காணாமல்போனோர் அலுவலகம் உட்பட தேசிய ஐக்கியம் நல்லிணக்கம் ஆகியவற்றிற்கான பொறிமுறைகள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவுள்ளதாக தேசிய ஒருமைப்பாட்டிற்கான பிரதியமைச்சர் முனீர் முலப்பர் தெரிவித்துள்ளார்.
காணாமல்போனோருக்கான அலுவலகம் போன்றவற்றை முன்னைய அரசாங்கம் அரசியல் நியமனங்களிற்காக பயன்படுத்தியது என தெரிவித்துள்ள பிரதியமைச்சர் தற்போதைய அரசாங்கத்தின் இந்த பொறிமுறைகள் தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதை உண்மையான நோக்கமாக கொண்டு செயற்படும் என குறிப்பிட்டுள்ளார்.
அனைத்தும் தற்போது மாறிவிட்டன, பத்துவருடங்களிற்கு முன்னர் காணப்பட்ட நிலை தற்போதில்லை, இந்த மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் விதத்தில் நாங்கள் மாறவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
காணாமல்போனோர் அலுவலகம் போன்றவற்றின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக நாங்கள் ஏனைய பல அமைச்சுக்களுடன் இணைந்து செயற்படவுள்ளோம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அரசியல் நலன்களை அடிப்படையாக கொண்டு நியமனங்களை மேற்கொண்டதால் காணாமல்போனோர் அலுவலகம் போன்றவை குறித்த மக்களின் நம்பிக்கைக்கு முன்னையை அரசாங்கம் பாதிப்பை ஏற்படுத்தியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சமூகத்தில் இந்த பொறிமுறைகள் குறித்து நம்பிக்கையின்மை நிலவுகின்றது, இதற்கு தீர்வை காண்பதற்கு பேச்சுவார்த்தைகள் மூலம் நம்பிக்கையை ஏற்படுத்தவேண்டும், இந்த அமைப்புகள் மிகவும் மந்தகதியில் செயற்படுகின்றன, இந்த செயற்பாடுகளை துரிதப்படுத்துவது அவசியம், என தெரிவித்துள்ள தேசிய ஒருமைப்பாட்டிற்கான பிரதியமைச்சர் முனீர்முலாபிர் முன்னைய அரசாங்கங்களிடம் தேசிய ஐக்கியம் போன்றவற்றை ஊக்குவிப்பதற்கான உறுதியான கொள்கை எதுவுமிருக்கவில்லை, நாங்கள் இதனை சரிசெய்வோம் என குறிப்பிட்டுள்ளார்.