வகைப்படுத்தப்படாத

பிரெக்ஸிட் தீர்மானம் மூன்றாவது முறையாக தோல்வி…

ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரிட்டன் பிரதமர் தெரசா மே செய்துகொண்ட பிரெக்சிட் உடன்படிக்கை மூன்றாவது முறையாக அந்நாட்டு பாராளுமன்றத்தில் தோல்வி அடைந்துள்ளது.

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேறும் ‘பிரெக்சிட்’ உடன்படிக்கை யின் காலக்கெடு 29 ஆம் திகதியுடன் முடிவடைகிறது. ஆனால் பிரெக்சிட்டுக்காக ஐரோப்பிய கூட்டமைப்புடன் பிரிட்டன் பிரதமர் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தத்தை 2 முறை அந்நாட்டு பாராளுமன்றம் பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் நிராகரித்துவிட்டது.

மேலும், ஒப்பந்தம் இல்லா ‘பிரெக்சிட்’ தீர்மானமும் 2 முறை நிராகரிக்கப்பட்ட நிலையில், பிரெக்சிட் நடவடிக்கையை தாமதப்படுத்துவதற்கான தீர்மானம் சமீபத்தில் பிரிட்டன் பாராளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேறியது. இதனால் பிரெக்சிட்டின் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டுமென தெரசா மே ஐரோப்பிய கூட்டமைப்பிடம் கோரிக்கை வைத்தார். இதனை ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைவர் ஏற்றுக் கொண்டார்.

‘பிரெக்சிட் ஒப்பந்தத்தை பிரிட்டன் பாராளுமன்றம் ஆதரித்தால் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற மே மாதம் 22 ஆம் திகதி வரை காலக்கெடு வழங்கப்படுகிறது. மாறாக அந்த ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டால் ஏப்ரல் 12 ஆம் திகதிக்குள் பிரிட்டன் வெளியேறியாக வேண்டும்’ என்று ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைவர் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில், பிரெக்சிட் தொடர்பாக 8 மாற்று உடன்படிக்கைகளை எம்பிக்கள் முன்வைத்தனர். ஆனால் இந்த உடன்படிக்கைகளுக்கும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கவில்லை. அனைத்தும் நிராகரிக்கப்பட்டன.

இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரிட்டன் பிரதமர் தெரசா மே செய்துகொண்ட பிரெக்சிட் உடன்படிக்கை தொடர்பாக மூன்றாவது முறையாக அந்நாட்டு பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பும் தோல்வியில் முடிந்தது.

இன்று பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு முன்வைக்கப்பட்ட உடன்படிக்கைக்கு எதிராக 344 எம்.பி.க்களும், ஆதரவாக 286 எம்.பி.க்களும் வாக்களித்தனர்.

மூன்றாவது முறையாகவும் இந்த ஒப்பந்தம் பிரிட்டன் பாராளுமன்றத்தில் தோல்வி அடைந்துள்ள நிலையில், ஏப்ரல் 10 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தில் இடம்பெற்றுள்ள நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் அவசர கூட்டத்துக்கு டொனால்ட் டஸ்க் அழைப்பு வித்துள்ளார்.

 

 

 

Related posts

Postal strike this evening

spill gates of Upper Kotmale Reservoir opened

“PSC will reveal truth of Easter Sunday attacks” – Premier