விளையாட்டு

பி.எஸ்.ஜி. அணியானது அரை இறுதிக்கு தகுதி

(UTV | லிஸ்பன்) – சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில், பி.எஸ்.ஜி. அணியானது 25 ஆண்டுக்கு பிறகு அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

கிளப் அணிகளுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் இறுதிகட்ட ஆட்டங்கள் போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் பி.எஸ்.ஜி. எனப்படும் பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பிரான்ஸ்) அணியும், அடலன்டா அணியும் (இத்தாலி) மோதின.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 27-வது நிமிடத்தில் அடலன்டா வீரர் மரியோ பாசலிக் கோல் அடித்தார். பந்தை கட்டுப்பாட்டில் (61%) வைத்திருப்பதிலும், கோல் கம்பத்தை முற்றுகையிட்டு ஷாட் அடிப்பதிலும் பி.எஸ்.ஜி. அணியே ஆதிக்கம் செலுத்தியது. இருப்பினும் எதிரணியின் தடுப்பு அரணை அவ்வளவு எளிதில் உடைக்க முடியவில்லை. நெய்மார், கைலியன் பாப்பே ஆகிய நட்சத்திர வீரர்கள் கடுமையாக முயற்சித்தும் பந்தை வலைக்குள் திருப்ப முடியவில்லை. அவர்களது சில ஷாட்களை அடலன்டா கோல் கீப்பர் மார்கோ ஸ்போர்ட்டில்லோ முறியடித்தார்.

அடலன்டா வெற்றியை நெருங்கிய சமயத்தில் பி.எஸ்.ஜி. வீரர் நெய்மார் தட்டிக்கொடுத்த பந்தை மர்கியூனோஸ் (90-வது நிமிடம்) கோலாக்கி ஆட்டத்தின் போக்கை மாற்றினார். அதைத் தொடர்ந்து காயம் உள்ளிட்ட விரயத்துக்காக 5 நிமிடங்கள் கூடுதலாக ஒதுக்கப்பட்டது.

இந்த கூடுதல் நிமிடத்தில் மற்றொரு பி.எஸ்.ஜி. வீரர் சோவ்போ மோட்டிங் கோல் போட்டு அசத்தினார். முடிவில் பி.எஸ்.ஜி. அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன்ஸ் லீக்கில் 25 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக அரைஇறுதிக்குள் நுழைந்தது. பி.எஸ்.ஜி. அணி கடைசியாக 1995-ம் ஆண்டில் அரைஇறுதியில் விளையாடி அதில் தோல்வி கண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

உலகக்கிண்ண றக்பி – சில போட்டிகள் இரத்து

பிரபல கால்பந்து பயிற்சியாளருக்கு கொரோனா

கிறிஸ் கெயிலுக்கு அடித்த திடீர் அதிர்ஷ்டம்