கேளிக்கை

பொன்னியின் செல்வன்: சுருக்கமான கதையாக..

(UTV | கொழும்பு) – தமிழ் சினிமாவில் மைல் கல்லாக உருவாகியுள்ள படம் பொன்னியின் செல்வன். சிறியவர் முதல் பெரியவர்கள் வரை கொண்டாடி பூரிக்கும் ஆர்வத்தில் திரைப்படம் பார்க்கவுள்ள நிலையில் பொன்னியின் செல்வன் கதையை சுருக்கமாக அறிந்து கொண்டு படம் பார்க்கச் சென்றால் புரிதலுக்கு ஏதுவாக இருக்கும் என்ற எண்ணத்திலும், அசல் பொன்னியின் செல்வன் கதை சினிமாவில் எப்படி காட்சிப் படுத்தப் பட்டுள்ளது என்பதையும் நீங்கள் ஒப்பீடு செய்யவும் ஏதுவாக இருக்கும் என்பதால் அரண்கள் சார்பில் இந்த முயற்சி.. இன்னும் படம் பார்க்கவில்லை. இருந்தாலும் சோழ வரலாறு சிறிதளவு தெரியும் என்பதை வைத்து இந்தப் பதிவு.

பொன்னியின் செல்வன் பேசும் சோழ சாம்ராஜ்யத்தின் கதையை எளிமையாக புரிய வைக்க வேண்டுமாயின் பராந்தக சோழர் காலத்தில் இருந்து துவங்கினால் போதும்.

சோழ சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி பராந்தகச் சோழர். இவருக்கு ராஜாதித்த சோழன், கண்டராதித்த சோழர் மற்றும் அரிஞ்சய சோழர் என்று மூன்று ஆண் வாரிசுகள். (மூன்று பெண் பிள்ளைகளும் இருந்தார்கள்) பராந்தக சோழருக்கு பின்னர் சோழ அரியணை ஏற வேண்டிய இராஜாதித்த சோழர் போரில் மரணமடைந்து விட, கண்டராதித்தர் சோழ மன்னர் ஆகிறார். அவருக்கு குழந்தை கிடையாது. மதுராந்தகர் எனும் ஆண் குழந்தையை தத்து எடுத்து வளர்த்ததாக சொல்லப்படுகிறது.

அதே நேரம் கண்டராதித்தர் இறந்தபோது மதுராந்தக சோழர் குழந்தையாக இருந்தார் என்பதால் அரிஞ்சய சோழர் அரியணை ஏறியதாகவும் சொல்லப்படுகிறது. அந்த வகையில் கண்டராதித்தருக்கு பிறகு அரிஞ்சய சோழர் மன்னராகிறார். அரிஞ்சய சோழர் மகன் தான் சுந்தர சோழர். இவர் தான் பொன்னியின் செல்வன் கதையில் ராஜ ராஜ சோழனின் தந்தை(பிரகாஷ் ராஜ்). சுந்தர சோழருக்கு ஆதித்த கரிகாலன் (விக்ரம்) குந்தவை (த்ரிஷா) மற்றும் அருள்மொழி வர்மன் (ஜெயம் ரவி)ஆகிய மூன்று குழந்தைகள். அருள்மொழி வர்மன் தான் ராஜ ராஜ சோழன் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.

சுந்தர சோழரின் தலைமை அமைச்சர் பெரிய பழுவேட்டரையர் (சரத்குமார்). பெரிய பழுவேட்டரையரின் தம்பி சின்ன பழுவேட்டரையர் (பார்த்திபன்) கோட்டையின் பாதுகாப்பு அமைச்சர். இரண்டு பழுவேட்டரையர்களும் தான் பொன்னியின் செல்வன் கதையில் வில்லன்கள்.

சுந்தரர் சோழர் பழுவேட்டரையர் களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் தலைமகன் ஆதித்த கரிகாலன் தஞ்சைக்கு வர விரும்பாமல், காஞ்சியில் இருந்து கொண்டு போரே வாழ்க்கை என்று இருந்து வருகிறான். குந்தவையும் பழுவேட்டரையர்களை விரும்புவது இல்லை. அருள்மொழி வர்மன் சோழர்களின் ஆட்சிக்கு உட்பட்ட இலங்கையில் நிலவும் அமைதியின்மையை சரி செய்வதற்காக இலங்கைக்கு செல்கிறான். இலங்கை அப்போது லங்கா என்று அழைக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில் சுந்தர சோழர் நோய்வாய்ப்பட, அவருக்குப் பிறகு சோழ சாம்ராஜ்யத்தின் அரியணை ஏறப்போவது யார் என்பதை பல்வேறு டுவிஸ்ட்டுகள் வைத்து கதை நகரும்.
கதையின் மிக முக்கிய கதாபாத்திரங்கள் என்றால் வந்தியத் தேவனும் நந்தினியும் தான். வந்தியத் தேவன் ஆதித்த கரிகாலனின் நண்பன் (கார்த்தி). நந்தினி பெரிய பழுவேட்டரையர் மனைவி. முன்னதாக அவர் பாண்டிய மன்னன் வீரபாண்டியன் (நாசர்) மனைவி. அவரை ஆதித்த கரிகாலன் போரில் கொன்று விடுவான். அதற்கு முன்பாக நந்தினி மீது ஆதித்த கரிகாலனுக்கு ஒரு கிரஷ் 😜. தன் கணவனை கொன்ற சோழ சாம்ராஜ்யத்தை அழிக்க வேண்டும் என்ற சதித்திட்டத்தோடு தான் நந்தினி பெரிய பழுவேட்டரையரைத் திருமணம் முடித்து சோழ அரண்மனைக்குள் நுழைகிறார்.

இது ஒரு புறம் இருக்க பெரிய பழுவேட்டரையர் சுந்தர சோழருக்கு பிறகு, கண்டாராதித்தர் மகனான மதுராந்தக சோழனை அரசராக்கி அதிகாரத்தை அவர்கள் கைப்பற்ற நினைக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில் ஆதித்த கரிகாலன் தனது தந்தைக்கும், தங்கை குந்தவைக்கும் ஒலை அனுப்பி அந்த ஓலை கொண்டு வரும் தூதுவனாக தான் வந்தியத் தேவன் சோழ தேசம் நுழைகிறான். அரண்மனையில் நிலவும் சூழல், பழுவேட்டரையர், நந்தினி இவர்களின் சூழ்ச்சி இவைகளை அறிந்து சூழ்நிலையை சமாளிக்க அருள்மொழி வர்மன் சோழ தேசம் திரும்பி வருமாறு தூது வந்த வந்தியத் தேவனை இலங்கைக்கு அனுப்புகிறார் குந்தவை.
இடையில் பழுவேட்டரையர் மற்றும் நந்தினி ஆகியோரின் சூழ்ச்சியில் ஆதித்த கரிகாலன் பாண்டியர்களின் ஆபத்துதவிகள் (பாண்டியர்கள் விசுவாசிகள்) மூலமாக கொல்லப்பட.. பழி வந்தியத் தேவன் மீது விழுகிறது..

வந்தியத் தேவன் தன் மீதான கொலைப் பழியில் இருந்து எப்படி மீண்டு வருகிறார், அருள்மொழி வர்மன் சோழ தேசத்தை பழுவேட்டரையர் மற்றும் நந்தினி ஆகியோரின் சதியில் இருந்து எப்படி மீட்கிறான் என்பது தான் பொன்னியின் செல்வன்.

பொன்னியின் செல்வன் அருள் மொழி வர்மன் எனும் இராஜராஜ சோழனின் பெருமை பேசுவதாக இருந்தாலும் கதையின் நாயகன் வந்தியத் தேவன் தான்.

சினிமாவில் எப்படி இருக்கு என்பதை நீங்களே படம் பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.
படம் பார்த்தவர்கள் அல்லது பொன்னியின் செல்வன் கதை ஏற்கனவே அறிந்தவர்கள் இந்தக் கதைச் சுருக்கம் எப்படி உள்ளது என்பதை கமென்ட்ல சொல்லுங்க.

முகநூலில் இருந்து : #அட்வகேட்_தங்கப்பாண்டியன்

Related posts

‘நான் வாக்களித்து விட்டேன் நீங்கள்?’ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட ரஹ்மான்…

நயன்தாராவுக்காக கலங்கிய சிவகார்த்திகேயன்

இலியானாவா இது?