உலகம்

பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கான தீர்மானம் நிறைவேற்றம்

(UTV | ஐரோப்பா) – இலங்கையில் அமுலில் காணப்படும் பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கான தீர்மானம் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் 613 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 628 வாக்குகளும் எதிராக 15 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, 40 பேர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பயங்கரவாத தடைச்சட்டத்தை இலங்கை அரசாங்கம் இரத்துச்செய்ய வேண்டும் என்ற தீர்மானம் ஐரோப்பிய நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி தீவிரவாத தடைச்சட்டத்தை அமுல்படுத்துமாறு குறித்த தீர்மானத்தினூடாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கையில் அமுலில் காணப்படும் பயங்கரவாத தடைச்சட்டத்தில் சந்தேக நபர்களை கைது செய்வதற்கும், அவர்களை தடுப்புகாவலில் வைத்து விசாரணைகளை மேற்கொள்ளவும் அதிகூடுதல் அதிகாரங்கள் காணப்படுவதோடு, பலவந்தமாக ஒப்புதல் வாக்குமூலங்கள் பெறப்படுவதோடு, பாலியல் சித்திரவதைகள், மற்றும் இனவாத சித்திரவதைகள் இடம்பெறுவதாகவும் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், இலங்கையில் மனித உரிமைகள் மீதான கௌரவம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் பேண்தகு தன்மை மோசமான நிலையை அடைந்துள்ளதாகவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் குறித்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, மனித உரிமை விவகாரங்கள் உள்ளிட்ட 27 சர்வதேச பிரகடனங்களை அமுல்படுத்தல் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தை பிரதியீடு செய்தல் ஆகியனவற்றை அடிப்படையாக கொண்டு இலங்கைக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு ஜீ எஸ் பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்பட்டது.

அது மாத்திரமின்றி இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான அழுத்தத்திற்குரிய ஓர் அம்சமாகவும் இந்த வரிச்சலுகை திட்டம் பயன்படுத்தப்படும் எனவும் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிவித்திருந்தனர்.

எனினும் இலங்கை அரசாங்கம் சர்வதேச பிரகடனங்களை அடியொற்றாமை, மற்றும் மனித உரிமை மேம்பாட்டிற்கு வழிசமைக்காமை ஆகிய வழிவிலகள் நடடிவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், இலங்கைக்கான ஜீ எஸ் பி வரிச்சலுகையை தற்காலிகமாக மீளப்பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றதா என ஆராயுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

இலங்கையின் ஹஜ் யாத்திரிகர்களுக்கு ஏற்றிய தடுப்பூசி தகுதியற்றதா?

உலக சுகாதார நிறுவனம் நியாயமற்று நடந்து கொள்கிறது – ட்ரம்ப்

இந்திய – சீன எல்லை மோதல் – இந்திய இராணுவத்தினர் 20 பேர் பலி