அநுராதபுரம் போதனா வைத்தியசாலை சம்பவம் வீடுகளிலும், பொது இடங்களிலும், பணியிடங்களிலும் பெண்களின் பாதுகாப்பினை உடனடியாக உறுதிப்படுத்தவேண்டியதன் அவசியத்தை நினைவுறுத்துகிறது.
அதற்கமைய பெண்களைப் பாதுகாப்பதற்கும், குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறச்செய்வதற்கும், பெண்கள் பாதுகாப்பாக உணரக்கூடிய சூழலைக் கட்டியெழுப்புவதற்கும் ஏதுவான செயற்திறன்மிக்க பொறிமுறையை உருவாக்கவேண்டும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.
அநுராபுரம் போதனா வைத்தியசாலையின் பெண் வைத்தியர்கள் விடுதியில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் நாடளாவிய ரீதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இதுகுறித்து முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அவரது எக்ஸ் தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கிறார். அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பதிவாகியிருக்கும் மிகமோசமான சம்பவம் குறித்து அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைகிறேன்.
இது அரிதாகப் பதிவானதொரு குற்றச்செயல் அல்ல.
மாறாக இச்சம்பவம் எமது நாட்டில் வீடுகளிலும், பொது இடங்களிலும், பணியிடங்களிலும் பெண்களின் பாதுகாப்பினை உடனடியாக உறுதிப்படுத்தவேண்டியதன் அவசியத்தை நினைவுறுத்தும் சமிக்ஞையாக அமைந்திருக்கிறது.
இந்நிலையில் ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சுமத்துவதற்குப் பதிலாக, பெண்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்குரிய அர்த்தமுள்ள நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டிய தருணம் இதுவாகும்.
பெண்களைப் பாதுகாப்பதற்கும், குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறச்செய்வதற்கும், பெண்கள் பாதுகாப்பாக உணரக்கூடிய சூழலைக் கட்டியெழுப்புவதற்கும் ஏதுவான செயற்திறன்மிக்க பொறிமுறையை உருவாக்கவேண்டும்.
பெண்களுக்கு மதிப்பளித்தல் மற்றும் அவர்களது கௌரவத்தைப் பாதுகாத்தல் என்பன ஆச்சரியமளிக்கக்கூடிய விடயங்கள் அல்ல. மாறாக அவை எமது சமூகக்கட்டமைப்பின் அடிப்படையாக இருக்கவேண்டும்.
அதன்படி உண்மையிலேயே மரியாதை, நீதி மற்றும் சமத்துவ கலாசாரத்தையுடைய சமூகத்தைக் கட்டியெழுப்பும் வரை, நாம் இன்னமும் வெகுதூரம் பயணிக்கவேண்டியிருக்கும்.
அதேபோன்று நாம் பெண்கள் பாதுகாப்பை முன்னிறுத்தித் தொடர்ந்து போராடும் அதேவேளை, பாதிக்கப்பட்ட தரப்பினரின் தனியுரிமையைப் பேணுவதிலும் மிகுந்த அவதானத்துடன் செயற்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.