இந்நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த தற்போதைய அரசாங்கம் தவறிவிட்டது. இன்று நம் நாட்டில் பெரும் வன்முறை கலாசாரமும், கொலைகளும் அலைமோதுகின்றன.
பாதாள உலகம் கோலோச்சி வருகின்றன. கொலை, கப்பம், போதைப்பொருள் கடத்தல் என்பன சமூகத்தில் தலைவிரித்தாடுகின்றன.
தேசிய பாதுகாப்பு குறித்து பாடம் கற்க மேசை கதிரைகளை எடுத்துக் கொண்டு வருமாறு அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சில தரப்பினர் இதற்கு முன்னர் நாட்டிற்கு பிரஸ்தாபித்திருந்தனர்.
அது எப்படி போனாலும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் இன்று பாடம் கற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிமித்தம் ஐக்கிய மக்கள் சக்தியின் தெரணியகல தேர்தல் தொகுதி அமைப்பாளர் ரஞ்சித் பொல்கம்பொல அவர்களின் ஏற்பாட்டின் கீழ் தெரணியகல பிரதேசத்தில் இன்று (23) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
சமூகத்தில் சட்டம் மேலோங்கி காணப்பட வேண்டிய இன்றைய காலகட்டத்தில் சட்டம் குழிதோண்டி புதைக்கப்பட்டு வருகின்றன. இது தான் நிலமையாகி வருகிறது. கொலையாளிகள் நாட்டின் சட்டம் ஒழுங்கின் தலைவர்களாக மாறிவிட்டனர்.
இந்த கொலைக் கலாச்சாரம், தேசிய பாதுகாப்பு தொடர்பில் வீராப்பு பேசிய இந்த அரசிடம் இதற்கான பதிலும் இல்லை, தீர்வும் இல்லை. நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கே பெரும் மக்கள் ஆணையை மக்கள் இந்த அரசுக்கு வழங்கியுள்ளனர் என அவர் தெரிவித்தார்.
எனவே, இந்தக் கொலைக் கும்பல்களையும், போதைப் பொருளை மையமாகக் கொண்ட ஆயுதக் கும்பல் நடவடிக்கைகளையும் அரசால் கையாள முடியாதுபோயுள்ளன. இதன் உச்சமாக நீதிமன்றத்தினுள் கூட கொலைகள் இடம்பெற்று வருகின்றன எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
இன்று விவசாயிகளும் நுகர்வோரும் இடர்பாடுகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
அரிசியை அதிக விலை கொடுத்து வாங்கும் நடவடிக்கை தொடர்பில் அரசிடம் தீர்வில்லை. விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்க அரசாங்கத்தால் முடியாதுபோயுள்ளது. நெல் கொள்வனவுக்கு 5000 மில்லியன் ரூபாவே ஒதுக்கப்பட்டுள்ள போதிலும், இதற்கு இதை விட அதிக பணம் தேவைப்படுகிறது. நுகர்வோருக்கு நியாயமான விலையில் அரிசியை வழங்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு காணப்படுகின்றது.
இதை மறந்து செயல்பட்டு வருகின்றனர். இந்த அரசாங்கத்தின் ஒரே நோக்கம் பாரிய அரிசி ஆலை உரிமையாளர்களை பாதுகாப்பதே தவிர, நுகர்வோரையோ விவசாயியையோ பாதுகாப்பது அல்ல எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
பெண்களின் உரிமையை பாதுகாக்க வந்த நளின் ஹெவகே போன்றவர்கள் பாராளுமன்றத்திலேயே பெண்களை இழிவுபடுத்துகிறார்.
தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர நாட்டின் பெரும்பான்மையான பெண்களே அதிக ஆதரவை வழங்கினாலும், இன்று அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசுகின்றனர்.
ஆளுந்தரப்பைச் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் நளின் ஹெவகே ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்னவை அவமதித்து, அவமானப்படுத்தி பேசியுள்ளார்.
பெண்களின் பாதுகாப்பையும் பெண்களின் உரிமைகளையும் பாதுகாப்போம் என்று மேடைகளில் பிரஸ்தாபித்தாலும், இன்று பாராளுமன்றத்தில் பெண்களை இழிவுபடுத்துவதும், சகல பெண்களையும் இழிவுபடுத்துவதுமே அமைச்சர் நளின் ஹெவகே அவர்களின் ஒரே குறிக்கோளாக காணப்படுகின்றது.
வார்த்தையின் உண்மையான அர்த்தத்தில் பெண்களின் சகல உரிமைகளையும் அதாவது அரசியல், பொருளாதாரம், சமூக, வேலை வாய்ப்பு மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு என பெண்களின் ஒட்டுமொத்த உரிமையையும் உறுதி செய்வதற்கு உண்மையிலேயே பாடுபடும் ஒரே தரப்பு ஐக்கிய மக்கள் சக்தியே என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பாதாள உலக நடவடிக்கைகளை கட்டுப்படுத்த நாம் எமது ஆதரவை வழங்குவோம்.
வீதிகளில் செல்லும் சாதாரண மக்களின் கதி என்ன என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.
போதைப்பொருள் கடத்தல், கொள்ளை மற்றும் கொலைக் கலாச்சாரத்தை முறியடிக்க எதிர்க்கட்சியாக நாம் எமது பூரண ஆதரவை பெற்றுத் தருவோம்.
இதற்கான வேலைத்திட்டம் அரசாங்கத்திடம் இல்லாத காரணத்தினால், வாக்குறுதிகளை நிறைவேற்றாத இந்த அரசாங்கத்திற்கு நல்லதொரு பாடத்தை படிப்பிக்க எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வாக்குகளை பயன்படுத்தப்படுமாறு எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.