அரசியல்உள்நாடு

பொய்யான வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் அரசாங்கம் மூச்சுத் திணறுகிறது – நாமல்

பொதுத்தேர்தலின் பின்னர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பதவி நிலைகளில் மாற்றம் ஏற்படும். ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் வழங்கிய பொய்யான வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் அரசாங்கம் மூச்சுத் திணறுகிறது.

மாற்றத்தை எதிர்பார்த்து தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரத்தை வழங்கிய இளைஞர்கள் மற்றும் படித்த தரப்பினரது நிலையை கருதி கவலையடைகிறேன் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதித் தேர்தலில் கட்சி என்ற ரீதியில் பல சவால்களை எதிர்கொண்டிருந்தோம். நல்லாட்சி அரசாங்கம் பெற்றுக் கொண்ட முறையற்ற கடன்கள் கோட்டபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துக்கு பொறுப்பானது. அதேபோல் கொவிட் பெருந்தொற்று தாக்கத்தினால் பொருளாதார ரீதியில் மேலும் நெருக்கடிக்குள்ளானோம்.

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.மக்களின் உண்மை போராட்டத்தை ஒரு தரப்பினர் தங்களின் அரசியலுக்காக பயன்படுத்தி வெற்றிப் பெற்று தற்போது ஜனாதிபதியாகி அதிகாரத்தையும் கைப்பற்றியுள்ளார்கள்.

ஜனாதிபதித் தேர்தலில் கட்சியை பாதுகாக்க வேண்டும் என்பதை முன்னிலைப்படுத்தியே போட்டியிட்டோம். கட்சியின் சார்பில் களமிறங்காமல் பிற தரப்பினருக்கு ஆதரவழங்கியிருந்தால் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இன்று ஏற்பட்டுள்ள கதியே எமது கட்சிக்கும் ஏற்பட்டிருக்கும்.

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் கட்சியின் பெரும்பாலான சிரேஷ்ட உறுப்பினர்கள் பொதுத்தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று தீர்மானித்து இளம் தலைமுறையினருக்கும், புதியவர்களுக்கும் இடமளித்துள்ளார்கள்.

இதற்கமைய 40 வயதுக்கும் குறைவான 103 உறுப்பினர்களையும், 50 வயதுக்கும் குறைவான 164 உறுப்பினர்களையும், 24 பெண் பிரதிநிதிகளையும் வேட்பாளர்களாக களமிறக்கியுள்ளோம்.

பொதுத்தேர்தலின் பின்னர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பதவி நிலைகளில் மாற்றம் ஏற்படும். கட்சியின் அடிமட்ட உறுப்பினர்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை ஏற்படுத்துவோம்.

ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் வழங்கிய பொய்யான வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் அரசாங்கம் மூச்சுத் திணறுகிறது.

மாற்றத்தை எதிர்பார்த்து தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரத்தை வழங்கிய இளைஞர்கள் மற்றும் படித்த தரப்பினரது நிலையை கருதி கவலையடைகிறேன் என்றார்.

-இராஜதுரை ஹஷான்

Related posts

ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்த ஐக்கிய மக்கள் சக்தி!

சில மாகாணங்களுக்கு பி.ப 2 மணிக்கு பின்னர் மழை

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி, அடுத்த வாரம் நாட்டிற்கு