உலகம்

பரிதாபமாக உயிரிழந்த குழந்தைகள் – தடை செய்யப்பட்ட மருந்துகள்!

(UTV | கொழும்பு) –

உலகமெங்கும் 141 குழந்தைகள் பலியானதன் எதிரொலியாக குறிப்பிட்ட மருந்துக் கலவையை, சளி தொந்தரவினால் பாதிக்கப்படும் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்குவதற்கு தடை விதித்து இந்தியாவின் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு உத்தரவிட்டுள்ளது. ’உலகின் மருந்தகம்’ என புகழப்படும் வகையில் உயிர் காக்கும் பிரதான மருந்துப் பொருட்களை குறைவான விலையில் இந்தியா ஏற்றுமதி செய்து வந்தது.

ஆனால் கடந்த சில வருடங்களாக அந்த நற்பெயருக்கு களங்கள் ஏற்படும் வகையில், விரும்பத்தகாத சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்திய மருந்துகளை உட்கொண்ட குழந்தைகள் அடுத்தடுத்து பலியானதில், பாதிப்புக்கு உள்ளான தேசங்கள் முதல் உலக சுகாதார அமைப்பு வரை இந்திய மருந்துகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்தது. காம்பியா, உஸ்பெகிஸ்தான், கேமரூன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இந்தியாவின் இருமல் மருந்தினை உண்ட குழந்தைகள் தொடர்ந்து மரணித்தனர்.

இந்த வகையில் 141 குழந்தை மரணங்களை அந்த நாடுகள் உறுதி செய்தன. 2019 ஆம் ஆண்டு முதல் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியான இருமல் மற்றும் சளி எதிர்ப்பு மருந்துகள் இவ்வாறு சர்ச்சையாகின.
இந்த மருந்துகள் இந்தியாவில் விற்பனை செய்யப்படவில்லை என்ற போதும், அதே மருந்துக் கலவையில் உற்பத்தியான இதர மருந்துகளை உண்டதில் இந்தியாவுக்குள் 12 குழந்தைகள் இறந்துபோனதும், 4 குழந்தைகள் அங்கவீனமடைந்ததும் ஆய்வில் தெரிய வந்தது.
இவற்றையொட்டி, குழந்தைகளுக்கான குறிப்பிட்ட இருமல் மற்றும் சளி எதிர்ப்பு மருந்து தயாரிப்பை ஊக்குவிப்பது தொடர்பான கவலைகள் இந்தியாவில் அதிகரித்தது.

பல சுற்று ஆய்வுகளுக்குப் பின்னர் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ராஜீவ் ரகுவன்ஷி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மருந்துக் கட்டுப்பாட்டாளர்களிடம் அவசர அறிவுறுத்தல்களை தற்போது வழங்கியுள்ளார். இதன்படி ’குளோர்பெனிரமைன் மாலேட் ஐபி 2மிகி + ஃபைனிலெஃப்ரைன் எச்சிஎல் ஐபி 5மிகி டிராப்/மிலி’ ஆகியவற்றின் நிலையான மருந்து கலவையை உற்பத்தி செய்வோருக்கும் அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. மருந்து வல்லுநர் குழு வழங்கிய பரிந்துரையின்படி மேற்படி சளி எதிர்ப்பு மருந்துக் கலவையை 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கக்கூடாது என உத்தரவு வெளியானது.

இதன் அடிப்படையில், இந்த மருந்து 4 வயதுகுட்பட்ட குழந்தைகளுக்கானதல்ல என்பதை வெளிப்படையாக லேபிள் முதல் விளம்பர வாசகம் வரை இடம்பெறச் செய்யுமாறும் உத்தரவாகி உள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரஷ்யாவின் மொஸ்கோ நகர முடக்கம் தளர்த்தப்பட்டது

பைசர் தடுப்பு மருந்து அவசரகால பயன்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி

அமெரிக்காவில் 45 இலட்சத்தை நெருங்கும் கொவிட்-19 நோயாளிகள்