சூடான செய்திகள் 1

பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும்-ஜனாதிபதி

(UTV|COLOMBO)-அபிவிருத்தியை நோக்காகக்கொண்டு பயணிக்கும் நாடு என்ற வகையில் வினைத்திறனின் முன்மாதிரியை முதலில் வழங்க வேண்டியது பாராளுமன்றத்திலிருந்தாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின் வினைத்திறன் அரச சேவையின் வினைத்திறனில் தாக்கம் செலுத்துவதுடன், அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்கு இந்த அனைத்து துறைகளினதும் வினைத்திறன் மிகவும் முக்கியமானதாகும் என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

மதிப்பாய்வு பற்றிய முதலாவது உலகளாவிய மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று  (17) முற்பகல் கொழும்பில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கையின் உபசரிப்பில் 70க்கும் மேற்பட்ட நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர்.

பாராளுமன்றத்தின் வினைத்திறன் சபை நடவடிக்கைகளுக்கு மட்டுமன்றி ஏனைய ஆலோசனைக் குழுக்களின் நடவடிக்கைகளுக்கும் முக்கியமானது என்பதுடன், அக்குழுக்களின் செயற்திறன் நாட்டின் அபிவிருத்தியில் பரந்த அளவில் தாக்கம் செலுத்துகின்றது என்றும் ஜனாதிபதி அவர்கள் இங்கு தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின் பெறுமதி தொடர்ச்சியாக பாராளுமன்ற உறுப்பினர்களின் மதிப்பாய்வுக்கு உட்பட வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு வருகை தருகின்ற நாட்களின் எண்ணிக்கை அந்த வினைத்திறனை பேணுவதில் முக்கிய அம்சமாகும் என்றும் குறிப்பிட்டார்.

இன்று பெண்களின் வினைத்திறன் உயர்ந்த மட்டத்தில் இருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதற்கேற்ப பாராளுமன்றத்தின் வினைத்திறனை மேம்படுத்துவதற்கு பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதற்கு பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 60 வீதமேனும் இருக்க வேண்டுமென தான் நம்புவதாக மேலும் குறிப்பிட்டார்.

அரச சேவையில் வினைத்திறன் தொடர்பாக கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, இன்று அரச சேவையில் பதினைந்தரை இலட்சமாகவுள்ள மனித வளத்தின் வினைத்திறன் சுமார் 30 – 35 சதவீதம் மட்டுமேயாகும் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன என்றும் இது திருப்திகரமான நிலைமையல்ல என்றும் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலதிகமாக சிவில் சமூக ஆர்வலர்கள், மதிப்பீட்டு சமூக உறுப்பினர்கள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளின் பங்குதாரர்கள் கலந்துகொள்ளும் இம்மாநாட்டின் இறுதி நிகழ்வு எதிர்வரும் 19ஆம் திகதி புதன்கிழமை இலங்கை பாராளுமன்றத்தில் இடம்பெறும். இம்மாநாட்டில் இலங்கையின் தேசிய மதிப்பாய்வுக் கொள்கையை அறிமுகப்படுத்தப்படுவதனை நாட்டின் மதிப்பாய்வு வரலாற்றில் ஒரு முக்கிய மைல் கல்லாக குறிப்பிட முடியும். தேசிய மதிப்பாய்வு கொள்கையை கொண்டுள்ள ஒரு சில நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டிருப்பதுடன், தெற்காசிய வலயத்தில் இத்தகைய கொள்கையை முன்னெடுத்துள்ள முதலாவது நாடும் இலங்கையாகும்.

இம்மாநாட்டின் இறுதிநாள் நிகழ்வுகள் செப்டெம்பர் 19 ஆம் திகதி இலங்கை பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெறவுள்ளது. இதன்போது மதிப்பாய்வு செயன்முறைகளின் முக்கியத்துவம் குறித்து சர்வதேச மற்றும் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் கலந்துரையாடல் மன்றமொன்றும் குழுக் கலந்துரையாடல்களும் நடத்தப்படவுள்ளன.

அபிவிருத்தி தலையீடு தொடர்பாக மதிப்பாய்வு செய்தல், அறிவுப் பகிர்விற்காக பூகோள தளமொன்றை வழங்குதல், வெற்றி மற்றும் தோல்வியிலிருந்து பாடங்களை கற்றுக்கொள்ளுதல் ஆகியன தொடர்பாக விரிவான உரையாடலொன்று இடம்பெறவுள்ளதுடன், நல்லாட்சியின் ஒரு அங்கமாக சாட்சிகள் / சான்றுகளை பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டுதல் இம்மாநாட்டின் மூலம் மேலும் எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கையின் பேண்தகு அபிவிருத்தி நோக்கங்கள் தொடர்பான நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்து செல்கின்ற போது பாராளுமன்ற உறுப்பினர்களின் வகிபாகம் எத்தகையதாக இருக்க வேண்டும் என்பது பற்றிய தெளிவை வழங்குவது இதன் மற்றுமொரு நோக்கமாகும்.

இதில் பங்குபற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எதிர்காலத்திற்காகவும் அவர்களின் பங்களிப்பு தொடர்பான உறுதிமொழியை கொழும்பு பிரகடனத்தின் ஊடாக வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் தேசிய மதிப்பாய்வுக் கொள்கை / கோட்பாடுகளுக்கான அர்ப்பணிப்பு மற்றும் தன்னார்வ தேசிய மதிப்பீட்டிற்கான நாட்டின் பொறுப்புக்கள் குறித்தும் இந்த உறுதிமொழி மேற்கொள்ளப்படுகின்றது. பிரதமர் அலுவலகம், இலங்கை பாராளுமன்றம் மற்றும் இலங்கை மதிப்பீட்டு சம்மேளனம் ஆகிய நிறுவனங்களின் வழிகாட்டுதலில் மதிப்பாய்வுக்கான சர்வதேச பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்மேளனமும் மதிப்பாய்வுக்கான இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்மேளனமும் இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளன.

பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ, சபாநாயகர் கரு ஜயசூரிய, மதிப்பீடு தொடர்பான பாராளுமன்ற உறுப்பினர்கள் சங்கத்தின் தலைவர் அமைச்சர் கபீர் ஹாசிம், அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், கயந்த கருணாதிலக, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி, இலங்கை மதிப்பீட்டு சங்கத்தின் தலைவர் பேராசிரியர் சமன் பண்டார, மதிப்பாய்வுக்கான சர்வதேச பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்மேளனத்தின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

(ஜனாதிபதி ஊடக பிரிவு)

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 233 ஆக உயர்வு

இன்று(26) நள்ளிரவு முதல் குறைக்கப்படும் பஸ் பயணக் கட்டணங்கள்

மீண்டும் சமூகவலைத்தளங்கள் முடக்கம்