உள்நாடு

பாகிஸ்தான் எப்போதும் இலங்கைக்கு ஆதரவு வழங்கும்

(UTV | கொழும்பு) – அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு மற்றும் கொவிட் -19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பாகிஸ்தான் அரசாங்கத்தின் நிவாரண உதவியின் ஒரு பகுதியாக, இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) முஹம்மது சாத் கட்டக் அவர்கள், அனுராதபுரம், கிளிநொச்சி மற்றும் அருகம் பே ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் செய்து உலர் உணவுப் பொருட்களை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விநியோகித்தார்.

2021 ஜூன் 29 அன்று உலர் உணவுப் பொருட்கள் அனுராதபுரத்தில் மிரிசவடிய விகாரையில் பகிர்ந்தளிக்கப்பட்டது. உயர் ஸ்தானிகராலயத்தின் ஊடாக ஏழைக் குடும்பங்களுக்கு ஆதரவளிப்பதற்கான பாகிஸ்தான் அரசாங்கத்தின் இம்முயற்சியை எதலவெதுனவேவா ஞானத்திலக தேரர் பாராட்டினார்.

கிளிநொச்சி, இரணைமடு பாதுகாப்புப் படைத்தலைமையகத்தில் நடைபெற்ற விழாவில், உயர் ஸ்தானிகர் அப்பிராந்தியத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கி வைத்ததோடு உயர் ஸ்தானிகர் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் (கிளிநொச்சி) தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர பராக்ரம ரணசிங்கத்தையும் சந்தித்து பரஸ்பர ஒத்துழைப்பு தொடர்பான விடயங்களை கலந்துரையாடினார்.

அத்துடன், உயர்ஸ்தானிகர் 2021 ஜூன் 30 அன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் அவர்களை சந்தித்து விவசாயம், கல்வி மற்றும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான விஷயங்களை கலந்துரையாடினார்.

மேலும், 2021 ஜூலை 1 ம் திகதி அன்று இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம் முஸ்ஹாரஃப் அவர்களின் அழைப்பின் பேரில், உயர் ஸ்தானிகர் அருகம் பே பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டு, புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். இதன் போது இரவு விருந்துபசாரம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அங்கு உரையாற்றிய உயர் ஸ்தானிகர், ஒற்றுமையாக வாழ வேண்டியதன் அவசியத்தையும், இலங்கையில் சிறுபான்மை சமூகங்கள் பெரும்பான்மையினருடன் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் என்பதையும் வலியுறுத்தியதோடு இலங்கையில் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் செயல்படுத்தும் செயற்திட்டங்கள் இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் பொதுவானது என்றும் உயர் ஸ்தானிகர் குறிப்பிட்டார்.

தேவைப்படும் எல்லாச் சந்தர்பங்களிலும் பாகிஸ்தான் எப்போதும் இலங்கை மக்களுக்கு ஆதரவு வழங்கும் என்றும் இரு நட்பு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் இவ்வாரான நிவாரண உதவிகளும், ஆதரவவும் தொடரும் என்றும் உயர் ஸ்தானிகர் உறுதியளித்தார்.

மேலும், அருகம் பே பிரதேசத்தில் உள்ள எளிய குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள், பாடசாலை புத்தக பைகள் மற்றும் விளையாட்டுப் பொருட்களையும் உயர்ஸ்தானிகர் வழங்கி வைத்தார்.

கொழும்பு
5 ஜூலை 2021

Related posts

கனமழையால் வெள்ள அபாயம்

நாட்டில் உணவுப்பற்றாக்குறை அதிகரிக்கும் அபாயம்!

நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் நீடிப்பு