உள்நாடு

பேருந்தில் வைத்து மாணவியின் கன்னத்தில் அறைந்த ஆசிரியை

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் பணியாற்றும் ஆசிரியை ஒருவர், மாணவி ஒருவரை பேருந்தில் வைத்து கன்னத்தில் அறைந்த சம்பவம் நேற்று (07) மாலை டிக்கோயா பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:

பாடசாலை நிறைவடைந்த பின்னர், ஹட்டனில் இருந்து டிக்கோயா போடைஸ் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தனியார் பேருந்தில், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் பயணித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, மாணவியின் கால் ஆசிரியையின் சேலையில் பட்டதால் ஆத்திரமடைந்த அந்த ஆசிரியை, பேருந்தில் வைத்து குறித்த மாணவியைத் தாக்கியுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான மாணவி, ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் ஆசிரியைக்கு எதிராக முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.

மேலும், அவர் டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்கு உள்ளான மாணவி, டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையில், சம்பவம் தொடர்பாக குறித்த ஆசிரியை விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பாடசாலை சீருடையில் பயணித்த மாணவியை ஆசிரியை தாக்கியதோடு, தகாத வார்த்தைகளையும் பயன்படுத்தியதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த மாதம், அரச பேருந்தில் பயணச்சீட்டு ஊடாக பயணித்த மாணவர்களை பேருந்திலிருந்து இறக்கிய சம்பவம் தொடர்பாக, அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்நிலையில், பொதுமக்கள் பயணிக்கும் பேருந்தில், சமூகத்திற்கு முன்மாதிரியாக விளங்க வேண்டிய ஆசிரியை ஒருவர் அநாகரிகமாக நடந்து கொண்ட சம்பவம் தொடர்பாக, கல்வி அமைச்சு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-சதீஸ்குமார்

Related posts

கொழும்பு வாழைத்தோட்டத்தின் ஓரு பகுதி மூடப்பட்டது [PHOTOS]

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டம் – அமைச்சர் விஜித ஹேரத் வெளியிட்ட தகவல்

editor

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2033 ஆக உயர்வு