பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை சீருடைத் துணிகளை விநியோகிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகள் 10,096 இற்கும் 822 பிரிவெனாக்களுக்கும் இவ் வருடத்திற்கான (2025) பாடசாலை சீருடைத் துணிகளை விநியோகிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஒட்டுமொத்தமாக 4,640,086 மாணவர்களுக்கு சீருடைத் துணிகள் வழங்கப்பட்டதுடன், இதற்கு மொத்தமாக அவசியமான 12 மில்லியன் மீட்டர் துணி சீன அரசின் நன்கொடையாக கிடைக்கப்பெற்றது.
தற்போதளவில் அனைத்து பாடசாலை சீருடைத் துணிகளும் விநியோகிக்கப்பட்டு அவற்றை பாடசாலை மாணவர்களுக்கு வழங்கும் பணிகளும் நிறைவுசெய்யப்பட்டுள்ளன.
அரச உதவி பெறும் பாடசாலை மாணவர்களுக்கும் நாட்டின் அனைத்து அனுமதிக்கப்பட்ட பிரிவெனாக்களின் பிக்குகளான மாணவர்களுக்கும் பிக்குகள் அல்லாத மாணவர்களுக்கும் இலவசமாக பாடசாலை சீருடைத் துணி வழங்கும் செயற்பாடு 1992ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
2015ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரையில் சீருடைத் துணி வழங்கும் பணிகள் வவுச்சர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டதுடன், அதன் பின்னர் சீருடைத் துணி வழங்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.
2023ம் ஆண்டில் சீருடைத் துணிக்கான தேவையின் 70% சதவீதமான அளவு சீனா மக்கள் குடியரசினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதுடன், 2024ம் ஆண்டில் சீருடைத் துணிக்கான தேவையின் 80% அவ் அரசினால் நன்கொடையாக வழங்கப்பட்டது.
இவ் வருடத்தில், அதாவது 2025ம் ஆண்டிற்கான தேவையில் 100% சதவீதம், அதாவது ரூ. 5,171 மில்லியன் பெறுமதியான பாடசாலை சீருடைத் துணிகள் சீனா மக்கள் குடியரசினால் நன்கொடையாக வழங்கப்பட்டன.