ரமழான் மாதத்திலுள்ள புனிதம் என்பது மனங்களிலும் வாழ்வினிலும் பின்பற்றப்படும் போது தான் இம்மையிலும் மறுமையிலும் ஒளி கிடைக்கும்.
இதனை முஸ்லிம்களாகிய நாம் மிகக் கவனமாகவும் கரிசனையோடும் செய்து வருகிறோம் என்பதற்கு நானும் நீங்களும் சாட்சி என பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். உதுமாலெப்பை தனது பெருநாள் வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்ததாவது,
2025 ஆம் ஆண்டின் புனித ரமழானும் ஈதுல் ஃபித்ரும் நமது வாழ்வின் மாற்றமானது.
அதாவது எப்போதும் உங்களில் ஒருவனான நான் இம்முறை ஒரு பாராளுமன்ற உறுப்பினராக கைகோர்த்துக் கொள்வது நீங்கள் என்னைக் கொண்டு உருவாக்கிக் கொண்ட புதிய விதியின் மகிழ்ச்சி தருணம் இது.
இவ்வேளையில் நோன்பினாலும் தவத்தினாலும் உருவாக்கப்பட்ட நமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சியின் போராளிகளையும் அபிமானிகளையும் முஸ்லிம் மக்கள் அனைவரையும் பெருநாள் வாழ்த்துக்களால் ஆசித்துக் கொள்கிறேன்.
இன்றைய நாட்களில் நமது உறவுகள் பலஸ்தீன மண்ணில் அல்லாஹ் எழுதிய படியான வெற்றிக்குரிய நாள் வரை எதிராளிகளின் துரோகத்தனத்தால் வஞ்சிக்கப்பட்டு கொண்டு நோன்பிருந்து புத்தாடைக்கு பதிலாக இரத்த ஆடை அணிந்தபடி வலிகொண்ட பெருநாளை அனுபவித்துக் கொண்டிருப்பதையும் இவ்வேளையில் கனத்த மனதுடன் ஞாபகப்படுத்தி உணர்வுகளால் பங்கு கொள்கிறேன்.