முஸ்லிம்களை அரவணைக்கும் சமிக்ஞைகளை வடமாகாண சபையோ முதலமைச்சரோ வெளிக்காட்டாதது தான் கவலை தருகின்றது. இது மாற்றான் தாய் மனநிலையின்  ஓர நீதியா? என்கின்றனர் முஸ்லிம்கள். யுத்தக்குற்ற பிரேரணை, முள்ளிவாய்க்கால் பிரேரணை, வட மாகாண செயலணியை நிராகரிகும் பிரேரணை இவ்வாறு எத்தனையோ பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டன. வடபுல முஸ்லிம்களின் வெளியேற்றம் தவரென்றோ அல்லது வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை துரிதமாக மீளக்குடியேற்ற வேண்டுமென்றோ எதாவது ஒரு பிரேரணை நிறைவேற்றப்படவில்லை. இது ஏன்.?  இந்த மநோபாவம் கொண்டவர்களுக்கு  அமைச்சர் ரிசாதின் செயற்பாடுகளும் இனவாதமாக தென்படும். மீள்குடியேற்றம், வடக்கு அபிவிருத்தி பிரதியமைச்சர் மஸ்தானுக்கு இப்போதாவது இவ் விடயங்கள் புரியவரும். அமைச்சர் ரிசாத் பதியுதீனின் எத்தனை திட்டங்கள் வடமாகாண சபையால் முடக்கப்பட்டன. அந்த வேளையில் மஸ்தான் மெளனம் காத்ததன் மர்மம் என்ன?

 

வட மாகாண சபை முதலமைச்சருக்கு எதிராக தமிழரசுக் கட்சி மாகாணசபை உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்த வேளை  விக்னேஸ்வரை காப்பாற்ற வெளிக்கிளம்பிய மஸ்தான், வில்பத்துவின் விவகாரத்தை தமிழ் தேசியத்தின் போர்வைக்குள் மறைத்துவிட்டு பேசினாரோ..?

 

வில்பத்து விவகாரம் தென்னிலங்கை சிங்களவர் மத்தியில் தவறாக புரியவைக்கப்பட்டுள்ளதை வடபுல பெளத்த துறவிகள் இப்போது ஏற்றுக்கொண்டுள்ளனர். இப்போதாவது அமைச்சர் றிசாத்தின் மனிதாபிமான பார்வைக்குள் மஸ்தானின் சமூக சிந்தனைகள் சரணடைய வேண்டும். புத்தளத்தில் வடபுல முஸ்லிம்கள் சிலர் கஷ்டப்படுவதாக கேள்வியுற்றதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறினார். தனது நிர்வாகத்தில் இருக்க வேண்டிய அகதி முஸ்லிம்களை பற்றி வடமாகாண முதலைச்சர் எந்தளவு தெரிந்து வைத்துள்ளார். என்பதற்கு இதுவே போதும்.  இதனால் தான் வடமாகாண மீள்குடியேற்ற செயலணி துரிதமாக செயற்படுகிறது. தமிழர்களின் வாக்குகளினால் அமைச்சரான ரிசாத் பதியுதீன் வடக்கு தமிழர்களையும் அனுசரிக்க வேண்டும் என சிவமோகன் , சத்தியலிங்கம், டெனீஸ்வரன் உள்ளிட்ட பலர் விரும்புகின்றனர். இவர்களின் விருப்பங்களை நிறைவேற்ற முற்பட்டால் அதே கட்சியில் உள்ள சிலர் முட்டுக்கட்டை போடுகின்றனர்.

 

சுஐப் எம். காசிம்

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

‘எளிய’ அமைப்பின் புதிய அலுவலக நடவடிக்கைகள் ஆரம்பம்

போக்குவரத்து சேவை முகாமைத்துவ செயலணியின் கலந்துரையாடல் இன்று

முன்னாள் சட்டமா அதிபர் ஷிப்லி அஸீஸ் காலமானார்