இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களை விசாரிக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறும் வரை, நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்வதற்கு சர்வதேச நடவடிக்கை அவசியம் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு பிரதானி உட்பட நான்கு நபர்கள் மீது ஐக்கிய இராச்சியம் விதித்த தடைகள் குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளது.
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைச் சேகரித்து பொறுப்புக்கூறலைக் கோருவதற்காக பிரித்தானியா உட்பட பல நாடுகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தொடர்ச்சியான திட்டங்களை சமர்ப்பித்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இந்த விடயத்தில் இலங்கை எவ்வித முயற்சியும் எடுக்காத வரை, சர்வதேச நாடுகள் தொடர்ந்து தடைகளை விதிக்க வேண்டிய நிலை உருவாகும் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் போர்க்குற்றங்களை விசாரணை செய்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையிடம் ஏற்கனவே உள்ள ஆதாரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டின் உள்நாட்டுப் போரின் போது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்னாள் பாதுகாப்புப் படை பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூர்ய ஆகியோர் மீது திங்கட்கிழமை ஐக்கிய இராச்சியம் தடைகளை விதித்தது.
அத்தோடு, விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் தலைவரான கருணா அம்மான் என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் மீதும் ஐக்கிய இராச்சியம் தடைகளை விதித்துள்ளது.
இந்த விடயத்தில் தனது அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்திய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத், பிற நாடுகளால் எடுக்கப்படும் இத்தகைய ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் இலங்கையில் உள்நாட்டு நல்லிணக்க செயல்முறைக்கு எந்த ஆதரவையும் வழங்காது என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட, தான் உட்பட இரண்டு முன்னாள் இராணுவத் தளபதிகளுக்கு எதிராக ஐக்கிய இராச்சியம் விதித்த தடைகள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த நாட்டின் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அதன் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கும் பல தசாப்தங்களாக தாம் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருவதாக தெரிவித்தார்.
போர்க்களத்திலும், தேசிய பாதுகாப்பு விடயங்களிலும், வெளிப்புற தலையீட்டிலிருந்து நாட்டைப் பாதுகாப்பதிலும் உறுதியாக நின்றதற்காக ஐக்கிய இராச்சியம் விதித்த அநீதியான தடைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தத் தடைகள் எந்தவொரு வெளிப்படையான விசாரணை அல்லது சட்ட நடவடிக்கையின் அடிப்படையில் இல்லை என்றும், இலங்கையின் போர் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த தனிநபர்களை குறிவைத்து சர்வதேச அளவில் மேற்கொள்ளப்படும் அழுத்தமெனவும் வசந்த கரன்னாகொட தெரிவித்தார்.
இவ்வாறான சவால்கள் இருந்தபோதிலும், இலங்கைக்காக பணியாற்றுவதில் தான் உறுதியாக இருப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.