உள்நாடுசூடான செய்திகள் 1

“பாராளுமன்றை கலைக்க மாட்டோம்” பிரதமர்

(UTV | கொழும்பு) –

அரசியலமைப்பில் இல்லாத விடயங்களை தெரிவித்து நாட்டைத் தவறாக வழிநடத்த வேண்டாம். பொறுப்பற்ற வகையிலான கருத்துக்களை கூறி இளைஞர்களை ஏமாற்ற முடியாது. இந்த அரசாங்கம் கட்சிகள் பல இணைந்து இணக்கப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் பாராளுமன்றத்தை கலைக்க முடியாது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (நவ. 16) இடம்பெற்ற வரவு -செலவுத் திட்டம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பாராளுமன்றத்தைக் கலைக்குமாறு எதிர்க்கட்சி எம் பி ஹர்ஷ டி சில்வா சபையில் உரையாற்றும் போது தெரிவித்திருந்தார். ஐக்கிய அமெரிக்காவைப் போன்று தேர்தலை நடத்துமாறும் அவர் கோரியிருந்தார். அமெரிக்க அரசியலமைப்பில் கூட இவ்வாறான விடயம் கிடையாது என்பதை நான் குறிப்பிட விரும்புகின்றேன்.

 

எமது அரசியலமைப்பில் இல்லாத விடயங்களை தெரிவித்து நாட்டைத் தவறாக வழிநடத்த அவர் முயற்சிக்கின்றார். பொறுப்பற்ற வகையிலான கருத்துக்களை கூறி இளைஞர்களை ஏமாற்ற முடியாது என்பதனை அவருக்கு நான்ணதெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

இந்த அரசாங்கம் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, மகஜன எக்சத் பெரமுன, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், ஈபிடிபி, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெரும்பான்மையான குழு ஆகியவற்றின் எம்.பிக்கள் இணைந்ததாக அமைக்கப்பட்ட கூட்டு அரசாங்கமாகும். இதனை நீங்களும் ஏற்றுக்கொண்டுள்ளீர்கள். இது இணக்கப்பாடுகளுடன் அமைக்கப்பட்ட அரசாங்கமாகும். அதனைக் கலைக்க வேண்டிய அவசியம் இல்லை.

அத்துடன் மிகவும் சவாலுக்கு மத்தியில் முன்வைக்கப்பட்டிருக்கும் வரவு செலவுத் திட்டத்தில் எதுவும் கிடையாது என்று எவரும் கூற முடியாது.

எமது நாட்டில் நிலவும் வசதி உள்ளோர் மற்றும் வசதியற்றோருக்கிடையிலான இடைவெளியை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதை நிவர்த்திப்பதற்கான சமூக பாதுகாப்புத் திட்டம் தொடர்பில் இந்த வரவு செலவு திட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை சமுர்த்தி கொடுப்பனவு, வயது முதிர்ந்தவர்களுக்கான கொடுப்பனவு அங்கவீனர்களுக்கான கொடுப்பனவு, உள்ளிட்ட கொடுப்பனவுகளில் அதிகரிப்பை மேற்கொள்வது தொடர்பில் ஜனாதிபதி வரவு -செலவுத் திட்டத்தின் மூலம் முன்மொழிந்துள்ளார்.

மேலும் நாட்டின் பிரதமர் என்ற வகையில் நாட்டு மக்களுக்கு பிரச்சினைகள் இல்லை என நான் ஒருபோதும் கூற மாட்டேன். அதனை கவனத்தில் கொண்டே சமூக பாதுகாப்பு வலையமைப்பில் வறுமை நிலையில் உள்ள மக்களுக்கான நலன்புரி தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன் தொழிலாளர்களின் உரிமைகள் தொடர்பிலும் இதனூடாக விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அரசாங்கத்தின் வரி கொள்கை தொடர்பில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் வரி அதிகரிப்பின் அவசியம் தொடர்பில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆகிய இருதரப்பும் ஏற்றுக் கொண்டுள்ளது.

எவ்வாறாயினும் வருமானம் இல்லாமல் செலவுகளை மேற்கொள்ள முடியாது என்ற வகையில் அது தொடர்பில் அனைவரும் இணங்கக் கூடிய வகையில் பல யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. வரி அதிகரிப்பை எவரும் விரும்புவதில்லை ஆனால் அரசாங்கத்தினதும் ஏனைய செலவினங்களையும் மேற்கொள்வதற்கு நிதி அவசியமாகிறது. உணவு உற்பத்தியில் தன்னிறைவு காண்பதை இலக்காகக் கொண்டு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளன.

அந்த வகையில் வடக்கு கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் உள்ள 14,000 கிராம சேவகர் பிரிவுகள் 330 பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கும் வகையில் விசேட திட்டம் ஜனாதிபதியின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கு அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பு மிக அவசியமாகும்.

விவசாயிகளுக்கான உரம், விதை பயிர்ச்செய்கை காணி உட்பட பல்வேறு வாய்ப்புகள் இதன் மூலம் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளன.

மிகக் குறுகிய காலத்தில் உலகின் சனத்தொகை மேலும் ஒரு பில்லியனால் அதிகரித்துள்ளது. அதனால் எமது நாடு மட்டுமன்றி அனைத்து நாடுகளும் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது.

எனவே வீழ்ச்சியடைந்திருக்கும் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப மிகவும் சவாலுக்கு மத்தியில் சமர்ப்பித்திருக்கும் வரவு செலவு திட்டத்தை அனுமதித்துக்கொள்ள அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்றார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தமிழ் வாக்காளர்கள் தமிழ் வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்குகளை வழங்க வேண்டும் – மனோ கணேசன்

editor

களனி பல்கலைக்கழகம் 28ஆம் திகதி திறப்பு

கொரோனா தீவிர நிலை : அவசரமாக கோட்டா தலைமையில் கூட்டம்