அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

பாதாள உலகத்தை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர சகல நடவடிக்கையும் எடுக்கப்படும் – ஜனாதிபதி அநுர

பொதுமக்களின் பாதுகாப்புக்காக உள்ள உத்தியோகபூர்வ நிறுவனங்களில் சில நபர்கள் வரையில் பாதாள உலகத்தின் செயற்பாடுகள் விரிவடைந்திருப்பது விசாரணைகளில் தெரியவந்திருப்பதாகவும், எதிர்காலத்தில் நிச்சயமாக பாதாள உலகத்தை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர சகல நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதற்காக சிறிது காலம் எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பத்தாவது பாராளுமன்றத்தின் பாதுகாப்பு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் அவருடைய தலைமையில் இன்று பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

நீதிமன்ற வளாகங்களில் பாதுகாப்புத் தொடர்பில் இங்கு கருத்துத் தெரிவித்த நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார, இது தொடர்பில் முன்மொழிவொன்று தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், எதிர்காலத்தில் சட்டத்தரணிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் சோதனையிடுவதற்கும், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பை பலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அத்துடன், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ முகாம்களுடன் கூடிய காணிகளை மீண்டும் உரிமையாளர்களுக்கு வழங்குவது தொடர்பில் இங்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.

வடக்கு, கிழக்கு மாத்திரமன்றி நாடு முழுவதிலும் முப்படையினரின் பாவனையில் உள்ள காணிகள் தொடர்பில் மீண்டும் மதிப்பாய்வு மேற்கொண்டு காணிகளை விடுவிப்பது குறித்து எதிர்காலத்தில் தீர்மானம் எடுக்கப்படும் எனப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இங்கு பதிலளித்தார்.

இராணுவத்தினரால் நிர்வகிக்கப்படும் சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் வணிகங்களை சுற்றுலாத் துறையில் மேலும் வினைத்திறன் மிக்க முதலீடுகளாக மாற்றுவதற்கான வாய்ப்புக்கள் குறித்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இங்கு வினவினர்.

இதற்கமைய, எதிர்காலத்தில் இது தொடர்பில் ஆய்வு நடத்தி, பொருளாதார நன்மைகளுக்காக அவற்றைப் பயன்படுத்துவது குறித்துத் தீர்மானிக்க முடியும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

வடமாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள சில வழிபாட்டுஸ்தலங்களை அடிப்படையாகக் கொண்டு இன மற்றும் மத ரீதியான பிளவுகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக சில பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.

மதவாதம் மற்றும் இனவாதம் என்பன அரசியலில் இருந்து முற்றாக நீக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.

இந்தப் பகுதியில் உள்ள மக்களின் உண்மையான தேவைக்கு அமைய இந்த சகல பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும் என்றும், குறுகிய அரசியல் இலாபம் தேடும் குழுவினர் இதுபோன்ற சம்பவங்களை அரசியல் முரண்பாடுகளாக்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே, இதுபோன்று குறுகிய அரசியல் இலாபங்களுக்காக இனவாதம் மற்றும் மதவாதத்தைத் தூண்டுவதற்கு எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அத்துடன், தேசிய அனர்த்தக் குழுவை ஸ்தாபிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இதற்கான நடவடிக்கையை விரைவில் பூர்த்திசெய்யுமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

Related posts

பதவியை இராஜினாமா செய்தார் மகாதீர் மொஹமட்

பெரிய வெங்காயத்திற்கு அதிகூடிய சில்லறை விலை நிர்ணயம்

இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் 32 பேருக்கும் விடுதலை