உள்நாடு

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை அரசாங்கம் மீளப்பெற வேண்டும் – சாலிய பீரிஸ்.

(UTV | கொழும்பு) –

நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக உருவாக்கப்படும் சட்டமூலங்களுக்கு கையுயர்த்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இயற்றப்படும் சட்டங்கள் என்றாவதொரு நாள் தமக்கு எதிரானதாக அமையும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நீதிமன்றத்தால் மாத்திரம் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியாது. நிகழ்நிலை காப்பு சட்டமூலம்,பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் என்பனவற்றை அரசாங்கம் மீளப்பெறும் அளவுக்கு மக்கள் போராட்டத்தை ஒன்றிணைக்க வேண்டும்.அதற்கு சட்டத்தரணிகள் கூட்டிணைவு என்ற அடிப்படையில் ஒத்துழைப்பு வழங்குவோம் என சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்தார்.

சட்டத்தரணிகள் கூட்டிணைவின் ஏற்பாட்டில் நேற்று இலங்கை மன்றக் கல்லூரியில் ‘வாயை மூடும் சட்டங்கள் வேண்டாம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் இடம்பெற்ற மாநாட்டில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள நிகழ்நிலை காப்பு சட்டமூலம், உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் என்பனவற்றுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது. எதிர்ப்பு தெரிவித்தால் ‘வாயை மூடு –அமரு’ என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது. மறுபுறம் பொருளாதார பாதிப்பு, ஊழல் மோசடி ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து பத்து பேர் ஒன்று கூடி வீதியில் போராட்டத்தில் ஈடுபட முடியாது. 10 பேரின் போராட்டத்தை 100 பொலிஸார் ஒன்றிணைந்து அடக்குகிறார்கள். கண்ணீர் புகை வீச்சி மற்றும் நீர்த்தாரை பிரயோகித்து போராட்டத்தை கலைக்கப்படுகின்றன.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் அரசாங்கத்தின் மோசடிகளை சுட்டிக்காட்டி மக்களுக்கு உண்மையை எடுத்துரைக்கும் தொழிற்சங்கங்கள் இலக்கு வைக்கப்படுகின்றன.அதற்காகவே நிகழ்நிலை காப்பு சட்டமூலம்,பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளன. நீதிமன்ற கட்டமைப்பில் மீது அரசாங்கம் மறைமுகமாக அழுத்தம் பிரயோகிப்பதை கடந்த கால சம்பங்கள் ஊடாக அறியலாம். அரசியலமைப்புக்கு அமைய செயற்பட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகளை பாராளுமன்ற சிறப்புரிமை மற்றும் ஒழுக்கவியல் குழுவுக்கு அழைப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகளை ஒரு எடுத்துக்காட்டாக குறிப்பிடலாம்.

பொலிஸ்மா அதிபர் நியமன விவகாரத்தில் அரசியலமைப்பு பேரவையை நிறைவேற்றுத்துறை ‘வாயை மூடு’ என்று குறிப்பிட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. தற்போதைய பொலிஸ்மா அதிபருக்கு சேவைகால நீடிப்பு வழங்க ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட பரிந்துரையை அரசியலமைப்பு பேரவை நிராகரித்தது. ஆனால் ஜனாதிபதி அரசியலமைப்பு பேரவையின் தீர்மானத்தை புறக்கணித்து தன்னிச்சையான முறையில் பொலிஸ்மா அதிபருக்கு நான்காவது தடவையாகவும் சேவை நீடிப்பு வழங்கியுள்ளார். உத்தேச நிகழ்நிலை காப்பு சட்டமூலத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 45 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணைகள் நிறைவுப் பெற்றுள்ளன. உயர்நீதிமன்றம் இன்று தனது வியாக்கியானத்தை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

நீதிமன்றத்தின் மீது மாத்திரம் நம்பிக்கை கொள்வது தவறானதாகும்.சகல பிரச்சினைகளுக்கும் நீதிமன்றம் மாத்திரம் தீர்வாக அமையாது. அரசாங்கத்தினால் தயாரிக்கப்படும் சட்டமூலங்கள் அரசியலமைப்புக்கு முரணா அல்லது முரணற்றதா என்பதை மாத்திரமே நீதிமன்றம் ஆராயும். நீதிமன்ற செயற்பாடுகளுக்கு அப்பாற்பட்ட செயற்பாடுகள் குறித்து அவதானம் செலுத்த வேண்டும். கருத்து வெளிப்படுத்தல் மற்றும் கருத்து சுதந்திரம் என்பனவற்றின் முக்கியத்துவத்தை நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.
பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்திய நிகழ்நிலை காப்பு சட்டமூலம்,உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தினால் எதிர்காலத்தில் ஏற்படும் விளைவுகள் குறித்து 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் அவதானம் செலுத்த வேண்டும். இந்த நாட்டில் போராட்டம்,ஊடக அடக்குமுறை என்பது புதியதல்ல,

நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக உருவாக்கப்படும் சட்டமூலங்களுக்கு கையுயர்த்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இயற்றப்படும் சட்டங்கள் என்றாவதொரு நாள் தமக்கு எதிரானதாக அமையும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இன்று ஆளும் தரப்பில் உள்ளவர்கள் எதிர்காலத்தில் எதிர்க்கட்சிக்கு செல்லவாம் என்பதை மறந்து விடகூடாது. வாயை மூடும் சட்டமூலங்களுக்கு ஒட்டுமொத்த மக்களும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். நிகழ்நிலை காப்பு சட்டமூலம்,பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் என்பனவற்றை அரசாங்கம் மீளப்பெறும் அளவுக்கு மக்கள் போராட்டத்தை ஒன்றிணைக்க வேண்டும்.அதற்கு சட்டத்தரணிகள் கூட்டிணைவு என்ற அடிப்படையில் ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வில்பத்து காடழிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் நம்பிக்கை கொண்டுள்ளோம் – ரிஷாட்

வாழைப்பழங்கள் விலை அதிகரிப்பு

“நஜீப் ஏ.மஜீதின் மறைவுக்கு ரிஷாட் அனுதாபம்!