அரசியல்உள்நாடு

பேரீச்சம் பழ விடுவிப்பில் அசௌகரியம் – சவூதியிடம் மன்னிப்புக் கோரிய இலங்கை

சவூதி அரேபியாவினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட பேரீச்சம் பழங்களை விடுவிப்பதில் ஏற்பட்ட அசௌகரியத்திற்கு இலங்கை அரசாங்கம் சவூதி அரேபியாவிடம் மன்னிப்பு கோரியுள்ளது.

இலங்கை அரசாங்கம் சார்பாக புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாசார அமைச்சர் ஹினிதும சுனில் செனவியினால் இந்த மன்னிப்புக் கோரப்பட்டது.

புனித ரமழான் மாதத்தில் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவுதினால் 50 மெட்ரிக் தொன் பேரீச்சம் பழங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன.

இந்த பேரீச்சம் பழங்களை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு கடந்த 27ஆம் திகதி திங்கட்கிழமை கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயத்தில் இடம்பெற்றது.

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாசார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி, துறைமுக, விமான சேவைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் விமல் ரத்நாயக்க, பிரதி அமைச்சர்களான முனீர் முழப்பர், அருண் ஹேமசந்திர, பிரதி சபாநாயகர் றிஸ்வி சாலி, பாராளுமன்ற உறுப்பினர்களான றிசாத் பதியுதீன் மற்றும் காதர் மஸ்தான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே பேரீச்சம் பழங்களை விடுவிப்பதில் ஏற்பட்ட அசௌகரியத்திற்கு புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாசார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி சவூதியிடம் மன்னிப்புக் கோரினார்.

இந்த விசேட பேரீச்சம் அன்பளிப்பு இலங்கைக்கு மிகப் பெரியதொரு உதவியாகும். இதன் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டார். இந்த மிகப் பெரிய அன்பளிப்பிற்காக சவூதி அரேபியாவிற்கு இதற்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவிக்கின்றோம் எனவும் அமைச்சர் கூறினார்.

அடுத்த தடவை அன்பளிப்புச் செய்யப்படுகின்ற பேரீச்சம் பழங்களை விடுவிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் சரியானை முறையில் மேற்கொள்ளப்படும் என அவர் இதன்போது உறுதியளித்தார்.

இந்த வருட பேரீத்தம் பல விநியோகம் வெளிப்படைத்தன்மையாக முன்னெடுக்கப்படவுள்ளது. நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் கிடைக்கும் வகையில் 25 மாவட்டங்களிலுள்ள 2,741 பள்ளிவாசல்கள் ஊடாக இந்த பேரீத்தம் பழங்கள் பகிர்ந்தளிக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த பேரீத்தம் பழ அன்பளிப்பு இரு நாடுகளும் இடையிலான உறவினை மேலும் வலுப்படுத்தும் என இலங்கைக்கான சவூதி அரேபியா தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி இதன்போது தெரிவித்தார்.

சவூதி அரேபியாவின் உயர் தரமான பேரீச்சம் பழங்களே இலங்கைக்கு அந்நாட்டினால் அன்பளிப்புச் செய்யப்படுவதாகவும் தூதுவர் குறிப்பிட்டார். மன்னர் சல்மான் மனிதாபிமான உதவிகள் மற்றும் நிவாரணங்களுக்கான மையத்தின் பிரதிநிதிகளும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

Related posts

தரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் புதிய தகவல்

மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசிகள் நாட்டுக்கு

வெள்ளவத்தையில் மாடியில் இருந்து விழுந்த பெண் பலி