அரசியல்உள்நாடு

பைசர் முஸ்தபாவின் நியமனம் தொடர்பில் பங்காளிக் கட்சிகளுக்கு அறிவிக்கப்படவில்லை – வஜிர அபேவர்தன

புதிய ஜனநாயக முன்னிணியின் தேசிய பட்டியல் உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் அதன் செயலாளருக்கு கிடையாது. பைசர் முஸ்தபாவின் நியமனம் தொடர்பில் பங்காளி கட்சிகளுக்கும் அறிவிக்கப்படவில்லை.

இது தொடர்பில் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

சமையல் எரிவாயு சின்னத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் பங்காளி கட்சி தலைவர்களுக்கிடையில் இணக்கப்பாடொன்று எட்டப்பட்டது. அதற்கமைய புதிய ஜனநாயக முன்னணி என்ற கட்சியுடன் ஒப்பந்தமும் கையெழுத்திடவும் தீர்மானிக்கப்பட்டது.

இந்த கூட்டணியின் செயலாளராக ஷர்மிலா பெரேராவிடம் குறித்த இணக்கப்பாட்டுடன் கூடிய ஒப்பந்தம் ஒப்படைக்கப்பட்டது. இன்றுவரை குறித்த ஒப்பந்தத்தின் பிரதிகள் எந்தவொரு பங்காளி கட்சிக்கும் வழங்கப்படவில்லை. அதேபோன்று ஒப்பந்தத்தை சமர்ப்பிக்கவும் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

தேசிய பட்டியல் உறுப்பினர் நியமனம் தொடர்பில் புதிய ஜனநாயக முன்னணியின் பங்காளி கட்சி தலைவர்களே தீர்மானிக்க வேண்டும். புதிய ஜனநாயக முன்னணியின் செயலாளருக்கு தேசிய பட்டியல் உறுப்பினரை நியமிப்பதற்கு எந்த அதிகாரமும் கிடையாது.

இந்த தீர்மானத்தை மீறி தேசிய பட்டியலுக்கான உறுப்பினர்களை நியமித்துள்ளமை நம்பிக்கை துரோகமாகும். இது அரசியல் சூதாகும். ரவி கருணாநாயக்கவின் நியமனம் தொடர்பில் அறிக்கை தயாரிப்பதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவின் அறிக்கை கிடைத்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்க எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபாவை தேசிய பட்டியல் உறுப்பினராக நியமித்தல் தொடர்பில் புதிய ஜனநாயக முன்னணியின் பங்காளி கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

-எம்.மனோசித்ரா

Related posts

நாடளாவிய ரீதியில் இன்று முதல் விசேட சோதனை நடவடிக்கைகள்

தமிழர்கள் அனைவருக்கும் சுபீட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்த தைப்பொங்கல் – ரணில் விக்ரமசிங்க

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பில் நீதிமன்ற உத்தரவு