வகைப்படுத்தப்படாத

பிரேசில் அணை உடைந்த விபத்தில் உயிரிழப்பு 99 ஆக உயர்வு

(UTV|BRAZIL)-பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள புருமாடின்கோ நகரம் அருகே தனியாருக்கு சொந்தமான இரும்புத்தாது சுரங்கம் உள்ளது. சுரங்கத்தின் அருகில் பயன்படுத்தப்படாமல் இருந்த ஒரு அணை கடந்த 25-ம் தேதி திடீரென உடைந்தது. அணையில் இருந்த தண்ணீரும், சேறும் சகதியுமாக பெருக்கெடுத்து வெளியேறியது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அணை வளாகத்தில் இருந்த உணவகம் சகதியில் முழுவதும் புதைந்தது.

இதுதவிர அணையை ஒட்டியுள்ள பகுதியில் இருந்த நிறுவனங்கள், தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளில் பெருமளவிலான சகதி  நிரம்பியதால், அவர்களின் வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்தன.

இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சாலைகள் சேதமடைந்ததால், அப்பகுதியில் சகதியில் சிக்கிய பொதுமக்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். பாதுகாப்பு காரணமாக அங்கு வசிக்கும் பலர் வெளியேற்றப்பட்டனர்.

உள்ளூர் ஊடகத்தில் நேற்று மாலை வெளியான தகவலின்படி, அணை விபத்தில் உயிரிழப்பு 99 ஆக உயர்ந்துள்ளது. மேலும், தொழிலாளர்கள், ஒப்பந்ததாரர்கள், பொதுமக்கள் என 259 பேரைக் காணவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர். உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மற்றவர்களையும் அடையாளம் காணும் பணி நடைபெறுகிறது.

காணாமல் போனவர்களில் பெரும்பாலானோர் சேறு சகதிக்குள் சிக்கியிருக்கலாம் என்பதால் உயிர்பிழைக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணி நடைபெறுகிறது. அணையில் இருந்து பெருக்கெடுத்து ஓடிய சேறு சகதியுடன் கூடிய சுரங்க கழிவுநீரானது, அருகில் உள்ள பராபிபா ஆற்றில் கலந்துள்ளதால் ஆற்று நீரும் மாசடைந்துள்ளது. ஏராளமான மீன்கள் செத்து மிதக்கின்றன.

 

 

 

 

Related posts

ஊடக உரிமைகள் மற்றும் நியமங்கள் தொடர்பான சட்டமூலத்தை வகுக்க அமைச்சரவைக்குழு

ஜனாதிபதி, அவுஸ்திரேலிய பிரதமர் சந்திப்பு

முதன் முறையாக காஷ்மீர் முஸ்லிம் பெண் விமானி ஆகிறார்