சூடான செய்திகள் 1

பயங்கரவாத இயக்கத்தைத் தடை செய்து கயவர்களை பூண்டோடு அழியுங்கள் – அமைச்சர் ரிஷாட் சபையில் கோரிக்கை

(UTV|COLOMBO) கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் திருநாளன்று தேவாலயங்களிலும், பிரபல ஹோட்டல்களிலும் மிலேச்சத்தனமான தாக்குதல்களை நடாத்தி அப்பாவி மக்களின் உயிர்களைப் பறித்தும், காயப்படுத்தியும் இந்த நாட்டில் மிக மிக மோசமான ஈனச்செயலைச் செய்த பயங்கரவாத இயக்கத்தை உடனடியாக தடை செய்ய வேண்டுமெனவும் இந்த கயவர் கூட்டத்தை கூட்டத்தை பூண்டோடு அழித்தொழிக்க வேண்டுமெனவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றில் கோரிக்கை விடுத்தார்.

இன்று(24) மாலை பாராளுமன்றத்தில் உரையாற்றிய ரிஷாட் பதியுதீன் மேலும் கூறியதாவது, புனித ஈஸ்டர் தினத்தை கரி நாளாக்கிய இந்த சம்பவத்தை நாங்கள் சிறியதாக எடுத்துக்கொள்ள முடியாது. அதே போன்று இதனை வைத்து யாரும் அரசியல் செய்வார்களாயின் அதை விட கேவலமான ஒன்றாக இருக்க முடியாது.

புலிகள் இயக்கத்தில் தற்கொலைத் தாக்குதலை நடாத்திய கரும்புலிகளுக்கு இதனை செயற்படுத்த சுமார் 20 வருடங்கள் எடுத்தது. ஆனால் இந்த மோசமான கயவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் இவ்வாறான ஒரு ஈனச்செயலை மேற்கொண்டு ஒரே நாளில் இத்தனை அழிவுகளை உண்டு பண்ணியிருக்கின்றன. இதன் மூலம் உயிர்களைப் பலி கொண்டது மாத்திரமன்றி எதிர்கால சந்ததியினரின் வாழ்வை சீரழித்துள்ளனர்.

இவ்வாறான செயலை நினைத்து நினைத்து சுமார் 20 இலட்சம் முஸ்லிம்களும் அவர்களின் வழிகாட்டல் இயக்கமான ஜம்இய்யதுல் உலமாவும் பெரும் கவலை கொண்டிருப்பதுடன் தினமும் வேதனையால் வாடிக்கொண்டிருக்கின்றன.

அது மாத்திரமன்றி இந்த சமூகம் பகிரங்கமாக இந்த செயலை கண்டித்திருக்கின்றது. அது மாத்திரமன்றி இந்த சம்பவத்தின் சூத்திரதாரியான சஹ்ரான் என்பவரினதும் புகைப்படத்தையும் ஆவணங்களையும் பாதுகாப்பு தரப்பினரிடம் சமர்ப்பித்தும் பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுக்காதது குறித்து இன்றும் ஜம்இய்யதுல் உலமாவும், முஸ்லிம் சமூகமும் வேதனையுடன் இருக்கின்றனர். உரிய நடவடிக்கை எடுக்காமை குறித்து எங்களிடமும் கேள்வி கேட்கின்றனர்.

இந்த நாட்டிலே மீண்டும் ஒரு அனர்த்தம் ஏற்படக்கூடாது என்பதில் முஸ்லிம் சமூகம் மிக விழிப்பாக இருக்கின்றது. அது மாத்திரமின்றி இந்த பயங்கரவாதத்தை துடைத்தெறிய முழுமையான ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும். இந்த சபையிலே முன்னாள் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, குமார வெல்கம ஆகியோர் இருக்கின்றனர். கைத்தொழில் வர்த்தக அமைச்சராக தற்போது நான் இருக்கின்றேன். வர்த்தகத் துறை சார்ந்த அமைச்சராக இருக்கின்றவர்களை வர்த்தகர்கள் தமது பிரச்சினைகள் பற்றி கூற வந்து சந்திப்பது வழமை. அவ்வாறான சந்திப்பொன்றில் எடுக்கப்பட்ட புகைப்படமொன்றை வைத்துக் கொண்டு என் மீது சேறு பூசுகின்றார்கள். இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஒருவரின் தந்தை ஒருவரை பாதுகாப்பு தரப்பு தற்போது கைது செய்துள்ளது. வர்த்தகர்களின் சந்திப்பில் கலந்து கொண்ட இவரின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு என்னையும் தொடர்புபடுத்தி பழி சுமத்துகின்றனர். இப்றாஹிம் என்பவர் வர்த்தகர் சங்கத்தின் தலைவராக இருந்தவர், அவரும் அவர் தலைமை தாங்கும் வியாபார சங்க உறுப்பினர்களும் தமது வியாபார பிரச்சினைகள் தொடர்பாக என்னை சந்தித்தனர். அந்த சந்திப்பில் எனது அமைச்சின் அதிகாரிகளும் உடனிருந்தனர். அந்த சந்திப்பின் போதான புகைப்படத்தை வைத்துக்கொண்டு இந்த பயங்கரவாத கூட்டத்தை நான் வழிநடாத்துவதாக கூறுவார்களாயின் அவர்களை விட மிக மோசமான கேவலமான அரசியல்வாதிகள் எங்கும் இருக்க முடியாது. நானும் இதில் சம்பந்தப்பட்டதாக விமல் வீரவன்ச எம் பி யும் இந்த சபையிலே நா கூசாமல் கூறியிருக்கின்றார். இந்த குரூரச் சம்பவம் நடந்ததன் பின்னர் நானும் எனது சமூகமும் சொல்ல முடியாத வேதனையிலிருக்கின்றோம். வெட்கப்படுகின்றோம். கிறிஸ்தவ மக்களிடம் எமது மன்னிப்பைக் கோருகின்றோம். பேராயர் மெல்கம் ரஞ்ஜித்தை சந்தித்து எமது அனுதாபத்தையும் வேதனையையும் தெரிவித்து மன்னிப்புக் கோரினோம்.

பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும், அழிக்கப்பட வேண்டுமென சிந்திக்கின்ற செயற்படுகின்ற, தயாராக இருக்கின்ற எங்களைப்போன்ற அரசியல்வாதிகளை இந்த பயங்கரவாதிகளுடன் சம்பந்தப்படுத்தி அவர்களுக்கு உற்சாகப்படுத்த வேண்டாமெனவும், உதவி செய்ய வேண்டாமெனவும் நான் விநயமாகவும் கேட்கின்றேன். ஏனைய பயங்கரவாதிகள் போன்று இவர்களை சாதாரணமானவர்களாக நினத்து எங்களுடன் முடிச்சுப் போட வேண்டாமெனவும், நாட்டை குட்டிச்சுவராக்க வேண்டாமெனவும் பணிவாகக் கேட்கின்றேன்.

பயங்கரவாதத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு கடல் வழியாக வந்த ஒரு இலட்சம் அகதிகளில் நானும் அடங்குபவன், அவர்களுடன் அகதி முகாமில் வாழ்ந்தவன், அதிலிருந்து அரசியலை ஆரம்பித்தவன். நாடு இருந்தால் தான் அரசியல் செய்ய முடியும். நாளைய எமது எதிர்கால சந்ததியினரை வழிகாட்ட முடியும். எனவே நாம் எல்லோரும் ஒன்றுபட்டு இந்த கயவர்களை அழிக்கவும், பயங்கரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை எடுப்போம்.

அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் சில நாடுகளில் நடந்த சம்பவங்கள் இப்போது இலங்கையில் தலையெடுத்துள்ளது.

வணாத்தவில்லுவில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வந்தன, அதனுடன் தொடர்புபட்டவர்கள் கைது செய்யப்பட்ட போதும் அவர்களை விடுவிக்க செய்ய அரசியல்வாதிகள் பேசியதாகச் சொல்லப்பட்டது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவிடம் நான் பகிரங்கமாக கோரிக்கை விடுக்கின்றேன். இது தொடர்பில் இந்த சபையில் நீங்கள் உறுதி செய்ய வேண்டும். வணாத்தவில்லுவில் கைது செய்யப்பட்டவரை விடுவியுங்கள் என்று பொலிசாருக்கோ, அரசியல் தலைமைகளுக்கோ எந்த அரசியல்வாதி பேசியது என்று இந்த சபையில் தெரியப்படுத்த வேண்டும். அல்லது அதன் உண்மைத்தன்மையை வெளிப்படுத்த வேண்டும். யாராவது பேசியிருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை விடுத்து இல்லாத பொல்லாத விடயங்களைக் கூறி இந்த சபையையும் நாட்டு மக்களையும் திசை திருப்ப வேண்டாமென கேட்கின்றேன்.

அது மாத்திரமன்றி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுடன் இணைந்து பேராயர் மெல்கம் ரஞ்ஜித்தை சந்தித்து எமது வேதனையை வெளிப்படுத்தினோம், ஜம்இய்யதுல் உலமா பல ஊடக சந்திப்புக்களை நடத்தியது. எனினும் ஊடகங்கள் அவற்றை சரிவர வெளிப்படுத்தவில்லை. சில ஊடகங்கள் மிக மோசமாக நடந்துகொள்கின்றன எனவும் தெரிவித்தார்.

 

 

-ஊடகப்பிரிவு-

 

 

 

 

Related posts

கொரோனா வைரஸ் – குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

விடைத்தாள் திருத்தும் பணி – 27 பாடசாலைகளுக்கு பூட்டு

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இறுதி நாள் இன்று