அரசியல்உள்நாடு

பொறுப்பை ஏற்காமல் ஓடியிருந்தால் அது கோழைத்தனமான செயல் – ஜனாதிபதி ரணில்

ஒரு கட்சியில் அன்றி அனைத்து கட்சிகளிலும் உள்ள திறமையான அணியை ஒன்றிணைத்து கடந்த இரண்டு வருடங்களில் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரமான நிலைக்கு கொண்டு வர தன்னால் முடிந்ததாகவும், தன்னுடன் இருக்கும் பொருளாதாரக் குழுவை மிஞ்ச வேறு எந்த கட்சியிலும் இல்லை  எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.  

அந்தக் கட்சிகளில் இருக்கும் சிலர் தான் அரசியலுக்கு கொண்டு வந்தவர்கள் என்பதால் அது தொடர்பில் தனக்கு நன்றாகத் தெரியும் எனத் தெரிவித்த ஜனாதிபதி,  ஜனாதிபதி யார் என்பது தொடர்பில் அன்றி, மக்களை வாழ வைப்பது தொடர்பிலே போட்டியிருப்பதாகவும் , கேஸ் சிலிண்டரை தேடிச் சென்ற யுகத்திற்கு முடிவு கட்டுவதற்கே இம்முறை வாக்களிக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்ற சட்ட வல்லுனர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

“பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான சட்டத்தரணிகள்” எனும் தொனிப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணிகள், ஜனாதிபதி சட்டத்தரணிகள் மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணிகள் உட்பட சட்டத்தரணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

திருடர்களைப் பிடிப்பது தொடர்பில் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்துக் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, 2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் திருடர்களைப் பிடிக்கும்  பொறுப்பை ஜே.வி.பி ஏற்றுக் கொண்டது. பொலிஸ் உத்தியோகத்தரோ சட்டத்தரணியோ  அல்லாத  ஆனந்த விஜேபால  நியமிக்கப்பட்டதோடு 400  கோப்புகள் தொடர்பில்  அவர் செயற்பட்டார். பிரதமர் என்ற ரீதியில் தான் தேவையான  ஏற்பாடுகளை மாத்திரம் வழங்கியதாக தெரிவித்த ஜனாதிபதி, எலிகளை பிடிக்க பற்கள் உள்ள பூனை இருக்க வேண்டும் எனவும், பூனைக்கு பற்கள் இல்லையென்றால் அதனை ஏசிப் பயனில்லை எனவும் தெரிவித்தார்.

மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,
 
ஆட்சியில் இடைவெளி வைக்கக் கூடாது  என்று ஜனாதிபதி  ஜே.ஆர்.ஜெயவர்த்தன என்னிடம் கூறினார். அதனால் தான்  நான் பிரதமர் பதவியை ஏற்றேன். அக்காலகட்டத்தில் நாட்டில் நிலவிய  நிலைமையை சொல்லத் தேவையில்லை. பங்களாதேஷில் அந்த இடைவெளி ஏற்பட்டது. திருமதி ஷேக் ஹசீனா பதவி விலகிய போது, அரசாங்கத்தை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. அந்த  இடைவெளியின் காரணமாக அவர்களுக்கு பெரும் இழப்பை சந்திக்க நேரிடும்.

இந்த நாட்டின் பிரதமர் பதவியை ஏற்க  எவரும் முன்வரவில்லை. ஆனால் நான் தனியொரு ஆசனம் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர். என்னைப் பிரதமராகப் பொறுப்பை ஏற்கச் சொன்னார்கள். அந்தப் பொறுப்பை ஏற்காமல் நான் ஓடியிருந்தால் பாரிய விபரீதம் ஏற்படும். அது ஒரு கோழைத்தனமான செயல்.

எதிர்க்கட்சித் தலைவர்தான் மாற்றுப் பிரதமர்.  எதிர்க்கட்சித் தலைவர்  ஆட்சி அமைக்க வேண்டும் என்று அந்த சமயம் நான் கூறினேன். நெருக்கடி ஏற்படும் போது எதிர்க்கட்சியில் இருந்து ஒத்துழைக்கத் தயார் என்று கூறினோம்.  சஜித் பிரேமதாசவுடன் எனக்கு எந்த பிரச்சினையும் இருக்க வில்லை. ஆனால் கடைசியில் பிரதமர் பதவியை ஒப்படைத்தபோது வேண்டாம் என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டார். அவரைப் போல நானும் ஓடிப்போனால் அது கோழைத்தனமான செயல். எனது அனுபவத்தின் அடிப்படையில் இந்தப் பிரச்சினையை என்னால் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை இருந்ததால் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன்.

மேலும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறிய போது, நான் அந்தப் பொறுப்பை ஏற்று பணிகளை தொடர்ந்து முன்னெடுத்தேன். எனது வீடு எரிக்கப்பட்ட போதும் திங்கட்கிழமை அமைச்சரவை  கூடியது. அந்த சமயம்  தொடக்கம் நாம் ஆட்சியைப் பாதுகாத்து தொடர்ந்து செயற்பட்டோம். இவ்வாறான நிலையில் மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட நிலையில், அனுபவமற்றவர்கள் தான் கட்சி வேறுபாடுகள் பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்.  

இந்தப் பணியை முன்னெடுத்துச் செல்ல எனக்கு ஒரு நல்ல குழுவொன்று  தேவைப்பட்டது.  நல்லாட்சி அரசாங்கத்தின் போது என்னுடன் இணைந்து செயற்பட்ட அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய எனது இராஜாங்க அமைச்சர்களில் ஒருவராக நியமித்தேன்.  ஷெஹான் சேமசிங்க எம்.பி.யைப் பற்றியும் அறிந்து வைத்திருந்தேன்.  அவரையும் தெரிவு செய்தேன். இவர்கள் இருவரும் அமைச்சர்களாக பெரும் சேவை  ஆற்றினர். இறுதியில், இருவரும் சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைகளுக்கு கூட சென்று பணியாற்றியிருந்தனர். அத்துடன் அமைச்சர் அலி சப்ரியிடம் வெளிவிவகார அமைச்சு ஒப்படைக்கப்பட்டது. அந்தப் பணிகளை அவர் செய்தார். எங்களுக்கு இருந்த மிகப்பெரிய பிரச்சினை வலுசக்தி துறையில் இருந்தது. அதற்காகவே அமைச்சர் கஞ்சன விஜேசேகரவை நியமித்தேன். அந்த குழுவே இந்த வேலையை செய்தது.

அத்துடன் இந்த விடயங்கள் அனைத்தையும் ஊடகங்களுக்கு  வெளியிடுவதற்காக அமைச்சர் பந்துல குணவர்தன நியமிக்கப்பட்டார். மேலும் உகந்த அதிகாரிகளையும் தேடியெடுத்தேன். நல்லாட்சி அரசாங்கத்தின் போது நிதி அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய கலாநிதி ஆர்.எச். எஸ். சமரதுங்க எனது ஆலோசகராக நியமிக்கப்பட்டார். மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர்  மஹிந்த சிறிவர்தன ஆகியோருக்கு பணியைத் தொடர்ந்து முன்னெடுக்க  வாய்ப்பளிக்கப்பட்டது. நான்காவதாக, எனது தலைமை அதிகாரியாக  சாகல ரத்நாயக்கவை நியமித்தேன்.

மேலும், இந்திரஜித் குமாரசுவாமி,சாந்த தேவராஜ், ஷாமினி குரே ஆகியோரும் தேவையான அறிவுரைகளை வழங்கினர். இந்த குழுதான் இந்த திட்டத்தை முன்னோக்கிக்  கொண்டு வந்தது. அந்தக் குழு தான் வெற்றிகரமான குழு. ஏனைய அமைச்சர்களும் தங்கள் பணியை செய்தனர். பிரதமரும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவும் பாராளுமன்ற விவகாரங்களை கவனித்தனர். அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகளை கவனித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவையும் எமக்குப் பெற்றுத் தந்தார். ஹரின் பெர்னாண்டோ சுற்றுலாத் துறையை கவனித்துக் கொண்டார். ஒரு சிறிய அமைச்சரவை இந்தப் பணிகள் அனைத்தையும் மேற்கொண்டது.

ஒரு கட்சி அல்லாமல் அனைவரும் சேர்ந்து நாட்டுக்காக சிந்தித்து உழைத்தார்கள். அதற்கு பாராளுமன்றக் குழு உதவியது. இப்போது ஓரளவு ஸ்திரத்தன்மையை அடைந்துள்ளோம். பிரதானமாக, 18 நாடுகள் ,சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

முதலில் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாட்டுக்கு வந்தோம். இரண்டாவதாக, நாம் சீனா மற்றும் ஏனைய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருந்தது. தற்போது  அனைத்தும் நிறைவு செய்யப்பட்டு ஒரு உடன்பாட்டுக்கு வந்துள்ளோம். அதே நேரத்தில், அனைவர் சார்பாகவும் சர்வதேச நாணய நிதியத்திற்கு செயல்படுவதற்கு வழங்கப்பட்ட அதிகாரம் காலாவதியாகிவிட்டது. 18 நாடுகள் மற்றும் 3 அமைப்புகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். எனவே, இதன்படி, நாம் தொடர்ந்து செயற்பட வேண்டியுள்ளது. அடுத்த வருடம் 5 டிரில்லியன் ரூபாய் வருமானம் பெற உழைக்க வேண்டும்.

ஆனால் தமது தேர்தல் பிரகடனங்களில் அதை இலவசமாகத் தருகிறோம் ;இதை இலவசமாகத் தருகிறோம். வரியைக் குறைப்போம் என்று  சொல்லும் போதே நாம் செய்து கொண்ட ஒப்பந்தம் உடைந்துவிடும். எனவே அதற்கு வேறு வழியில் பணம் தேட நேரிடும். வெட் வரி குறைக்கப்பட்டால், வருமான வரியை அதிகரிக்க வேண்டும். 5 டிரில்லியன் ரூபா என்ற இலக்கை மாற்ற முடியாது. ஆனால் பணம் சம்பாதிக்கும் முறையை மாற்றலாம். ஆனால் இந்த இலக்கின் படி நாம் செயல்பட வேண்டும். இலக்கை அடையவில்லை என்றால் என்ன நடக்கும்?

மீண்டும் சர்வதேச நாணய நிதியத்துடன் பேசப் போவதாக கூறுகிறார்கள். ஆனால் சர்வதேச நாணய நிதியத்திற்கு இவ்விடயம் பற்றிப் பேச  அதிகாரம் இல்லாததால் அவர்களுடன் பேசிப் பலனில்லை. எனவே, இந்த 18 நாடுகளுடனும், 3 நிறுவனங்களுடனும் தனித்தனியாக சென்று பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இது எளிதான காரியம் அல்ல. பெரும்பாலான நாடுகளுக்கு  நமது பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவதை விடத் தங்கள் சொந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டியுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒரு முறையும் மதிப்பாய்வு செய்த பின்னர் இலங்கைக்கு உதவிகளை வழங்குகிறது. ஜப்பான் மற்றும் ஏனைய நிறுவனங்கள் இடைநிறுத்திய அபிவிருத்தி பணிகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன. IMF இன் இரண்டாவது மதிப்பாய்வை தற்போது வெற்றிகரமாக முடித்துள்ளோம்.

எதிர்வரும் பிப்ரவரி மாதத்தில் அதற்குரிய நிதி உதவி கிடைக்கும். அதற்கு முன்னதால மீளாய்வுகளை செய்து அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய முற்பட்டால்,புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ளும் வரையில் இந்த உதவிகள் அனைத்தும் நிறுத்தப்படும். பின்னர் பெப்ரவரி முதல் நீங்கள் மீண்டும் நாட்டு மக்கள் வரிசையில்  நிற்க வேண்டிருக்கும்.

ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக்கொள்ள குறைந்தபட்சம் 2 மாதங்கள் ஆகும். ஒப்பந்தத்தில் திருத்தம் செய்ய குறைந்தபட்சம்  4 – 5 மாதங்கள் ஆகலாம். கடன் வழங்கிய நாடுகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருப்பதால் முழு செயல்முறைக்கும் குறைந்தது 8 மாதங்களாவது ஆகும். அந்தச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல முடியுமா என்ற கேள்வியே இன்று உள்ளது.  எனவே வெறுமனே யார் ஜனாதிபதி என்பதை தெரிவு செய்யும் போட்டியாக அல்லாமல் எவ்வாறு வாழப்போகிறோம் என்பதை தீர்மானிக்க வேண்டும்.

பொய் சொல்வதால் நாடு சரிவை சந்திக்கும். இந்த நேரத்தில் பொருளாதார ஸ்திரத்தன்மை முக்கியமாக உள்ளது. அதற்கான பணிகளை முன்னெடுப்பதே எனது எதிர்பார்ப்பாகும். அதற்காக வெளிநாட்டு முதலீடுகளை கொண்டுவர வேண்டும். அதனால்தான் சிலிண்டர் சின்னத்துக்கு வாக்களிக்கச் சொல்கிறோம். இல்லாவிட்டால் சிலிண்டர் இல்லாமல் தவிக்கும் யுகம் வரலாம்.

எங்களுடன் இருக்கும் பொருளாதாரக் குழுவைப் போல் பொருத்தமான வேறு குழுக்கள் இருப்பதாக தெரியவில்லை. எதிரணிகளின் குழுக்களில் யார் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் எமது குழுவின் பணிக்கு உலகின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அது குறித்து சர்வதேச சமூகத்தில் பலர் என்னிடத்தில் கேட்கிறார்கள். அதனால் உங்களிடத்தில் உள்ள ஆலோசணைகளையும் எங்களுக்கு கூறுங்கள் என்றே சொல்கிறோம்.

இதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் கேட்டிருந்தார். இந்த குழுவிற்கு நிகரான குழுக்கள் மற்றைய கட்சிகளில் இல்லை. எதிரணியில் இருக்கின்ற சிலர் என்னால் அரசியலுக்கு கொண்டுவரப்பட்டவர்கள். அவர்களை பற்றி நன்கறிவேன். எனவே இவர்களிடம் எதிர்காலத்தை ஒப்படைக்க வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்.

திருடர்களைப் பிடிப்போம் என்கின்றனர். 2015 ஆம் ஆண்டில் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக நியமிப்பதற்கு பல தரப்பினர் உடன்படிக்கை செய்துகொண்டனர். அவர் வெற்றி பெற்ற பின்னர் அனைவரையும் அரசாங்கத்தில் இணைந்துகொள்ளுமாறு அழைத்தோம். ஆனால் ஜே.வி.பி எதிர்கட்சியாக அமர்வதாக அறிவித்தது.

தமிழ்க் கட்சிகள் தங்களின் அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்றார்கள். மக்கள் விடுதலை முன்னணி ஊழல்களை ஆராயும் பொறுப்பை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென கோரியது. ஒருபுறம், ஜே.சி. வெலியமுன இதனை செய்ய வேண்டுமென கோரப்பட்டது. மறுபுறத்தில் மக்கள் விடுதலை முன்னணியும் கோரியிருந்தது. பின்னர் ஜே.சி. வெலியமுன ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து அந்த பணிகளை செய்தார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவும் அதற்கு மேலதிகமாக ஊழல் எதிர்ப்பு செயலகமும் உருவாக்கப்பட்டது. அதற்கான நிதியை பிரதமர் அலுவலகம் வழங்கியது. அதற்கு தலைமை தாங்க மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் ஆனந்த விஜேபால நியமிக்கப்பட்டார். ஆனால் அவர் பொலிஸ் அதிகாரியாகவோ சட்டத்தரணியாகவோ அல்ல. 400 கோப்புகள் தொடர்பிலான பணிகளை மேற்கொண்டார். அவற்றில் சில வெற்றியளித்தன. சில விடயங்கள் தோல்வியடைந்தன. இப்போது அவரை குற்றம் சொல்வதில் பயனில்லை.

அதற்கு தேவையான ஏற்பாடுகளை வழங்குவதே எனது பணியாகும். எலிகளைப் பிடிக்க உங்களிடம் உள்ள பூனைகளுக்கு பற்கள் இல்லாதது எனது பிழையாகாது.

நான் ஊழலுக்கு எதிரானவன். ஆனால் சட்டத்தில் பல குறைபாடுகள் இருந்தன. அது தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை. ஆனால் நான் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி ஊழல் தடுப்புச் சட்டத்தையும் குற்றச் செயல்களின் மூலம் பெறப்படும் சொத்துக்கள் தொடர்பான சட்டத்தையும் தயாரித்து அவற்றை நிறைவேற்ற வழி செய்திருக்கிறேன்.

அதற்குத் தேவையான மனித வளத்தைப் பயிற்றுவிப்பதற்காக உலக வங்கியின் உதவியைப் பெற்றுள்ளோம். இதை நாம் நடைமுறைப்படுத்திய பிறகு, தெற்காசியாவிலேயே வலுவான ஊழல் எதிர்ப்புச் சட்டத்தைக் கொண்ட நாடாக இலங்கை மாறும். எனவே, நமது நாட்டின் எதிர்காலம் குறித்து சிந்திக்க வேண்டும். அதற்காக பொருளாதார பரிமாற்ற சட்டத்தை முன்வைத்துள்ளோம். தேர்தலுக்குப் பிறகு மீண்டும் புதிய முறையில் சிந்தித்து முன்னேற வேண்டும்.” என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

வெளிவிவகார மற்றும் நீதி, சிறைச்சாலைகள், அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி:

 நாடளாவிய ரீதியிலிருந்து 1500க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் வருகை தந்துள்ளனர்.   நீதிச் சமூகம் நாட்டின் எதிர்காலத்திற்கும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கும் மிகவும் முக்கியமானது.

சட்டத்தரணிகளும் கூட சில சமயங்களில் தேசிய பாதுகாப்பை தவறாகப் புரிந்து கொள்கின்றனர். தேசிய பாதுகாப்பு பிராந்திய ஒருமைப்பாட்டில மட்டும் தங்கியிருப்பதில்லை. 2022 ஆம் ஆண்டில் இலங்கையில் நடந்ததையும், பங்களாதேஷில் இப்போது என்ன நடக்கிறது என்பதையும் பார்த்தால் பிராந்திய ஒருமைப்பாடு என்பது தேசிய பாதுகாப்பின் ஒரு முக்கிய அங்கம் மட்டுமே என்பதை புரிந்துகொள்ள முடியும்.

தேசிய பாதுகாப்பில் இன்னும் பல முக்கியமான விடயங்கள் உள்ளன. பொருளாதாரம், சுகாதாரம், உணவு பாதுகாப்பு உள்ளிட்ட பல விடயங்கள் இதற்குள் உள்ளடங்கும். நாட்டின்  பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தால் அழிவை சந்திக்க நேரிடும். எனவே நாடு எதிர்நோக்கும் சவால்களை நன்கு கையாளக் கூடிய தலைமைத்துவத்தைக் கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கட்சி நிறங்களை ஒதுக்கி வைத்து ஆதரவளிக்க தீர்மானித்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

  கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த:

வங்குரோத்து நிலையை அறிவித்த நாட்டை மீட்கவும், நாட்டை இயல்பு நிலைக்குத் திருப்பவும் இரண்டு வருடங்களும் மூன்று மாதங்களும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில்  அமைச்சர்கள் குழுவும் பாராளுமன்றக் குழுவும் பாடுபட்டது. அதற்காக சில நாட்களில்  16 மணி நேரம் கஷ்டப்பட்டிருக்கிறோம்.

ஒவ்வொரு அமைச்சரும் கடுமையாக பாடுபட்டனர். ஜனாதிபதி தனது நாற்பது வருடங்களுக்கும் மேலான அரசியல் அனுபத்துடன் அதற்கு தலைமைத்துவம் வழங்கினார்.  அதனால்  இன்று ஜனாதிபதித் தேர்தலை அமைதியாகவும் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்துவதற்கான சூழல் உருவாகியுள்ளது. தொழில் வல்லுநர்களாகிய நாங்கள் இப்படி ஒன்று சேரும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

எந்த ஒரு அரசியல் நிலைப்பாட்டை கொண்டிருப்பவர்களும் அதனை சுதந்திரமாக கூற முடிகிறது. கூட்டங்கள், மாநாடுகள் மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்தும் நிலை உருவாகியுள்ளது. ஜனாதிபதி பிரதமர் தலைமையிலான அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற வேளையில் அமைச்சரவை கூட்டம் நடத்தக்கூட இடமிருக்கவில்லை. ஜனாதிபதியின் சொந்த வீட்டுக்கு தீ வைக்கப்பட்டது.  

ஆனாலும் எமது பயணத்தை தொடர்ந்தோம். ஜனாதிபதியின் தலைமையில் இந்த நாட்டை கட்டியெழுப்பினோம். சரிவடைந்த நாட்டை கட்டியெழுப்புவதென்பது நிலையான நாட்டுக்கு வழிசமைப்பதாக அமையும்.இன்று ஜனாதிபதி, பிரதமர் ஆகத் துடிக்கும் எதிரணி உறுப்பினர்கள் பலரும் அன்று இந்த பொறுப்புக்களை ஏற்க முன்வரவில்லை.

ஜனாதிபதி கட்டுப்பணம் செலுத்தி இரு வாரங்கள் மட்டுமே ஆகிறது. களத்திலிருந்த எல்லா வேட்பாளர்களையும் முந்திக்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னணியில் இருக்கிறார்” எனவும் அவர்  தெரிவித்தார்.

பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி, பாராளுமன்ற உறுப்பினர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா, டபிள்யூ. டி. ஜே.செனவிரத்ன, ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசிங்க, சட்டத்தரணி பிரேமநாத் சி. தொலவத்த, சட்டத்தரணி மதுர விதானகே, எஸ். எம். எம். முஷாரப், மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ. கமகே, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் சி.பெரேரா, ஜனாதிபதி சட்டத்தரணி யூ. ஆர். டி. சில்வா உள்ளிட்ட சட்டத்தரணிகள் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணிகள், ஜனாதிபதி சட்டத்தரணிகள், சிரேஷ்ட சட்டத்தரணிகள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related posts

மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவை மீண்டும்

இரட்டைக் கொலை நடந்தது என்ன?

இலங்கை போக்குவரத்து சபைக்கு 2500 புதிய பேருந்துகள்