உள்நாடு

புலனாய்வுத்துறை முன்னாள் பணிப்பாளரின் சாட்சியங்களை ரிப்கான் பதியுதீன் நிராகரிப்பு

(UTV | கொழும்பு) – ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் பயங்கரவாதி சஹ்ரான், கடல் மார்க்கமாக தப்பிச் செல்வதற்கு 2018 இல் உதவியதாக தன்னைத் தொடர்புபடுத்தி, புலனாய்வுத் துறை முன்னாள் பணிப்பாளர், ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்துள்ளமை உண்மைக்குப் புறம்பானதென்றும், தடுப்புக் காவலிலுள்ள தனது சகோதரரைப் பழிவாங்கவே, இவ்வாறு போலிச் சாட்சியம் வழங்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

எதுவித சம்பந்தமும் இல்லாமல், தனது பெயரை பாவித்துள்ள புலனாய்வுத் துறை முன்னாள் பணிப்பாளரின் சாட்சியங்கள் தொடர்பில், ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கவும், தனது விளக்கத்தை தெரிவிக்கவும் தனக்கும் அவகாசம் வழங்கப்பட வேண்டுமென்றும் ரிப்கான் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்துவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், நேற்று காலை (22) முதல், இன்று அதிகாலை ஒரு மணிவரை சாட்சியமளித்த புலனாய்வுத் துறை முன்னாள் பணிப்பாளர், சஹ்ரான் கடல் மார்க்கமாக தப்பிச் செல்வதற்கு, 2018 ஆம் ஆண்டு ரிப்கான் பதியுதீன், மன்னார் துறையில் படகு வழங்கி உதவியதாகச் சாட்சியமளித்தார். இவர் வழங்கிய சாட்சியம் தொடர்பில், இன்று பல ஊடகங்கள் செய்திகளையும் வௌியிட்டுள்ளன.

இது தொடர்பில் அதிர்ச்சியடைந்த ரிப்கான் பதியுதீன், “அரசியல் பழிவாங்கல் காரணமாக இச்சாட்சியங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனை முற்றாக நிராகரிக்கின்றேன். இது குறித்து, தனக்கும் விளக்கமளிக்க அவகாசம் வழங்கப்பட வேண்டும். தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள எனது சகோதரர் ரியாஜ் பதியுதீனை திட்டமிட்டு பழிவாங்கவே, எனது பெயரையும் இவ்விடயத்தில் சம்பந்தப்படுத்தியுள்ளனர்.

எனவே, புலனாய்வுத் துறை முன்னாள் பணிப்பாளர் நேற்று வழங்கிய சாட்சிகள் அனைத்தையும் முற்றாக நிராகரிக்கிறேன். இதுபற்றிய அதிருப்தியை ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரிவிக்க எனக்கும் அவகாசம் வழங்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பில், ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ரிப்கான் பதியுதீன் எழுத்துமூலம் வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளார்.

-ஊடகப்பிரிவு-

Related posts

தேசியப் பட்டியல் மூலமாக பாராளுமன்றம் செல்ல மாட்டேன் – சுமந்திரன்

editor

தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்காக பாடுபட்ட அரச உத்தியோகத்தர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் – ரஞ்சித் மத்தும பண்டார.

editor

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 1255 முறைப்பாடுகள்