உள்நாடு

பிரிட்டனின் இணையனுசரணை நாடுகளுடனான சந்திப்பில் எம்.ஏ.சுமந்திரன் பங்கேற்பு!

(UTV | கொழும்பு) –

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடருக்கு முன்னரான நாடுகளுடனான சந்திப்பு இன்று ஜெனிவாவில் நடைபெறவுள்ள நிலையில், அதில் கலந்துகொள்வதற்காக இலங்கை தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நேற்று ஜெனிவா பயணமானார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் எதிர்வரும் 11ஆம் திகதி ஆரம்பமாகி, ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி வரையான ஒரு மாத காலத்துக்கு நடைபெறவுள்ளது. பேரவை அமர்வின் தொடக்க நாளான 11ஆம் திகதியன்று ஏற்கனவே இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ என்ற தலைப்பிலான 511 தீர்மானத்தின் உள்ளடக்க அமுலாக்கத்தில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் எழுத்துமூல அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதனைத் தொடர்ந்து இலங்கை தொடர்பான கலந்துரையாடல் ஒன்றும் நடைபெறும்.

இவ்வாறானதொரு பின்னணியில் பிரிட்டன் தலைமையிலான அமெரிக்கா, கனடா, ஜேர்மனி, வட மெசிடோனியா, மாலாவி மற்றும் மொன்ரனேக்ரோ ஆகிய இணையனுசரணை நாடுகள் கடந்த வாரம் அரசியல் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடனான மெய்நிகர் முறைமையிலான சந்திப்பொன்றை ஏற்பாடு செய்யும் என்றும், இதன்போது இலங்கையின் தற்போதைய மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் கேட்டறியப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அச்சந்திப்பு நடைபெறவில்லை. இந்நிலையில் மெய்நிகர் முறைமையில் நடாத்துவதற்குத் திட்டமிட்டிருந்த அச்சந்திப்பை நேரடியாகவே நடாத்துவதற்கு இணையனுசரணை நாடுகள் தீர்மானித்துள்ளன. அதன்படி, பிரிட்டனின் ஏற்பாட்டில் ஜெனிவாவில் இன்றைய தினம் நடைபெறவுள்ள நாடுகளுடனான சந்திப்பில் கலந்துகொள்வதற்காக இலங்கை தமிழரசு கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நேற்று செவ்வாய்கிழமை ஜெனிவா பயணமானார். சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரதிநிதி ஒருவருக்கும் இச்சந்திப்பில் கலந்துகொள்வதற்கு அழைப்புவிடுக்கப்பட்டிருப்பதாக அறியமுடிகிறது.

இதன்போது இலங்கையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்குப் பதிலாக அதற்கு எதிர்மறையான சூழ்நிலையொன்று அரசாங்கத்தினால் தோற்றுவிக்கப்பட்டிருப்பதாக இணையனுசரணை நாடுகளின் பிரதிநிதிகளிடம் எடுத்துரைக்கப்படவிருப்பதுடன் தேர்தல்களை நடத்துவதில் நிலவும் காலதாமதம் மற்றும் அதன் விளைவாக நாட்டு மக்களின் ஜனநாயக இடைவெளி புறக்கணிக்கப்பட்டுள்ளமை, வட- கிழக்கு மாகாணங்களில் தொடரும் நில அபகரிப்பு, குருந்தூர் மலை, தையிட்டி உள்ளிட்ட பகுதிகளில் பௌத்த விகாரைகளை நிர்மாணிப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் என்பன உள்ளடங்கலாக அண்மைய காலங்களில் நாட்டில் இடம்பெறும் அடக்குமுறைகள் குறித்தும் அவர்களுக்கு தெரியப்படுத்தப்படவுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சுமார் 2000 பொலிஸார் விஷேட கடமையில்

கிழக்குப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நிறைவு!

மைத்திரியின் புதிய கூட்டணி