பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மகள் புத்தாண்டு விடுமுறைக்காக யாழ்ப்பாணம் சென்ற போது, அவரை அழைத்து வரச்சென்ற தந்தை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
புன்னாலைக்கட்டுவான் வடக்கு சந்திக்கு அருகில் 12ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்தில் கிழக்கு பலாலியைச் சேர்ந்த கந்தவனம் செல்வநாயகம் (வயது 62) என்பவர் உயிரிழந்துள்ளார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இருந்து புத்தாண்டு விடுமுறைக்காக யாழ்ப்பாணத்துக்கு பேருந்தில் சென்ற மகளை அழைத்துச் செல்வதற்காக, உயிரிழந்த நபர் அதிகாலையில் பலாலியில் உள்ள தனது வீட்டிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
அப்போது மழை பெய்து கொண்டிருந்த நிலையில், பழுதடைந்து வீதியில் நிறுத்தப்பட்டிருந்த உழவு இயந்திரப் பெட்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பாக உழவு இயந்திரத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.