எதிர்க்கட்சியில் இருந்த அநுர குமார திஸாநாயக்கவிற்கும், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கும் உள்ள வித்தியாசம் தற்போது தெளிவாகத் தெரிகிறது.
எதிர்க்கட்சியில் இருந்த அநுர குமார திஸாநாயக்க உழைக்கும் மக்களுக்காகவும், பொது மக்களுக்காகவும் குரல் எழுப்பினார். ஆனால் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வறிய மக்கள், உழைக்கும் மக்கள், விவசாயிகள் மற்றும் மீனவர்களை மறந்து செயல்பட்டு வருகிறார்.
நாட்டு மக்கள் படும் துன்பங்கள், வலிகள், அடக்குமுறைகள் மற்றும் அசௌகரியங்கள் குறித்து ஜனாதிபதிக்கோ அல்லது அரசாங்கத்திற்கோ எந்த புரிதலும் இல்லை.
மக்கள் படும் துன்பங்களை உணராது நடந்து வருகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் ஹம்பாந்தோட்டை மாவட்ட வேட்பாளர்களுடன் இன்று (27) இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
அன்று மின்கட்டணத்தைக் குறைப்போம் என்று முழங்கியவர்கள் இன்னும் குறைக்காதிருந்து வருகின்றனர். மக்களின் அழுத்தத்தால் மின் கட்டணத்தை 20% குறைக்க பொது பயன்பாட்டு ஆணைக்குழு உத்தரவிட்டதால் மின் கட்டணம் குறைக்கப்பட்டன. இந்த அரசாங்கம் வாக்குறுதியளித்த விடயங்கள் எதனையும் இன்னும் நிறைவேற்றவில்லை.
எரிபொருள் விலை குறைப்பு விடயத்திலும் இப்படித்தான் நடந்து வருகின்றனர். துறைமுகத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெயின் விலையும், மக்களுக்கு விநியோகிக்கப்படும் எண்ணெயின் விலைகளுக்குமிடையே பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன.
இதில் பெரும் ஊழல்கள் காணப்படுவதாக தெரிவித்தனர். இதில் நடக்கும் ஊழலை இல்லாது செய்து, வரிச்சுமைகளை நீங்கி எரிபொருள்களை மக்களுக்கு சலுகை விலையில் தருவதாகச் சொன்னார்கள். ஆனால் இன்று வரை இதைச் செய்ய முடியாதுபோயுள்ளது.
பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பிலும் அரசாங்கத்தினால் எதனையும் செய்ய முடியாது போயுள்ளது.
இவற்றுக்கு மத்தியில் அரசாங்கம் புலம்பிக்கொண்டிருக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
சிறுவர்களுக்கு நேர்ந்துள்ள கதி!
நமது நாட்டில் பாடசாலை மாணவர்களிடம் (13-17 வயது) விஞ்ஞான ரீதியான ஆய்வொன்று நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக் கணக்கெடுப்பு முடிவுகளின் பிரகாரம், இளைஞர்கள் தொடர்பான முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் பாடசாலைக்குச் செல்லும் பிள்ளைகளில் 21.4% ஆனோர் எடை குறைந்த பிள்ளைகளாகும். 12.1% ஆனோர் அதிக எடை கொண்ட பிள்ளைகள் ஆவர். 3% ஆனோர் பருமனானவர்கள், 4.3% ஆனோர் காலை உணவை சாப்பிடுவதில்லை, 5.7% ஆனோர் புகைபிடிக்கின்றனர், 3.1% ஆனோர் கஞ்சா போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்துகின்றனர், 5.3% ஆனோர் மதுபானம் பயன்படுத்துகின்றனர் என வெளிக்கொணர்ந்துள்ளனர்.
மனநலம் சார்ந்து நோக்கும் போது 22.4% ஆனோர் தனிமையால் பாதிக்கப்படுகின்றனர், 7.5% ஆனோருக்கு நெருங்கிய நண்பர்கள் இல்லை, 18% ஆனோர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர், 15.4% ஆனோர் தற்கொலை செய்து கொள்கின்றனர், இதில் தற்கொலை செய்து கொள்வோரில் 9.6% ஆனோரைப் பார்க்கும்போது 63% ஆனோர் குறைந்தபட்சம் 8 மணிநேரம் தூங்குவதில்லை என்றும் 28.4% ஆனோர் சமூக ஊடகங்களை 3 மணி நேரத்திற்கும் மேலாக கல்வி அல்லாத நோக்கங்களுக்காக பயன்படுத்துகின்றனர் என வெளிக்கொணரப்பட்டுள்ளன.
இந்த ஆய்வின் படி, நாட்டில் இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பிரச்சினைகள் பரந்த அளவில் காணப்படுகின்றன என்பது நன்கு புலப்படுகின்றது.
இந்த பிரச்சினைகளுக்கு அரசை மையமாகக் கொண்ட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
பாடசாலைகளின் பெறுமதியான எதிர்கால மனித வளத்தைப் பாதுகாப்பதற்காக இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தில் அரசாங்கமும் எதிர்க்கட்சியும் போலவே, சிவில் சமூகமும் பிரஜைகளும் அங்கம் வகிக்க வேண்டும்.
நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்கும் இந்த இளம் மனித வளத்தை நாமனைவரும் ஒன்றிணைந்து பாதுகாக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.