அரசியல்உள்நாடு

பிரதமர் ஹரிணியின் நடவடிக்கையை கண்டிக்கிறோம் – நிமல்கா பெர்னாண்டோ

அரச நிர்வாகம் தொடர்பில் எந்த அனுபவமும் இல்லாத பிரதமர் ஹரிணி, சிரேஷ்ட அரசியல் தலைவரான ரணில் விக்ரமசிங்க சொல்லவந்த விடயத்தை புரிந்துகொள்ளாமல் அவரை விமர்சித்து வருவதை வன்மையாக கண்டிக்கிறோம்.

அரச நிர்வாக நடைமுறை தொடர்பில் அவருக்கு ரணில் விக்ரமசிங்கவிடம் கற்றுக்கொள்ள முடியாது என்றால் ஜனாதிபதி அநுரகுமாரவிடமாவது கற்றுக்கொண்டு பதிலளிக்க வேண்டும் என புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் உறுப்பினர் நிமல்கா பெர்னாண்டோ தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள புதிய ஜனநாயக முன்னணி தேர்தல் வழிநடத்தல் காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றவுடன் அடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்து அதன் மூலம் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருந்தார்.

அதற்கான அமைச்சரவை அனுமதியும் பெறப்பட்டிருந்தது. அமைச்சரவை அனுமதித்த விடயத்தை நடைமுறைப்படுத்த வேண்டியது விடயத்துக்கு பொறுப்பான அமைச்சின் செயலாளரின் பொறுப்பாகும். அதுதான் அரச நிர்வாக நடைமுறையாகும்.

ஆனால் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ரணில் விக்ரமசிங்க தெரிவித்த விடயங்கள் பொய் எனவும் அமைச்சரவையின் தீர்மானத்தை மறுப்பதாகவும் தெரிவித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய ரணில் விக்ரமசிங்கவை விமர்சித்து வருகிறார்.

பிரதமர் ஹரிணிக்கு அரசியல் அனுபவம் இல்லை. அரச நிர்வாக நடைமுறைகள் தெரியாது. அவர் தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம் வந்தவர்.

அவர் ஒரு படித்த ஒருவர் என நாங்கள் அவர் தொடர்பில் சந்தோசப்பட்டபோதும், நாட்டின் சிரேஷ்ட அரசியல் தலைவர், இந்த நாட்டில் பல தடவைகள் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவை அவர் மோசமான முறையில் விமர்சித்து வருவதை காணும்போது அவர் தொடர்பில் இருந்து வந்த நல்லெண்ணம் இல்லாமல் போயிருக்கிறது. அவரது அகங்காரத்தையே இது எடுத்துக்காட்டுகிறது.

நாட்டின் அரசியல் யாப்பு தொடர்பில் அவருக்கு போதிய அறிவு இல்லாததாலே அமைச்சரவையின் தீர்மானம் குறித்து அவர் பொய் குற்றச்சாட்டு தெரிவித்து வந்தார்.

அதனாலே அரசியல் யாப்பு தொடர்பில் கற்றுக்கொடுப்பதற்கு தயார் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார். பிரதமருக்கு ரணில் விக்ரமசிங்கவிடம் கற்றுக்கொள்ள தேவையில்லை என்றால், அவர்களின் கட்சியில் அரச நிர்லாகம் தொடர்பில் கொஞ்சமேனும் அனுபவமுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரிடமாவது கேட்றிந்து பதிலளித்திருக்க வேண்டும்.

நாட்டில் புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க வேண்டும் என தெரிவித்து வரும் பிரதமர், இவ்வாறு மோசமான முறையில் செயற்படுவது, அவர்களின் கட்சியின் உண்மையான சுயரூபத்தையே எடுத்துக்காட்டுகிறது. எந்த அரசியல் அனுபவம் இல்லாத பிரதமர் ஹரிணி, சிரேஷ்ட அரசியல் தலைவரை விமர்சிப்பதை நாங்கள் கண்டிக்கிறோம்.

அத்துடன் வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு மேற்கொள்வதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவிக்கிறார். ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் எந்த ஆலாலோசனையும் இல்லாமல் அதனை செய்ய முடியாது.

அவ்வாறு சம்பள அதிகரிப்பு செய்வதாக இருந்தால் உதய செனவிரத்ன குழுவின் பரிந்துரைக்கமையவே மேற்கொள்ள வேண்டும் என்றார்.

-எம்.ஆர்.எம்.வசீம்

Related posts

பலாங்கொடை மண்சரிவு – காணாமல் போனோரை மீட்கும் பணிகள் ஆரம்பம்

பெரும்பாலான பகுதிகளில் மழை

4பேர் கொண்டவர்கள் வற் வரி எவ்வளவு செலுத்த வேண்டுமென தெரியுமா?