உள்நாடு

பணம் பெற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் : நடவடிக்கை என்கிறது SJB

வரி மற்றும் வேறு வழிகள் மூலம் அரசாங்கம் ஈட்டிய பரவலாக்கப்பட்ட நிதியை மக்கள் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தின் மூலமாகப் பெற்று தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் செலவிட முடியாது என சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

பரவலாக்கப்பட்ட முன்மொழிவுகள் எனத் தெரிவித்து குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மாத்திரம் பணத்தை பெற்றுக்கொண்டமை தவறு எனவும் அந்தத் தொகையை பெற்றுக்கொண்ட கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் காலங்களில் இது தொடர்பாக நிச்சயமாக கலந்துரையாடவுள்ளதாகவும் ரஞ்சித் மத்தும பண்டார சிங்கள பத்திரிகையொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.நாடாளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்டபிரேரணைகள் மற்றும் அவற்றை முன்வைத்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் ஆராய உள்ளதாகவும் மற்றும் தற்போது அந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பணம் கிடைக்கப்பட்டுள்ளதா? என ஆராயவுள்ளதாகவும் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்தார்.

ரணிலின் விசேட பணிப்புரை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விசேட பணிப்புரையின் கீழ், ஐக்கிய மக்கள் சக்தியின் ஆறு உறுப்பினர்களுக்கு 32 கோடி ரூபாவிற்கும் அதிகமான அபிவிருத்தி பணிகளுக்காக பரவலாக்கப்பட்ட முன்மொழிவுகள் வழங்கப்பட்டுள்ளதாக அண்மையில் பல ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவிடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்து அவர்களுடைய தனிப்பட்ட பிரேரணைகளுக்கு இலஞ்சமாக பணம் வழங்கியுள்ளதாகவும் இந்த ஏற்பாடுகள் தமது கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா? என்பது தொடர்பில் ஆராயவுள்ளதாகவும் தெரிவித்தார்.

ரணில் வழங்கும் நிவாரணம்

ரணில் நாட்டை வங்குரோத்தடையச் செய்ததாகவும் அரசியலில் தன்னுடைய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தம் பக்கம் ஈர்க்க ரணிலுக்கு இடமளிக்க மாட்டோம் எனவும் தெரிவித்தார்.தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பலவாறான நிவாரணம் மற்றும் சலுகைகளை வழங்கி ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள தற்போதைய அரசாங்கம் முயற்சித்து வருவதாகவும் அது அசாதாரணமான ஒரு விடயம் எனவும் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

பரவலாக்கப்பட்ட நிதி என்பது அனைத்து உறுப்பினர்களுக்கும் என்பதோடு தேர்வு செய்த உறுப்பினர்களுக்கு மட்டும் வழங்குவதற்காக அல்ல.அதன்படி, இந்த பணத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக் கொண்டிருப்பின் கட்சி எனும் விதத்தில் அவர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை இப்போதே யோசித்து வருகிறோம்.

பரவலாக்கப்பட்ட நிதி

பரவலாக்கப்பட்ட நிதி என்பது பொதுமக்களுடைய பணம் என்பதால் அதனை உபயோகித்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் வெவ்வேறான திட்டங்களுக்குத் தம்முடைய பெயர்களை பயன்னடுத்தி பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்வதை ஒரு போதும் ஏற்க முடியாது.விசேடமாக தாம் அன்று தொடக்கம் பரவலாக்கப்பட்ட நிதியை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கும் செயற்திட்டத்தை ஏற்கவில்லை.இந்த நிதியை ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் வழங்குமேயானால் அனைவருக்கும் வழங்க வேண்டும்.

இதற்கு முன் இருந்த ஜனாதிபதிகள் மூலம் பெரும் தொகையான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கபட்டாலும் இம்முறை தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாத்திரமே வழங்கபட்டுள்ளது. என தெரிவித்தார்.இந்நிலையில், 2024ஆம் ஆண்டுக்கான பரவலாக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் பிராந்திய அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு மேலதிகமாக, நேரடியாக சமர்ப்பிக்கப்பட்ட அபிவிருத்தி திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை வெளியிடுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

நிவாரணம் பெற்ற ஐக்கிய மக்கள் சக்தி

இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட 85 திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்காக வழங்கப்பட்ட தொகை ஐந்து கோடி ரூபாவாகும்.மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி சமர்ப்பித்த 89 திட்டங்களுக்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட தொகை எட்டு கோடி ரூபாவாகும்.அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மானின் 708 திட்டங்களுக்கு பத்து கோடி ரூபாவை விடுவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட சபை உறுப்பினர் அஜித் மான்னப்பெருமவின் 85 திட்டங்களுக்காக விடுவிக்கப்பட்ட தொகை ஐந்து கோடி ரூபாவாகும்.ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட சபை உறுப்பினர் கலாநிதி காவிந்த ஹேஷான் ஜயவர்தனவின் 34 திட்டங்களுக்கு விடுவிக்கப்பட்ட தொகை ஏழு கோடி ரூபாய். ஐக்கிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட சபை உறுப்பினர் கயந்த கருணாதிலக்கவின் 25 திட்டங்களுக்கு விடுவிக்கப்பட்ட தொகை ஐந்து கோடி ரூபாவாகும்.

 

Related posts

தவணைப் பரீட்சைகளை திட்டமிட்டபடி நடத்த திட்டம்

இடைநிறுத்தப்பட்ட கடவுச்சீட்டு வழங்கும் வழமையான சேவை இன்று முதல் வழமைக்கு

உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை